எழுத்தாளர் கோணங்கி மீதான அவரது இளம்வயது ஆண் நண்பர்களின் பாலியல் குற்றச்சாட்டுதான் இலக்கிய உலகில் இப்போது ஹாட் டாபிக். கோணங்கி மீது மட்டுமல்லாமல் ‘மணல்வீடு’ சிற்றிதழ் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. முதலில் ஒருவர் சொல்வதற்காக காத்திருந்ததுபோல், சருகில் பற்றிய தீயாக பலரும் சொல்ல இதனால் சமூக வலைதளங்களில் மீண்டும் ‘மீ டூ’ பேசுபொருளாகியுள்ளது.
கோணங்கி மீதான குற்றச்சாட்டு என்ன? அதற்கு அவரது பதில் என்ன? இது குறித்து கோணங்கியின் எழுத்தாள நண்பர்கள் கருத்து என்ன?
ஒவ்வொன்றாக பார்ப்போம்…
தொடர் பாலியல் புகார்கள்
முதலில், 28-02-23 அன்று கார்த்திக் ராமச்சந்திரன் என்பவர் ஃபேஸ்புக்கில் கோணங்கி மீது பாலியல் குற்றாசாட்டுடன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், “மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் மாணவனான என்னை பேராசிரியர் மணல்மகுடி நாடக குழுவிடம் அறிமுகப்படுத்தினார். 2013இல் குழுவில் இணைந்தேன். பதின்மவயது பையனான நான் குடும்பம், பள்ளி மற்றும் கல்லூரி நட்புவட்டம் தாண்டி சந்திக்கும் நபர்கள் இவர்கள். குழுவில் சேர்ந்த சில வாரங்களில் சர்வதேச நாடக விழாவிற்காக புது டில்லி பயணம் மற்றும் கோணங்கி அறிமுகம் என வாழ்வு கனவுபோல் இருந்தது.
கோணங்கி தனிப்பட்ட முறையில் தட்டச்சு செய்ய வேண்டும் என்று அழைத்து, பாலியல் சீண்டல்களை செய்துக் கொண்டிருந்தார். கோணங்கியையும் பூபதியையும் God Father போல நினைத்துக் கொண்டிருந்த பதின்மவயது பையனான எனக்கு பாலியல் சுரண்டல் பற்றி விழிப்புணர்வு இல்லை.
இதன் பின்னர் கோணங்கியின் போன் அழைப்பு வந்தால் பதற்றமும் பயமும் வரும். பாலியல் சுரண்டலை தவிர்க்கும் பொருட்டு கோணங்கியின் போன் அழைப்புகளை தவிர்ப்பேன். அப்போதெல்லாம், பூபதி அழைத்து, “கோணங்கிக்கு உதவி தேவை நீ உடனே அண்ணனை பார் என அணையிடுவார்.”பூபதியின் வார்த்தைகளை தட்டஇயலாமல் உடன் நண்பர்களை அழைத்தச் சென்று சூழலை சமாளிக்க திட்டமிடுவேன். அதற்கும் கோணங்கி கண்டிப்பார். “இவ்வாறு தான் மௌனியும் நகுலனும் தனக்கு இலக்கியம் படைக்கும் ஆற்றலை வழங்கினார்கள் உனக்கும் அது கிடைக்கும்” என்பார். அதாவது ஆண்குறி வழியாக இலக்கிய படைப்பாற்றல் தலைமுறை தலைமுறையாக கைமாறுகின்றது என்கிறார்” என்று கூறியிருந்தார்.
இந்த பதிவு இலக்கிய உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கார்த்திக் ராமச்சந்திரனை தொடர்ந்து 10க்கும் மேற்பட்டோர் கோணங்கி மீதி பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவிட்டார்கள்.
