ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில், பழனிசாமி தரப்பில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தனது தரப்பு வேட்பாளருக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதில், இருதரப்பினரும் கலந்துபேசி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு மூலமாக வேட்பாளரை தேர்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழ்மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால், தமிழ்மகன் உசேனின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இன்று மாலை அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் இருவரும் சமர்ப்பிக்க உள்ளனர்.
அதானி விவகாரத்தில் கூட்டு குழு விசாரணை தேவை; எதிர்க்கட்சிகள் அமளி
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ளது தொடர்பாகவும் எஸ்.பி.ஐ. கடன் வழங்கியுள்ளது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் எதிரொலியாக, மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஜி.பி. சாலையில் உள்ள எல்.ஐ.சி. தென்மண்டல அலுவலகத்திற்கு வெளியேயும், போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அவையில் கோரிக்கை விடுத்தனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்டோர், “அதானி விவகாரம் அரசால் மூடி மறைக்கப்படுகிறது” என கூறி கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.யான டாக்டர் மகுவா மஜ்ஜியும் குரல் எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளிலும் ஒரே கூச்சலும், குழப்பமும் காணப்பட்டன. இதனை தொடர்ந்து இரு அவைகளின் நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமனத்திற்கு எதிர்ப்பு: வழக்கறிஞர்கள் குழு கடிதம்
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் சார்பாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5 வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இந்தப் பட்டியலில் உள்ள விக்டோரியா கெளரி என்ற பெண் வழக்கறிஞரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது எனக் கூறி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இதே வழக்கறிஞரை நீதிபதியாக நியமிக்க ஆதரவு தெரிவித்து மற்றொரு வழக்கறிஞர் குழுவும் கடிதம் எழுதி இருக்கிறது.
விக்டோரியா கெளரி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தற்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இவர் பதவி வகிக்கிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். அந்தக் கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், ‘நீதிபதியாக வரும் நபர்கள் எந்தச் சார்பு நிலையும் இல்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதிப்புகளையும் மாண்புகளையும் காக்க வேண்டும். விளிம்புநிலை மக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை பயன்படுத்தி அவர்களை துன்பத்தில் ஆழ்த்தக்கூடாது. இது உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், விக்டோரியா கௌரியின் சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பேசிய வெறுப்பு பேச்சுகள் இதை மீறும் வகையில்’ இருப்பதாகவும் அவரது நியமனத்தைத் திரும்பப் பெறுமாறும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரிக்கும் குழந்தை திருமணம்; அசாமில் 4,074 பேர் மீது வழக்குப்பதிவு
இந்திய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் அசாமில் குழந்தை திருமணங்கள் மிக அதிகமாக இருப்பது தெரிய வந்தது. தேசிய அளவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவீதமாக இருந்து வருகிறது. ஆனால், அசாமில் இந்த இது 11.7 சதவீதமாக உள்ளது. இதனையடுத்து, 2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த 23-ந் தேதி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து குழந்தை திருமணங்கள் செய்தவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ வழக்கு, 14 முதல் 18 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த 15 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 2,273 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.