No menu items!

பலம் பெற்ற எடப்பாடி – பதறும் கட்சித் தலைவர்கள்

பலம் பெற்ற எடப்பாடி – பதறும் கட்சித் தலைவர்கள்

“முதல்வர் பிரச்சாரத்தை கவர் செய்ய ஈரோடு வந்திருக்கேன். அதான் ஆபீசுக்கு வரலை” என்று காலையிலேயே போன் செய்தாள் ரகசியா.

“ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் பணமழை பெய்யறாங்கன்னு நியூஸ் வந்ததுல இருந்து அடிக்கடி அங்க போறது உனக்கு வாடிக்கையா போச்சு.”

”என்னையே சந்தேகப்படுறீங்களா? இன்னிக்கு நியூஸ் கிடையாது’ என்று போனை வைக்கப் போனவளை கூல் செய்தோம்.

“சரி சரி கோவிச்சுக்காத… இண்டஸ்ட்ரியிலேயே உனக்குதான் ரொம்ப நல்ல பேரு. உன் நியூசுக்குதான் மவுசு. அதிமுக வழக்குல எடப்பாடிக்கு சாதகமா தீர்ப்பு வந்திருக்கே…எலெக்‌ஷன் ரிசல்ட் மாறுமா?”

“அதிமுகவுக்கு கூட கொஞ்சம் ஓட்டு கிடைக்கலாம். அதிமுகவினர் இப்போ தெம்பா ஓட்டுக் கேக்குறாங்க. திமுக தரப்புதான் கொஞ்சம் அப்செட். முதல்வரே இந்த தீர்ப்பு வந்ததும் கட்சி சீனியர்கள்கிட்ட பேசியிருக்கிறாரு. எடப்பாடிக்கு ஒரு பூஸ்ட் கிடைச்சிருக்கு. எலெக்‌ஷன்லயும் பூஸ்ட் கிடைச்சிறக் கூடாதுனு சொல்லியிருக்கார்.”

“முதல்வருக்கு என்ன திடீர் கவலை?”

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்கறதுக்கு 3 நாட்களே இருக்கும்போது இந்த தீர்ப்பு வந்திருக்கறதுதான் முதல்வரை யோசிக்க வச்சிருக்கு. எத்தனையோ வழக்குகள் இன்னும் முடியாம இருக்கும்போது இந்த தீர்ப்பு தேர்தல் சூழல்ல வந்திருக்கிறது அவருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்துருக்கு. இடைத்தேர்தல் நேரத்துல தீர்ப்பு வந்ததுல பாஜகவுக்கு ஏதாவது ரோல் இருக்குமான்னும் யோசிக்கறார்”

“கரெக்ட்தான்..கட்சித் தலைவரா இருந்தா எல்லா ஆங்கிள்லயும் சிந்திக்கணும்ல”

“இந்தத் தீர்ப்பு கூட்டணி மாற்றங்களையும் கொண்டு வரும்னு செய்தி இருக்கு”

“என்ன மாற்றம்?”

“தீர்ப்பு வந்த சில மணி நேரங்கள்லேயே விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி இப்போது பொதுச் செயலாளராக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். இது அவரது வலுவான ஆளுமைக்கு சான்று’ன்னு பாராட்டிட்டு , ‘இதை பாரதிய ஜனதாவை சுமப்பதற்கு பயன்படுத்தினால் இங்கே யாவும் பாழ்’ என்றும் சொல்லி இருக்கிறார். அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்தவையே அமைதி காக்கும்போது திருமாவளவன் எதுக்காக பாராட்டணும்னு திமுககாரங்க யோசிக்கிறாங்க”

“ஏன் அப்படி சொன்னேன்னு திருமா விளக்கமும் கொடுத்திருக்கிறாரே?”

“ஆமாம். நானும் பார்த்தேன். அதில இன்னொரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறார் கவனிச்சிங்களா? பாஜக, பாமக இருக்கிற இடத்தில் விசிக இருக்காதுன்னு சொல்லியிருக்கிறார். இது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மறைமுக சிக்னல்னு பார்க்கணும். ஏன்னா திமுக கூட்டணிக்கு பாமக வருகிதுன்னு ஒரு செய்தி இருக்கு. அப்படி பாமக வரும் பட்சத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாவிட்டால் அந்த இடத்துக்கு விசிக போய்விடும், இதுதான் திருமா மறைமுகமா சொல்லியிருப்பது”

“பாஜகவை அதிமுக விட்டுவிடுமா? அதற்கான வாய்ப்பு இருக்குதா?”

“நேற்று செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி பற்றி பேசலாம்…இப்போது இந்தக் கூட்டணி தொடர்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை கவனிச்சீங்களா?… பாஜகவை கழற்றிவிட அவர் நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்”

”திருமா வாழ்த்தை திமுகவினர் எப்படி பார்க்கிறார்கள்?”

“ரசிக்கலை. முக்கியமாய் எடப்பாடியை ஆளுமை என்று குறிப்பிட்டது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அது மட்டுமில்லாமல் இடைக்கால பொதுச் செயலாளராகதான் இன்னும் இருக்கிறார். புதிய பதவி எதுவும் வரவில்லை. அதற்குள் எதற்கு வாழ்த்துன்னு அறிவாலயத்தில் முணுமுணுக்கிறாங்க. திருமாவின் இந்த வாழ்த்து கூட்டணி கதவுகளை மூடுவதற்கு ஒரு காரணமாக அமையலாம்”

“திருமாவளவனை காயத்ரி ரகுராம் சந்தித்திருக்கிறாரே? விசிகவில் சேரப் போறாரா?”

