ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை 5 மணி வரை 70.58% வாக்குப் பதிவாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாலை 5 மணி வரை 70.58% வாக்குப் பதிவாகி உள்ளது. இதன்படி 1.34 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். 65,350 ஆண்கள் மற்றும் 69,400 பெண்கள் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
தமிழக அமைச்சரவை மார்ச் 9-ல் கூடுகிறது
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9-ம் தேதி நடக்கிறது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாஅதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் 9-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கைக்கு இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
அக்னிபாத் திட்டம் செல்லும் – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முப்படைகளுக்கும் தற்காலிக அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள், 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்ற முடியும். இவர்களில் 25 சதவீதம் பேர் அவர்களின் தகுதியின் அடிப்படையில் நிரந்தர பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்கள், ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியாது.
அக்னிபாத் திட்டத்தில் பணி நிரந்தரம் இல்லை, ஓய்வூதியம் இல்லை என்பதால் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்தத் திட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சத்தீஸ் சந்திர ஷர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று(பிப். 27) தீர்ப்பு வழங்கப்பட்டது. நாட்டின் நலன் கருதி இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது என்றும், இந்த திட்டம் அரசியல் சாசனப்படி செல்லும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படம் – மத்திய அரசுக்கு கோரிக்கை
சுதந்திர போராட்ட வீரரும், இந்து மகாசபாவின் முன்னாள் தலைவருமான சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றை இந்து மகாசபை எழுதியுள்ளது.
அதில், இந்திய விடுதலை போராட்டத்தில் பெரும் புரட்சிகர போராட்ட வீரராக திகழ்ந்தவர் சாவர்கர். இந்திய ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக சாவர்கர் படத்தை அரசு வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், நாடாளுமன்றத்திற்கு செல்லும் சாலைக்கு சாவர்கரின் பெயரை சூட்ட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதே சாவர்கருக்கு மோடி அரசு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என கடித்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.