ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்(FPO) மூலமாக 20,000 கோடி ரூபாய் திரட்டும் வேலையில் இறங்கியிருந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், அந்த முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பங்கு வாங்குவதற்காகப் பணம் செலுத்திய அனைவருக்கும் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முடிவு தொடர்பாக வீடியோ மூலமாக விளக்கம் அளித்துள்ளார் கௌதம் அதானி.
கடந்த ஜனவரி 27ஆம் தேதி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் மீது தீவிர குற்றச்சாட்டுகளை சுமத்தி ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதானி குழுமம் பங்குச்சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும், ஏராளமான கடன்களை வாங்கியிருப்பதாகவும், வரி ஏய்ப்புக்கு சாதகமான மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் சந்தேகத்துக்கு இடமான நிறுவனங்கள் அதானியில் முதலீடு செய்திருப்பதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குற்றம் சாட்டியது. இந்த அறிக்கை வெளியான பிறகு பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு சரிந்தது. ஆனாலும், திட்டமிட்டபடி தமது எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையை 27ஆம் தேதி தொடங்கியது அதானி எண்டர்பிரைசஸ். ஆனால், அவற்றை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கனமழை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
வங்கக் கடலில் கடந்த 28ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென், வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் 2 தினங்களுக்கு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி ஜூன் மாதம் அமெரிக்கா பயணம்: ஜோ பைடன் அழைப்பு
இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது வெள்ளை மாளிகையில் ஜோ பைடன்-மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மேலும் வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அமெரிக்க பாராளுமன்ற கூட்டு கூட்டத்திலும் மோடி உரையாற்றுகிறார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம்
நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா, இன்று தனது கணவர் விசாகன் மற்றும் குழந்தைகயுடன் வந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு சண்முக விலாசத்தில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதி, சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி, தட்சணாமூர்த்தி ஆகிய சன்னதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.