சென்னை புத்தகக் காட்சியில் இந்த வருடம் (2023) அதிகம் விற்ற நூல்களில் ஒன்று ‘கழிவறை இருக்கை’. 2020ஆம் ஆண்டு வெளியான இந்நூல் கடந்த மூன்று ஆண்டுகளாக ‘பெஸ்டர் செல்லர்’ பட்டியலில் தொடர்ந்து இருக்கிறது.
‘வாழ்வின் அடிப்படைத் தேவைகளாக நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளவை மூன்று – உணவு, உடை, இருப்பிடம். ஆனால், என்னைப் பொருத்தவரை நமக்கு அடிப்படைத் தேவைகள் நான்காகும் – உணவு, காமம், இருப்பிடம், உடை – சொல்லப்பட்டிருக்கும் வரிசையில்’ என்றுதான் இந்நூலை தொடங்குகிறார் ஆசிரியர் லதா.
காமம் நம் வாழ்வின் அடிப்படை தேவையாக இருந்தும் அதைப் பற்றி வெளிப்படையாக பேச நாம் தயங்குகிறோம். பாலியற் கல்விக்கும் மறுப்பு தெரிவிக்கிறோம். இதன் விளைவு தப்பும் தவறுமான பல கற்பிதங்கள்தான் காமம் குறித்த நம் புரிதலாக இருக்கிறது. இந்நிலையில், நம் கற்பிதங்களை உடைத்து நொறுக்குகிறது இந்நூல்.
வாழ்வின் அடிப்படைத் தேவைகள், உடல் – உள்ளம் சங்கமிப்பு, காமத்தைத் தவறெனக் கருதுவதால் ஏற்படும் விளைவுகள், காதலின் வெளிப்பாடாகக் காமம், திருமணம் தாண்டிய உறவுகள், திருமணமும் குடும்பமும், சொந்தம் கொண்டாடும் மனப்பான்மை, ஒருவரை ஒருவர் முழுமையாக்குதல், மனத்தடைகளின் நீக்கம், ஆண் அகந்தை, பாலியற் கல்வி, உணவும் உடலுறவும், பெண்களின் உடலுறவு குறித்த ஆர்வமின்மை, நல்லுறவுக்கான விதிமுறைகள், அனுதினமும் பேணப்பட வேண்டியதா திருமண உறவு, காமத்திற்கு வயதென்ன – ஆகிய தலைப்புகள் உட்பட 32 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
அனைத்தும், காமம் சார்ந்த உளவியல் அலசல்கள். நம் புரிதல்களை புரட்டி போடுபவை. உதாரணமாக புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்…
‘கலவி கொள்ளும் சமயத்தில், நீ ஒரு முறையேனும் சிரிக்கவில்லையெனில், நீ தவறான மனிதருடன் உறவு கொள்கிறாய்!’
‘சரியோ தவறோ மூத்தப் பெண்களிடம் உடலியல் குறித்தான அறிவுரைகள் இளையப் பெண்களுக்கு கடத்தப்படுகிறது. அவை பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கவும் செய்கிறது. இருந்தாலும் உரையாடல் நிகழ்கிறது. ஆனால், எந்த ஆணுக்காவது உடலியல் தொடர்பான உரையாடல்கள் நடத்தப்படுகிறதா? அப்பா முதல் ஆசிரியர் வரை எவராலும் நடத்தப் படுவதில்லை. குறைந்தப்பட்சம் உறுப்புத் தூய்மைகூட கற்பிக்க படுவதில்லை.’
‘கழிவறை எப்படியாக இருந்தாலும் சரி நமக்குத் தேவை நம் கழிவுகளை இறக்கி வைக்க ஓர் இடம். அதே போல்தான் பெண் இங்கே அனுகப்படுகிறாள். பெண்ணின் உறுப்பு கழிவறை கிடையாது கொட்டித் தீர்த்து கழுவிவிட்டு எழுந்து வருவதற்கு.’
‘தன் சுயமரியாதையை எந்தச் சூழ்நிலையிலும் இழக்கத் தயாரில்லாத ஓர் அம்மா இருக்கும் வீட்டில் ஒரு ஆண்பிள்ளை பெண்களை மதித்தே வளர்வான்.’
‘மனைவியை நேசிப்பவர்கள் வாசக்டாமியை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.’
