No menu items!

வட இந்திய தொழிலாளர்கள் – அச்சமா? அரசியலா?

வட இந்திய தொழிலாளர்கள் – அச்சமா? அரசியலா?

வட இந்தியர்களை தமிழ்நாட்டில் தாக்குகிறார்கள் என்பது இப்போது சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கும் செய்தி.

இதற்கு அடிப்படையாக இருந்தது சமூக ஊடகங்களில் பரவிய ஒரு காணொலி. அந்தக் காணொலியில் ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருக்கும் தமிழர் ஒருவர் வடக்கத்தி தொழிலாளரை தாக்குகிறார், திட்டுகிறார். இந்த வீடியோ இன்றைய மக்களின் செய்தி ஊடகங்களாக இருக்கும் வொட்சப், ட்விட்டர், ஃபேஸ்புக் என சகல சந்துகளிலும் பரப்பப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு சில தினங்கள் முன்பு கோவையில் ஒரு கல்லூரி காண்டீனில் வட இந்திய பணியாளர்களுக்கும் அங்கிருந்த மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த வீடியோவும் வைரல்.

பொதுவாய் இது போன்ற வீடியோக்களை அதிகம் பரப்புபவர்கள் ‘தேச பக்தி’ மிகுந்த வலதுசாரிகள். அவர்களுக்கு இது அரசியல் லாபம் தரும் செய்தி. ’திராவிட மாடல்’ தமிழ்நாட்டில், ’தமிழ் தேசியம்’ பேசும் தமிழ்நாட்டில் வெறுப்பு பேச்சுக்கள், வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துவிட்டன. பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படுகிறது. சக இந்தியனுக்கு தமிழ்நாட்டில் மதிப்பில்லை. தமிழர்களுக்கு தேசிய உணர்வு இல்லை, தேச பக்தி இல்லை …Etc..Etc..

இங்கு பிழைப்புக்கு வரும் வட மாநிலத்தவர்களுக்கும் இங்கு வாழும் மக்களுக்கும் மோதல் என்பது அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள்தாம்.

2020 ஏப்ரல் மாதம் மத்திய அரசின் செய்தி தொடர்பு துறை தந்த தகவலின்படி தமிழ்நாட்டில் 34.97 லட்சம் வெளிமாநில பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 7 லட்சம் பேர் பெண்கள். 27 லட்சம் ஆண்கள். இந்த எண்ணிக்கையைத் தாண்டி தினம் தோறும் ரயில்களிலும் பேருந்துகளிலும் வெளி மாநிலத்தவர் பிழைப்புத் தேடி தமிழ்நாட்டுக்குள் வந்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது – அண்ணாவின் மிகப் பிரபலமான வாசகம். ஐம்பது ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இது மாறியிருக்கிறது, என்பதற்கான அடையாளம்தான் வட மாநிலத்தவர்களின் இந்த வருகை.

சிரமத்தில் இருப்பவர்கள் செழுமையை நோக்கி, வளர்ச்சியை நோக்கி செல்வார்கள் என்பது உலக விதி.

இதற்கு சிறந்த உதாரணம் அமெரிக்கா. இன்று உலகம் முழுவதிலும் இருந்து அமெரிக்காவுக்கு மக்கள் சென்றுக் கொண்டே இருக்கிறார்கள். காரணம் அங்கிருக்கும் வாய்ப்புகள்…வளம்.

இப்படி வெளி மாநிலத்தவர்கள் வருவதால் உள்ளூர் மக்களுக்கு சில அச்சங்கள் ஏற்படும். அது இயல்பு.

முதல் அச்சம் நமது வேலை வாய்ப்பு. வட இந்தியாவிலிருந்து இங்கு வருபவர்கள் யாரும் நம்மை ஆளும் வேலைகளில் சேர்வதில்லை. கல் உடைப்பவர்கள், கட்டட வேலை செய்பவர்கள், சுண்ணாம்பு பூசுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், இயந்திரம் இயக்குபவர்கள், மேஜை துடைப்பவர்கள், பரிமாறுபவர்கள்….இப்படி கீழ் நிலை வேலைகளில் பணிபுரியதான் வருகிறார்கள்.

இவர்களை இங்கு சேர்த்துக் கொள்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இந்த வேலைகளை செய்வதற்கு தமிழ்நாட்டில் ஆட்கள் குறைந்துவிட்டார்கள். நமது இளைஞர்கள் கல்வி கற்றதால் வேறு பல வேலைகளுக்கான வாய்ப்புகள் கிடைத்து கீழ் நிலை வேலைகளிலிருந்து மாறியது வட இந்தியர்களுக்கு வாய்ப்பாக மாறியிருக்கிறது.

