உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடி இன்னும் 2 வாரங்கள்கூட முடியவில்லை. உலகமே காதல் மயமானது என்பதைபோல் பல தொலைக்காட்சிகளில் அன்றைய தினம் காதலை ஆதரித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. ஒருசில கடைகளிலும், ஓட்டல்களிலும் காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளைக்கூட வழங்கின.
இதையெல்லாம் பார்த்து, இந்த உலகமே காதலை ஆதரித்துக்கொண்டு இருப்பதாக நீங்கள் கணக்குப் போட்டால் தவறு. இந்த 21-ம் நூற்றாண்டிலும் காதல் ஜோடிகள் கடுமையான சவால்களை சந்திக்கவேண்டி இருக்கிறது. அப்படி ஒரு சாவாலைத்தான் இப்போது முலாயம் சிங் – இர்கா ஜீவானி ஜோடி சந்தித்துக் கொண்டிருக்கிறது. காதல் காரணமாக இந்த இருவரில் ஒருவர் தற்போது சிறையில் அடைக்கப்பட மற்றவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். இப்படி தண்டிக்கப்படுவதற்கு இந்த காதல் ஜோடி செய்த ஒரே தவறு எல்லையைத் தாண்டி காதலித்ததுதான்.
இந்த இருவரில் முலாயம் சிங் இந்தியாவைச் சேர்ந்தவர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். வேலை நேரத்தில் போரடிக்காமல் இருக்க ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவது இவரது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவால் உலகம் முடங்கிக் கிடக்க, அலுவலகத்தில் தனி ஆளாய் பாதுகாப்பு வேலையில் ஈடுபட்டிருந்த முலாயம் சிங்குக்கு, ஆன்லைனில் லூடோ விளையாடுவதுதான் ஒரே பொழுதுபோக்காக இருந்தது.
லூடோ விளையாட்டை நாம் தனியாகவும் ஆடலாம்… முகம் தெரியாத நபருடன் ஆன்லைனில் தொடர்புகொண்டும் ஆடலாம். இதில் முலாயம் சிங் இரண்டாவது முறையை தேர்ந்தெடுத்துள்ளார். முகம் தெரியாத நண்பர்களுடன் ஆன்லைனில் லூடோ விளையாடியுள்ளார். அப்போது அவருக்கு அறிமுகம் ஆனவர்தான் இர்கா ஜீவானி. பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத்தைச் சேர்ந்த இவர் கல்லூரி மாணவி. முலாயம் சிங்குடன் லூடோ விளையாடிய நேரத்தில் இருவரும் பொழுதுபோக்காக சாட்டிங் செய்ய, அது காதலாக மாறியிருக்கிறது.
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். திருமணத்துக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவான நேபாளம். அங்குள்ள ஒரு கோயிலில் இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு தான் வேலை பார்க்கும் பெங்களூருவுக்கு இர்கா ஜிவானியைக் கொண்டுவந்துள்ளார் முலாயம் சிங். இதற்காக இர்கா ஜிவானியின் பெயரில் போலி ஆதார் அட்டையை தயாரித்துள்ளார்.
பெங்களூருவில் செட்டிலான இந்த ஜோடிக்கு ஆரம்பத்தில் எந்த சிக்கலும் இல்லை. தினமும் முலாயம் சிங் வேலைக்குப் போக, இர்கா ஜிவானி வீட்டில் இருந்துள்ளார். இப்படி சுமுகமான போன அவர்களின் வாழ்க்கையில் தாய்ப்பாசம் குறுக்கிட்டது. தனது போனில் உள்ள வாட்ஸ் அப் செயலி மூலம் பாகிஸ்தானில் உள்ள தனது தாயாருடன் பேசி வந்துள்ளார் இர்கா. ஒரு கட்டத்தில் உளவுத் துறை இதை மோப்பம் பிடித்துள்ளது. தினமும் பெங்களூருவில் இருந்து பாகிஸ்தானில் உள்ள குறிப்பிட்ட இடத்துக்கு தொலைபேசி அழைப்பு போக, இர்கா யார் என்ற விசாரணையில் இறங்கியுள்ளது உளவுத் துறை.
இந்த விசாரணையில், அவர்களின் காதல் கதையும், போலி ஆதார் கார்டு மூலம் இர்கா இந்தியாவில் இருப்பதும் தெரியவந்துள்ளது. உடனே போலி ஆவணங்கள் தயாரித்து வெளிநாட்டு பிரஜையை இந்தியாவில் தங்கவைத்த குற்றத்துக்காக முலாயம் சிங் கைது செய்யப்பட்டார். இர்கா ஜிவானி, பாகிஸ்தானுக்கே நாடு கடத்தப்பட்டுள்ளார்.
ஒருவர் சிறையிலும், மற்றவர் வேரு நாட்டிலும் இருக்க முலாயம் சிங்கின் குடும்பம் மட்டும் அந்த ஜோடிக்கு ஆதரவாக போராடிக்கொண்டு இருக்கிறது. “எந்த நாடு எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் என் மகனின் மனைவி எங்களுக்கு மருமகள். அவளை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கையை எடுப்போம்” என்கிறார்கள் முலாயம் சிங்கின் பெற்றோர்.