‘எல்லா உறவுகளுக்கும் அடித்தளம் அன்பு. அதீத அன்பின் வெளிப்பாடு காதல். காதலின் உச்சகட்ட வெளிப்பாடே காமம். அன்பின் மிகுதியால், இயற்கையின் உந்துதலால் வருவதே காமம் என்பதை நாமெல்லாம் கற்றுகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதே வருந்தக்க செயல்.’
பொதுவெளியில் காமத்தைப் பற்றி பேசுவது குற்றமாக கருதப்படுகிறது. ஆனால், ஆண் காமத்தை பற்றி பேசினால் பெரிதாக பார்க்கப்படுவதில்லை. அதேநேரம் பெண் பேசினால் அவளுக்கு நடத்தை கெட்டவள் என்று பட்டம் சூட்டப்படுகிறது. அவளைப் பற்றி ‘யாருடன் வேண்டுமானாலும் படுக்கைக்கு செல்வாள்’ என்ற எண்ணம் மற்றவர்களுக்கு வந்துவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்களும் பேசத் தயங்குகிற விஷயத்தை ஒரு பெண் இந்நூலில் பேசி இருக்கிறார்.
‘காமம் குறித்த புரிதல் இல்லாததாலேயே, பெண்ணின் உணர்வுகள் இப்படித்தான் இருக்கும் என்று அவர்களுக்கும் சேர்த்து ஆண்களே முடிவு செய்கிறார்கள். பெண்ணைப் பற்றி அவன் சிந்திப்பதில்லை என்பதை விட அறியாமையிலேயே இருக்கிறான். காமம் குறித்து பேசுவது தவறாக கருதப்படும் என பெண்களும் இதனைப் பற்றி ஆண்களிடம் கூறுவதில்லை. இதனால், பெரும்பாலும் உடலுறவின்போது ஆண் மட்டுமே முழுமை அடைகிறான். பெருவாரியான ஆண்களுக்கு படுக்கையில் பெண் என்பவள் தன் விந்துவை உந்தித் தள்ள ஒரு துவாரம் வேண்டும்’ என்கிறார் லதா.
பேசத் தயங்கும் விசயமாக காமம் இருப்பதாலேயே ஆண் – பெண் நட்பு பல சிக்கல்களை சந்திக்கிறது. காமம் குறித்த உரையாடல்கள் வெளிப்படையாக இருக்குமேயானால் இந்நிலை மாறும், மேலும், நம் சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கும் வன்புணர்வுகளை, பாலியல் தொந்தரவுகளை குறைக்கவும் வருங்கால சந்ததியினரை இம்மாதிரியான உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளிலிருந்து காக்கவும் முடியும்.
பல அறிஞர்களின் ஆராய்ச்சிகளை மேற்கோள்காட்டி அறிவியல் ரீதியாகவும் பேசும் இந்நூல் காமம் குறித்து அனைத்து பார்வைகளிலிருந்தும் விளக்கம் அளிக்கிறது. பிரச்சினைகளை கூறுவதோடு, தீர்வையும் எடுத்துரைக்கிறது. அதேநேரம் ஆண்களை மட்டும் விமர்சனம் செய்யாமல் பெண்களையும் சில இடங்களில் விமர்சனம் செய்கிறது. பெண்களிடம் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியும் பேசி இருக்கிறார். எனவே, பெண்களும் அவசியம் படிக்க வேண்டியது.
வெறும் காமம் சார்ந்த உளவியல் பற்றி மட்டும் அல்லாமல் ஆண் – பெண் தன் வாழ்வை எப்படி அமைத்து கொள்ள வேண்டும் என்பதையும் பேசுகிறது இந்நூல். மொத்தத்தில் பெண்களை புரிந்துகொள்ள ஆண்களும், பெண்களை புரிந்து கொள்ள பெண்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
கழிவறை இருக்கை; ஆசிரியர்: லதா; பக்கங்கள்: 224; விலை: ரூ. 225; வெளியீடு: நோராப் இம்பிரிண்ட்ஸ், 19/5, நவரத்தினம், ருக்மணி சாலை, பெசன்ட் நகர், சென்னை – 600090; தொலைபேசி: +91 97909 19982; மின்னஞ்சல்: [email protected]