ஷியாம் சுந்தர் வேல் என்பவர் வெளியிட்டு இருந்த பதிவில், ‘2018இல் நண்பன் அரவிந்தனின் (கோணங்கி தம்பி மகன்) வீடு என்ற முறையிலேயே கோவில்பட்டிக்குச் சென்றேன். கோணங்கி, “உனக்கும் நா பெரியப்பா தான்டா” என்று சொல்லி, தனது எழுத்து வேலைகளுக்குத் தட்டச்சு செய்யவேண்டும் என்று உதவிக் கேட்டார். அந்தச் சந்திப்பிலிருந்து 2019 பிப்ரவரி மாதம் வரையில், வெவ்வேறு சூழ்நிலைகளில் கோணங்கியின் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகினேன். அவை அனைத்தும் ஆள் பார்த்து – திட்டுமிட்டு கோணங்கியால் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல்கள்’ என்று கூறியுள்ளார்.
இதனை கோணங்கியின் தம்பி மகன் அரவிந்தன் ஒப்புக்கொண்டுள்ளதுடன் தான் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்பேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறுக்கும் கோணங்கி
இது தொடர்பாக கோணங்கியில் பதில் தெரிய அவருடன் பேசினோம். “என் மீது ஒரு குழு திட்டமிட்டு நடத்தும் சதி இது. இவர்களை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். ‘மணல் மகுடி’ நாடகக் குழு ஓரிரு மாதங்களில் வெள்ளி விழாவைக் கொண்டாடவிருக்கிறது. இந்தியா முழுவதுமிருந்து கலைஞர்கள் வரவிருக்கிறார்கள். இதனைக் கெடுக்கும் நோக்கத்தில்தான் அவதூறுகளைப் பரப்பி மணல் மகுடியையும் என்னையும் அழிக்க நினைக்கிறார்கள்” என்றார்.
எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
கோணங்கியுடன் ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், கவிஞர்கள் பெருந்தேவி, இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சாரு நிவேதிதா உட்பட பலரும் இது தொடர்பாக கோணங்கிக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், “கோணங்கியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் அவர்கள் பக்கம் நிற்கிறேன். கோணங்கி மற்றும் மணல்மகுடி நாடகக்குழுவை நடத்தும் முருகபூபதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
கோணங்கியின் அண்ணனும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் முன்னாள் தலைவருமான ச. தமிழ்ச்செல்வனும், “பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கிறேன்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் வேறு சில எழுத்தாளர்கள் இதனை மறுத்துள்ளார்கள். கோணங்கி கூறுவது போல் அவர் மீதும் மணல்மகுடி நாடகக் குழு மீதுமான காழ்ப்புணர்ச்சியால் இந்த குற்றசாட்டுகள் சொல்லப்படுகின்றன என்பது அவர்கள் வாதம்.
எழுத்தாளர் ஜெயமோகன், “கோணங்கி முப்பதாண்டுகளுக்கு முன்பு எனக்கு வேண்டியவராக இருந்தார். அவருடன் பயணம் செய்துள்ளேன். அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்ட இயல்பின் எந்த ஒரு சான்றும் அவரிடம் நான் கண்டதில்லை. நேற்று காலைவரை எவரும் என்னிடம் ஒரு சொல்கூடச் சொன்னதில்லை. பவா செல்லத்துரையிடம் பேசினேன். அவருக்கும் ஒன்றும் தெரியாது. அவரும் அதிர்ந்து போயிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, “கோணங்கி மேல் இளைஞர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மை என்றால் வலுவான பொதுச்சமூகக் கண்டனத்திற்குரியது. முதிரா இளைஞர்களிடம் அவர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தால் அது சட்டப்படி குற்றமும் கூட. ஆகவே ஒரு சமூக உறுப்பினராக அச்செயலை கண்டிக்கிறேன். இளைஞர்கள் இனிமேல் அவரிடம் கவனமாக இருக்கலாம்.