“அதுக்கு வாய்ப்பு இருக்கறதா சொல்றாங்க. ஆனா உடனடியா இல்லை.”

“விடுதலை சிறுத்தைகளுக்கும் காயத்ரி ரகுராமுக்கும் ஒரு காலத்தில் பெரிய சண்டையெல்லாம் நடந்திருக்கே?”

“நீங்களே சொல்கிறீர்கள், ஒரு காலத்தில் என்று. அதெல்லாம் மறக்கப்படும். சந்திப்பின்போது ‘உலக வரலாற்றில் பெண்கள்’ என்ற புத்தகத்தை காயத்ரி ரகுராமுக்கு திருமா கொடுத்திருக்கிறார். இப்போதைக்கு பாஜகவுக்கு எதிரி விசிகவுக்கு நண்பன் என்ற அடிப்படையில்தான் அரசியல் போய்க் கொண்டிருக்கிறது”

“ஜெயலலிதா 75வது பிறந்த நாளுக்கு 75 கிலோ கேக்கை வெட்டியிருக்கிறாரே எடப்பாடி. உற்சாகமாய் இருக்கிறார் போல?”

“அவர் உற்சாகத்துக்கு என்ன குறைச்சல்! இரட்டை இலை சின்னம் இனியும் கிடைக்குமாங்கிற சந்தேகத்தால் சில முன்னாள் அமைச்சர்கள் பாஜகவுடன் நெருக்கம் காட்டிட்டு வந்தாங்க. . தேவைப்பட்டால் கட்சி மாறவும் தயாரா இருந்தாங்க. ஆனால் இப்ப வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கு. அதனால் ஊசலாட்டத்தில் இருந்தவங்க திரும்பவும் எடப்பாடியை நெருங்க போட்டி போடுறாங்க. அவர் மேல இருக்கும் நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது”

“அப்படின்னா இனி அதிரடி காட்டுவாரோ?”

“அவர் நடத்தையைப் பார்த்தால் அப்படித்தான் தெரியுது. அதிமுகவை டெல்லிதான் இயக்குதுங்கிற இமேஜை முதலில் உடைக்கணும். நாம் இனி அதுக்கான வேலையில் ஈடுபடணும்னு ஆதரவாளர்கள்கிட்ட பேசியிருக்கிறார் எடப்பாடி”

“அப்படின்னா இந்த தீர்ப்பால் பாஜகவுக்கு அடின்னு சொல்.”

“கிட்டத்தட்ட அப்படித்தான்னு கமலாலயத்தில பேசிக்கறாங்க. குறிப்பா அண்ணாமலைக்கு எதிர்கோஷ்டியாக செயல்படறவங்க இதை பெரிய பின்னடைவா பார்க்கிறாங்க. ‘நாம்தான் திமுகவுக்கு மாற்று ஆக்கபூர்வமான எதிர்கட்சி பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் 25 இடங்களில் வெற்றி பெறும் அவர்களில் ஐந்து பேர் அமைச்சர்கள்’ன்னு அண்ணாமலை சொல்லிக்கிட்டு இருக்கார். ஆனால் கட்சியை முன்னிலைப்படுத்தறதை விட தன்னை முன்னிலைப்படுத்தறதுல முக்கிய கவனம் செலுத்தறார். இதனால எடப்பாடி முந்த ஆரம்பிச்சுட்டார்னு சத்தமாவே பேசுறாங்க”

“கட்சின்னா கோஷ்டிகள் இருக்கத்தானே செய்யும்?”

“மத்த கட்சிகளைவிட இதுல பாமகவும், தேமுதிகவும்தான் இதுல அதிகமா பாதிக்கப்பட்டிருக்கு. எடப்பாடி – பாஜக உறவு சுமூகமா இல்லை. இரட்டை இலை சின்னம் முடக்கப்படுங்கிற செய்திகளை அடிப்படையா வச்சுத்தான் இந்த 2 கட்சிகளும் எடப்பாடிகிட்ட இருந்து விலகினாங்க. இப்ப எடப்பாடி ஸ்டிராங்க் ஆகிட்டதால இந்த இரண்டு கட்சி தலைவர்களுக்கும் சங்கடமாயிடுச்சு. தப்பு செஞ்சுட்டோமோன்னு யோசிக்கறாங்க. அதோட இந்த தீர்ப்பை பத்தி இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன்.”

“என்ன விஷயம்?”

“கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் நீதிபதியோட மூளைதான் இதுக்கு காரணம். அவர்தான் இடைக்கால மனுவை தாக்கல் செய்ய முன்ன ஆலோசனை சொன்னார் அந்த மனுவோட விளைவா அப்ப ஒரு தீர்ப்பும், அதை ஒட்டி இப்போதைய தீர்ப்பும் வந்திருக்குன்னு பேசிக்கறாங்க”

“கொங்கு மண்டலக்காரங்களாம் ஒண்ணு சேருறாங்க போல”

“அப்ப மத்த மண்டலக்காரங்களாம் ஒண்ணு சேருவாங்கல!”

“கரெக்ட். பாலிடிக்ஸ் கோயிங் டு பி இண்ட்ரஸ்டிங்” என்று சிரித்துக் கொண்டே போனை கட் செய்தாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...