தமிழ்நாடு சட்டப்பேரவையில், அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள சில பகுதிகளை வாசிக்காததுடன் தனது சில கருத்துக்களையும் சேர்த்து ஆளுநர் ஆர்.என். ரவி வாசித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நேற்று சந்தித்து ஆளுநர் மேல் புகாரளித்தனர்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ர வி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின்போது தமிழ்நாடு சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அல்லது குடியரசு தலைவரை ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியில் சேர தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: பேரவையில் மசோதா தாக்கல்!
தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் இளைஞர்களை சேர்ப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆட்சேர்ப்பு முகாமைகள் மூலம் நடத்தப்படும் நேரடி ஆள்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
இந்தியாவில் ஆட்குறைப்பை தொடங்கியது அமேசான்
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் அமேசான் நிறுவனம் தனது ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமேசான் சிஇஓ ஆண்டி ஜேஸி வலைப்பூ பதிவில், “உலகம் முழுவதும் அமேசான் அலுவலகங்களில் 18 ஆயிரம் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 18 ஆம் தேதிக்குப் பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வேலையிழந்தவர்களுக்கு அமேசான் முறையாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாள் ஒதுக்கி அன்று நேரில் வந்து பணிநீக்கத்திற்கான விளக்கத்தை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோல் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.