கோணங்கி பொதுவில் மன்னிப்பு கோரலாம். அல்லது இன்று வந்துள்ள பொதுக்கண்டனமே பெரிய தண்டனைதான். அவர் இதிலிருந்து மீண்டுவரவேண்டும். மீண்டும் அவருக்கு நண்பர்களின் ஆதரவு இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதேநேரம், முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் மௌனியும் நகுலனும் தன்னிடம் அவ்வாறு நடந்து கொண்டதாகவும், அது கலைஞர்களின் வழிமுறை என்றும் கோணங்கி தன்னிடம் சொன்னதாக கார்த்திக் ராமச்சந்திரன் கூறியுள்ளதை ஜெயமோகன் மறுத்துள்ளார். “நகுலனை எனக்கு நன்றாகவே தெரியும். அவர்மேல் அத்தகைய பேச்சு எதுவும் எழுந்ததில்லை. அவருக்கு பாலியல் சார்ந்த மிகத்தீவிரமான உடற்குறைபாடுதான் இருந்தது. நகுலனை கோணங்கி சந்திப்பது 1987இல். அப்போது நகுலனுக்கு வயது 66 வயது. அதற்கு எட்டாண்டுகளுக்கு முன்னரே நகுலனுக்கு நரம்புத் தளர்ச்சியும் நினைவிழப்பும் தொடங்கியிருந்தது.
மௌனியின் குணச்சிக்கல்கள் பற்றி பலரும் எழுதியுள்ளனர். தாசிகளுடனான உறவு, சாராயம் குடிக்கும் வழக்கம், கூடவே சாதி மேட்டிமைத்தனம் ஆகியவை பலரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பாலியல் சார்ந்து இப்படி ஒரு சித்திரம் பதிவானதில்லை.
மேலும் மௌனி 1907இல் பிறந்தவர். கோணங்கி அவரை முதன்முதலில் சந்திப்பது தன் இருபத்தியாறாவது வயதில் ,1984இல். அப்போது மௌனிக்கு 77 வயது. அடுத்த ஆண்டு, 1985இல் மௌனி மறைந்தார்” என்று ஜெயமோகன் கூறியுள்ளார்.
ஜெயமோகன் உட்பட இந்த விவகாரத்தில் கோணங்கியை ஆதரித்துள்ள எழுத்தாளர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கவிஞர் பெருந்தேவி, “இது தொடர்பாக சில பேர் ஆதாரங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் புகார்களில் பொதுவாக ஆதாரத்தை வைத்துக்கொண்டு யாரும் செயல்படுவதில்லை. சட்டரீதியான நடவடிக்கைகள் பல சமயம் சாத்தியப்படுவதில்லை. அதனால்தான் ‘மீ டூ’ என்ற இயக்கமே அவர்களை அம்பலப்படுத்தும் விதத்தில் சமூகப் பொதுவெளியில் நடைமுறைக்கு வந்தது.
ஒருவர், இருவர் இல்லை; பல பேர் இத்தகைய புகார்களை கோணங்கியின் மீது வைத்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட ஒரு பதிவு முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் என்கிறது. பாலியல் புகார்களைப் பொறுத்தவரை, ஒருவரோ பலரோ எதுவாக இருந்தாலும் அவற்றுக்குச் செவிகொடுப்பது சமூகத்தின் கடமை” என்று கூறியுள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ பாடலாசிரியரும் கவிஞருமான இளங்கோ கிருஷ்ணன், “தமிழ் இலக்கியச் சூழலில் கணிசமான ஒரு பால் ஈர்ப்பாளர்கள் உண்டு. என்னால் ஒரு பட்டியலே சொல்ல முடியும். இருபது வருடங்களுக்கு முன்பு என்னிடமும் ஒரு சீனியர் அத்துமீற முயன்றார். நான் உதறிவிட்டு வந்துவிட்டேன். கோணங்கி விவகாரம் எனக்கு அதிர்ச்சி எதுவும் அளிக்கவில்லை. அது முன்பே தெரியும் என்பதுதான் காரணம். ஆனால், அப்யூஸ் என்பது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. கோணங்கிக்கு எனது கண்டனங்கள்” என்று கூறியுள்ளார்.
தமிழில் பாடகி சின்மயி தொடங்கி வைத்த ‘மீடு’ பாலியல் புகார்கள் திரைப்பட உலகில் ஒரு புயலை ஏற்படுத்தி ஓய்ந்திருந்த நிலையில், இப்போது தீவிர இலக்கிய உலகில் சுறாவளியாக சுழலத் தொடங்கியுள்ளது. கோணங்கியைத் தொடர்ந்து இன்னும் யார், யார் பெயர்கள் எல்லாம் வெளிவரப்போகிறதோ என அதிர்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் வாசகர்கள்.