தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத் துறையை ஒழிப்பதுதான் என் முதல் பணியாக இருக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியுள்ளார். இதற்கு எதிர் தரப்பினர் பதில் என்ன? இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த ‘தோழர்’ ஸ்ரீவித்யா அளித்த பேட்டியின் தொடர்ச்சி…
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
“இந்து சமய அறநிலையத்துறை ஏன் தேவை என்பதற்கு நான் ஒரு சமீப உதாரணம் சொல்கிறேன். சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை; தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தீட்சிதர்கள்தான் அந்த கோயிலில் குருக்களாகவும் இருக்கிறார்கள், கோயில் நிர்வாக கமிட்டியிலும் இருக்கிறார்கள். கமிட்டியில் இருப்பவர்கள் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் 1000 ரூபாய் அபராதம் கட்டச்சொல்லிவிட்டு, மீண்டும் கமிட்டியில் சேர்த்துக்கொள்வார்கள்.
இப்போது அரசாங்கம் சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்கைக் கேட்கிறது. கணக்கு கொடுக்க முடியாது என்று தீட்சிதர்கள் சொல்கிறார்கள். உங்களிடம் அரசாங்கம், நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று கணக்கு கேட்டால் கொடுக்க முடியாமல் இருக்க முடியுமா? ஒரு பிரஜை, உண்மையான தேசபக்தர் அரசாங்கம் கேட்டால் கணக்கு கொடுப்பார்கள்தானே. ஆனால், தீட்சிதர்களால் கொடுக்க முடியாது என்று சொல்ல முடிகிறது.
ஏன் அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள் என்பதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது.
பல நூறு ஆண்டுகளாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இடையே 2009 – 2014 ஐந்து வருடங்கள் மட்டும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. பொதுவாக ஒரு நிர்வாகம் கைமாறும்போது வரவு – செலவு எவ்வளவு, கையிருப்பு எவ்வளவு என கணக்கு கொடுப்போம் இல்லையா? அதுபோல், 2009இல் கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்கும்போது தீட்சிதர்களிடம் அரசாங்கம் கணக்கு கேட்டது. அதற்கு தீட்சிதர்கள் ஒரு கணக்கு கொடுத்தார்கள். ‘கோயிலின் வருட வருமானம் 33 ஆயிரத்து 199 ரூபாய். எல்லா செலவுகளும் போக கையிருப்பு 193 ரூபாய்’ என்பதுதான் அவர்கள் கொடுத்த கணக்கு.
இதுபோல், 2014இல் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்களிடம் திரும்ப ஒப்படைக்கும்போது அரசாங்கம் கொடுத்த கணக்கு என்ன தெரியுமா? அந்த ஐந்து வருடங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கிடைத்த வருமானம், 8 கோடியே 15 லட்சத்து 24 ஆயிரத்து 537 ரூபாய். 17 லட்சம் ரூபாய் ‘பிக்ஸட் டெபாசிட்’, அது தவிர்த்து தங்கம், வைரம் எல்லாமே இருக்கிறது.
தீட்சிதர்கள் கணக்குப்படி இந்த ஐந்து வருடங்களில் 1000 ரூபாய்கூட வந்திருக்காது. 1000 ரூபாய் எங்கே இருக்கிறது, 8 கோடி எங்கே இருக்கிறது?
தீட்சிதர்கள் ஏன் கணக்கு கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறதா? மடியில் கணம் இல்லையென்றால் கணக்கு கொடுத்துவிடலாமே. கணக்கு கொடுக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் தப்பு நடக்கிறது என கோஷம் போடும் ‘இந்து ஆலய மீட்புக்குழு’, கணக்கு கொடுக்க மறுக்கும் தீட்சிதர்களுக்கு எதிராக ஏன் வாயே திறப்பதில்லை?
இந்து சமய அறநிலையத்துறை சரியாக இருக்கிறதா இல்லையா? ஏன் இந்தத் துறை தேவை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஐந்து வருடம் 8 கோடி வருமானம் வந்த அந்த கோயிலில் 2014 – 2023 இந்த ஒன்பது வருடங்களில் எவ்வளவு இருக்க வேண்டும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.