இரண்டாவது, வட இந்திய தொழிலாளிகளின் சம்பளம் மிகக் குறைவு, நேரம் பார்க்காமல் வேலை வாங்க முடியும்.

இந்த இரண்டு காரணங்கள்தாம் இங்கு வட இந்திய தொழிலாளர்கள் பெருகுவதற்கு காரணம். இது போன்ற வேலைகள் கூட வட இந்தியாவில் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

நமக்கிருக்கும் இரண்டாவது அச்சம், வட இந்தியர்கள் இங்கு பல்கி பெருகினால் தமிழ்நாட்டின் சமூக பரப்பு மாறிவிடும் என்பது. இன்று 35 லட்சம் இருப்பவர்கள், நாளை ஒரு கோடியாக உயரலாம். அப்படி அவர்கள் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே போனால் தமிழர்களுக்கான அதிகாரம் பறி போய்விடும். வட இந்தியர்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்தத் துவங்கிவிடுவார்கள். நம்முடைய கலாச்சாரம், மொழி, பாரம்பர்யம் எல்லாம் மாறிவிடும் என்ற அச்சம் இருக்கிறது. இன்னும் 25 வருடங்களில் தமிழ்நாட்டின் முக்கிய சக்தியாக வட இந்தியர்கள் மாறிவிடுவார்கள் என்ற எச்சரிக்கை தரப்படுகிறது.

’வந்தேறிகள்’ பிரச்சினை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்று பல நாடுகளில் இருக்கிறது. அவர்களுக்கும் இதே பிரச்சினைதான்.

அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு எதிராக தொடர்ந்து ஏதாவது ஒரு சம்பவம் நடந்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவினால் வெளிநாட்டவர்களை தவிர்க்க இயலவில்லை. விசா கட்டுப்பாடுகளை கொண்டுவந்தாலும் வெளிநாட்டவர்களின் உழைப்பு இல்லாமல் அமெரிக்கா வல்லரசாக இயங்காது என்பதுதான் உண்மை.

கீழ் நிலை வேலைகளை செய்ய அவர்களுக்கு மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த வேலைகளை செய்ய அமெரிக்கர்கள் தயாராக இல்லை.

தமிழ்நாட்டிலேயே கொரோனா பொதுமுடக்கத்தின்போது வெளிமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டனர். அதனால் பொதுமுடக்கம் முடிந்த பின்னும் பணிகளைத் துவக்க முடியாமல் பல தொழிற்சாலைகள் இழப்புகளை சந்தித்தன.

வட இந்திய தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பால் தமிநாட்டு சமூக சூழல் மாறிவிடுமா என்ற கேள்விக்கு இன்றைய நிலையில் வாய்ப்புகள் குறைவு என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

இன்று தமிழ்நாட்டுக்கு வரும் தொழிலாளிகள் தனியாகதான் வருகிறார்கள். குடும்பத்துடன் வருவதில்லை. தனியே தங்கி தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமித்து ஊருக்கு பணத்தை அனுப்புகிறார்கள். குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்து இங்கே குடியேறும் அளவு அவர்கள் சம்பாதிப்பதில்லை. இதுதான் இன்றைய கள நிலவரம். அவர்கள் சாமானிய வேலைகள் செய்யும் வரை அவர்கள் குடும்பம் இங்கே வருவதற்கு வாய்ப்பு கிடையாது. ஆனால் இதே நிலையே நீடிக்கும் என்று உறுதி கூற இயலாது.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இந்திய வம்சாவளியினர் தேர்தல்களில் போட்டியிட்டு அதிகாரமிக்க பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். அது போன்ற நிலை தமிழ்நாட்டுக்கும் ஏற்படலாம். ஆனால் அதற்கு காலமிருக்கிறது.

உதாரணமாய் இந்தியர்கள் 1800ன் இறுதிகளில் 1900 துவக்கத்தில் அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார்கள். அந்தக் காலக் கட்டத்தில் சீக்கியர்கள் அங்கு அதிகமாக சென்றிருக்கிறார்கள்.

அந்த வருடங்களின் அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக உயர்வதற்கு சுமார் 120 வருடங்கள் ஆகியிருக்கின்றன.

அதே போல் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் 250 வருடங்களுக்கு மேலான தொடர்பு இருக்கிறது. ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகுதான் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் இங்கிலாந்தின் பிரதமாராக உயர்ந்திருக்கிறார்.

இந்த சரித்திரங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் சமூகம் மற்றும் அரசியல் சூழல்களை வட இந்தியத் தொழிலாளர்களால் அத்தனை எளிதில் மாற்ற முடியாது என்பது தெரிகிறது.

அதுவரை வட இந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் உழைப்புக்கும் அரசியல் பிழைப்புக்கும் பயன்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...