“ஈரோடு கிழக்கு சொல்வது என்ன! கிழக்கு – சூரியன் உதிக்கும் திசை. ஆகவே, எங்கள் உதய சூரியனுக்கு வெற்றி உறுதி” என்று கூறினார் தமிழ் அறிந்த தமிழக அமைச்சர். அவர் முகத்தில் கவலை ரேகைகள் இருந்தன.
திமுக அரசுக்கும் சரி, அதிமுகவை தூக்கி நிறுத்தும் பிஜேபிக்கும் சரி, இந்த இடைத்தேர்தல் ஓருவித பீதியை உண்டாக்கி இருப்பது உண்மை. எட்டிய தூரத்தில் உள்ள பொதுத் தேர்தலைப் பற்றிய கணிப்பை இந்த இடைத்தேர்தல் ‘மின்னல்’ போல பளிச்சிடப் போகிறது என்று அந்த ஆளும் கட்சிகள் இரண்டும் நினைக்கின்றன.
பொதுத்தேர்தலுக்கு ‘மிக அருகில்’ நடக்கும் இடைத்தேர்தல், கட்சிகளை பயமுறுத்தவே செய்யும்.
காமராஜ் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த நாட்கள். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிகள் ஓய்ந்தாலும் பலத்த எதிர்ப்புகள் சூழ பக்தவச்சலத்தின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 1967 பொதுதேர்தலுக்கு ஓராண்டு இருப்பதற்கு முன்பு தர்மபுரி இடைத்தேர்தல் வந்தது.
முதலமைச்சர் பக்தவச்சலம் உறுதியான மனோபாவம் உள்ளவர். தர்மபுரியில் ஜெயித்தே ஆகவேண்டும் என முடிவு கட்டினார். திமுகவை வீழ்த்த சகல பலத்தையும் பிரயோகிக்க தயாரானார். முடிவு எடுத்தால் அவர் மாறமாட்டார். இதற்கு பல நிகழ்ச்சிகளைக் கூறலாம்.
திமுக ஓருமுறை பிளவுபட்ட சமயத்தில் காவலர் கூட்டம் என்று அதன் பழுத்த தொண்டர்களை திரட்டி மாநாடு போல் நடத்தியது.
சட்டசபை நடந்து கொண்டிருந்த நேரம் அது. போலீஸ் மானியத்தின் மீது விவாதம். எதனாலோ திடீர் கோபமடைந்த பக்தவச்சலம் திமுகவைப் பார்த்து நீங்கள் நடத்திய ‘காவலர் கூட்டம்’ என்பதை போலீஸ்காரர்களை திரட்டி நடத்தியதுபோல் மக்கள் நினைத்துவிட்டார்கள். இப்போதே உத்தரவிடுகிறேன். காவல் நிலையம் என்கிற பெயரை போலீஸ் ஸ்டேஷன் என்று மாற்ற உத்தரவிடுகிறேன் என்றார். அதற்கு முன் போலீஸ் ஸ்டேஷன் என்றுதான் இருந்தது. நிதியமைச்சர் சி.எஸ். தமிழால் முடியும் என்கிற கொள்கை அடிப்படையில் சில பெயர்களை மாற்றினார். காவல் நிலையம் என்பது அவர் மாற்றியது. சி.எஸ். செல்வாக்கு பக்தவச்சலத்துக்கு எரிச்சலை தந்து வந்தது. பக்தவச்சலம் உத்தரவுப்படி மறுநிமிடமே போலீஸ் ஸ்டேஷன் ஆகிவிட்டது.
தர்மபுரி இடைத்தேர்தலை பக்தவச்சலம் ஆட்சி கெடுபிடியோடு சந்தித்தது. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கலைஞர் அனுமதிக்கப்படவில்லை. 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதை மாபெரும் வெற்றியாக தமிழக காங்கிரஸ் கொண்டாடியது. தர்மத்தின் வெற்றி என்று ஆதரவு இதழ்கள் தலையங்கம் எழுதின
பிறகு நடந்தது என்ன? அடுத்த வந்த 1967 பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், தமிழகத்தில் செல்வாக்கு இழந்து இன்னமும் தடுமாறுகிறது.
இடைத்தேர்தல், பணபலம், கெடுபிடிகளையும் தாண்டி சில சமயம் உண்மைகளை சொல்லும்.
அதிமுக பிளவு பட்டு ஜெ. அணி, ஜானகி அணி என்று பிரிந்து இரட்டை இலையை இழந்து பொதுத்தேர்தலை சந்தித்தபோது 1989 திமுக ஆட்சியை பிடித்தது.
உடனே ஜானகி கட்சியை ஜெயலலிதாவோடு இணைக்க இரட்டை இலையோடு அதிமுக மீண்டும் எழுந்து நின்றது. அந்த நிலையில் மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத்தேர்தல்கள் வந்தன.
இரண்டிலும் திமுகவை தோற்கடித்து ‘இரட்டை இலை’ வென்றது. அதனால்தான் அப்போது திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் துணிவு சுப்பிரமணியசுவாமிக்கு வந்தது.
இரட்லை இலைக்கு பெரும் பலம் இருப்பதாக அந்த இடைத்தேர்தல்களை வைத்து பிஜேபி இப்போதும் கணக்கு போடுகிறது.
ஆனால், இன்றைய சூழ்நிலைகள் மாறித்தான் விட்டன. மு.க. அழகிரியின் ‘திருமங்கலம் பார்முலா’வை இப்போது அதிமுக மட்டுமின்றி தமிழக பிஜேபியும் வேறுவழியின்றி பின்பற்ற ஆரம்பித்துவிட்டது. தேர்தலில் முன்பு கண்ட தொண்டர் உழைப்புகள் காணாமல் போய்விட்டது.
ஓரு கட்சி பிரமுகர் விளக்குகிறார் கேளுங்கள்!
“பணபலத்தை வைத்து எப்படி ஜெயிப்பது, பணத்தை எப்படி முறைப்படுத்தி வாக்காளர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது, எதிர்க்கட்சியின் பண பாய்ச்சலை எப்படி தடுப்பது, இரவு ரகசிய நடமாட்டங்கள், பணத்தை வாக்காளர்களுக்கு வழங்க தோதான பதுங்குமிடங்களை எப்படி தேர்ந்தெடுப்பது, நம்பகமான வினியோக குழுக்கள் வசம் தெருக்களை எப்படி பிரித்து ஓப்படைப்பது, – இப்படி திருமங்கலம் பார்முலா மேலும் அழகுபடுத்தப்பட்டு இடைத்தேர்தல்களை சந்திக்க கட்சிகள் பயிற்சி பெற்றுவிட்டன. ஈரோடு கிழக்கிலும் அந்த பார்முலா பிரமாதமாக செயல்படும்.”