கிரிக்கெட் வீரர்களை பாலிவுட் நட்சத்திரங்கள் மணப்பது மன்சூர் அலிகான் பட்டோடி காலத்தில் இருந்து இந்தியாவில் நடந்துவரும் வழக்கம். பட்டோடி – ஷர்மிளா தாகூர் ஜோடி தொடங்கிவைத்த இந்த வழக்கத்தை கோலி -அனுஷ்கா சர்மா வரை பலரும் தொடர்ந்திருக்கிறார்கள். அந்த லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறது கே.எல்.ராகுல் – ஆத்யா ஷெட்டி ஜோடி.
பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஆத்யா ஷெட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான கே.எல்.ராகுல் பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆரம்பத்தில் தாங்கள் காதலிப்பதாக வந்த செய்திகளை பொய் என்று மறுத்துவந்த இந்த ஜோடி, மெல்ல மெல்ல ஆம் என்று தலையாட்டியது. இதைத்தொடர்ந்து காதல் பறவைகளாக வலம் வந்த அவர்கள் நேற்று முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
மஹாராஷ்டிராவில் உள்ள காந்தலா என்ற இடத்தில் சுனில் ஷெட்டிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இந்த திருமணம் நடந்திருக்கிறது. மிக எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் மணமக்களுக்கு நெருக்கமான 70 விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
திருமணம் எளிமையாக நடந்தாலும், அதில் மணமகள் ஆத்யா ஷெட்டி அணிந்திருந்த லஹங்கா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்ட இந்த லஹங்காவை பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஆன்மிகா கன்னா வடிவமைத்துள்ளார். பட்டு நூலில் முழுக்க முழுக்க கையால் நெய்யப்பட்ட இந்த லஹங்காவை வடிவமைக்க 10 ஆயிரம் மணிநேரம் ஆனதாக கூறுகிறார் ஆன்மிகா கன்னா.
”ஆத்யாவுக்கு ஃபேஷனில் நல்ல ஆர்வமும், ரசனையும் இருக்கிறது. பல ஆண்டுகளாக அவருக்கு நான் ஆடைகளை வடிவமைத்துக் கொடுக்கிறேன். அவரது திருமணத்துக்கு இதுவரை யாரும் அணியாத வகை ஆடையை வடிவமைக்க வேண்டும் என்று விரும்பினேன். கே.எல்.ராகுலைத்தான் ஆத்யா ஷெட்டி மணமுடிக்கப் போகிறார் என்பது எனக்கு சில மாதங்களுக்கு முன்பே தெரிந்ததால் அப்போதில் இருந்தே திருமணத்துக்கான இந்த லஹங்காவை வடிவமைக்கத் தொடங்கினேன்.
பட்டு நூலுடன், சர்டோசி (zardozi) வேலைப்பாடுகள் மற்றும் ஜாலி (jaali) எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் கலந்து இந்த லெஹங்காவை வடிவமைத்துள்ளேன். இந்த ஆடையை வடிவமைக்க சுமார் 10 ஆயிரம் மனித நேரம் ஆனது. அவரது உடைக்கு மேட்சிங்காக கே.எல்.ராகுலுக்கு யானைத் தந்தத்தின் நிறத்தில் கே.எல்.ராகுலுக்கான ஷெர்வானியை வடிவமைத்தேன்” என்று ‘வோக்’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் ஆன்மிகா கன்னா. பாலிவுட் நட்சத்திரங்கள் பலருக்கும் இவர் ஆடைகளை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.