இந்திய நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை. ரூ. 9 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை 15% வருமான வரி செலுத்த வேண்டும்.
எளிதாக ரிட்டர்ன் தாக்கல் செய்ய புதிய ஐடி ரிட்டர்ன் படிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலம் 16 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா சரியான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி முதலிடத்தில் உள்ளது
9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ஆம் இடத்தில் இருந்து 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7% -மாக உள்ளது.
157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும். 2047 ஆம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதிதாக 50 உள்நாட்டு விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
ரயில்வே துறை மேம்பாட்டிற்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
இந்தியாவில் 5ஜி சேவைகள் குறித்து ஆராய 100 செயலி ஆய்வுக்கூடங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும்.
பிரதமர் வீட்டுவசதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 66 சதவீதம் அதிகரிக்கப்படும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தனியார் முதலீடுகள் அனைத்து துறைகளிலும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்க ரூ.2,516 கோடி ஒதுக்கீடு.
விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
வணிக அடையாள அட்டையாக பான் எண் பயன்படுத்தப்படும்
பிரதமரின் பிரணாம் திட்டத்தில் இயற்கை உரங்கள் பயன்பாடு உறுதி செய்யப்படும்.
3 ஆண்டுகளுக்கு 47 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். நகர்ப்புற வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்படும்
மகளிருக்கான புதிய சிறு சேமிப்பு திட்டம் 2025-ம் ஆண்டு வரை மட்டும் நடைமுறையில் இருக்கும்
மின்சார பரிமாற்றத் துறைக்கு ரூ.35,000 கோடி நிதிஒதுக்கீடு. கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் 500 புதிய திட்டங்களுக்கு அனுமதி.10,000 உயிரி உள்ளீடு மையங்கள் ஏற்படுத்தப்படும்
எல்லையோர கிராமங்களில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கட்டமைப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும். மாநில தலைநகர்களிலும் முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் ஒருங்கிணைந்த வணிக வளாக மையங்கள் ஏற்படுத்தப்படும்
டிவி பேனல்களுக்கான சுங்கவரி 2.5% குறைகிறது. இதனால் டிவி விலை குறையும்
ஜவுளி மற்றும் வேளாண் பொருட்களைத் தவிர இதர பொருட்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 21 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகக் குறைப்பு
சிறு, குறு நிறுவனங்களுக்கான வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நாடு முழுவதும் தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும். அனைத்து தரப்பினர், மொழிகள், துறைகள், தொழில்நுட்ப சாதனங்களுக்கும் ஏற்ற வகையில் அது இருக்கும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடக்கிறது. இத்தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
கே.எஸ். தென்னரசு (வயது 65), 1988-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளர், 1995-ம் ஆண்டு நகர செயலாளர், 1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், 2000-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 2010-ம் ஆண்டு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர், 2011-ம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் பொறுப்பினை வகித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். 2016-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட மீண்டும் கே.எஸ்.தென்னரசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, வெற்றி பெற்றார்.
மெரினா கடற்கரை நினைவிடத்தில் கருணாநிதி அருங்காட்சியகம்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மறைந்த கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. இந்த பிரமாண்ட கட்டுமானத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அவரது நினைவிடத்தில் அருங்காட்சியகம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 ஆயிரம் சதுர மீட்டர் பரபரப்பளவில் சுரங்க அறையுடன் உருவாகும் இந்த கண்காட்சி ரூ.80 லட்சம் செலவில் கட்ட பரிந்துரைக்கப்பட்டடு உள்ளது.
வங்க கடலில் புயல்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில் இன்று 1-ஆம் தேதி காலை இலங்கை அருகே கரையை கடக்கக்கூடும் எனவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், டெல்டா மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பிப்ரவரி 2-ஆம் தேதி வரை இலங்கை, தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இன்று நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சம்பா அறுவடை பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ள வரும் நிலையில், இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.