சினிமா நட்சத்திரங்களில் இப்பொழுதெல்லாம் நான் ரொம்ப பிஸி என்றே கூறுகிறார்கள்.
ஆனால் நாளொன்றுக்கு மூன்று நான்கு வீடியோக்களை சோஷியல் மீடியாவில் ஏற்றிக்கொண்டே வருகிறார்கள்.
அவர்கள் பிஸியாக இருப்பதற்கு இந்த வீடியோக்கள் காரணமாக இருக்கலாம்.
பல நட்சத்திரங்கள் சோஷியல் மீடியாவை இப்படி தங்களது பாப்புலாரிட்டியை அதிகரிக்கவும், ஃபாலோயர்களை பிடிக்கவும்தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
இதில் சிலர் அவ்வப்போது ரசிகர்களுடன் லைவ் சாட்டிலும் பிஸியாக இருக்கிறார்கள்.
இவர்களில் இருந்து கொஞ்சம் மாத்தி யோசித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.
எனக்கு என்னுடைய ரசிகர்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். அவர்களோடு எப்பவும் இணைந்திருக்கவே விரும்புகிறேன். அதனால்தான் என்னால் முடிந்த வரை அவர்களோடு என்னுடைய முக்கிய தருணங்களைப் பகிர்ந்து வருகிறேன்.
ஆனால் இதெல்லாம் எனக்கு போதாது. அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுக்கவேண்டும். அவர்கள் என் மீது காட்டும் பாசத்தை அவர்களுக்கும் நான் கொடுக்க வேண்டும். அதனால் ரசிகர்களுக்கென ஒரு மாநாடு நடத்த ஆசையாக இருக்கிறது.
எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்து மாநாடு நடத்துவது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம். அதனால் என்னுடைய ரசிகர்களுக்கு ஒரு ஆன்லைன் மாநாடு நடத்தலாம் என்று யோசித்து வருகிறேன்’ என்கிறார் ராஷ்மிகா மந்தானா.
ஆடம்பரம் செலவும் இல்லை. எந்த தொல்லையும் இல்லை. ஒரு பைசா செலவில்லாமல் எல்லா ரசிகர்களையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே சந்திக்கும் ராஷ்மிகாவின் இந்த திட்டம் செட்டாகி விட்டால், இதையே மற்றவர்களும் பின்பற்ற வாய்ப்பிருக்கிறது.
’வாரிசு’ ஒபனிங் விஜய்க்கு சறுக்கலா?
மிகப்பெரும் எதிர்பார்ப்போடு களமிறங்கிய விஜயின் ’வாரிசு’ குறித்து சோஷியல் மீடியாவில் ஆளாளுக்கு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
ஆனால் ‘வாரிசு’ படத்தின் முதல் நாள் வசூல் சொல்லும் சங்கதி என்ன?
‘வாரிசு’ வெளியான முதல் நாளில் சுமார் 48 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பாக வெளியாகி நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்ற ‘பீஸ்ட்’ படம் முதல் நாள் வசூலாக கல்லா கட்டிய தொகை ஏறக்குறைய 87 கோடி.
கோவிட் சூழல் இருந்த போதும் கூட வெளியான ‘மாஸ்டர்’ முதல் நாளில் சுமார் 54 கோடி வசூலித்ததாக சொல்கிறார்கள்.
இதற்கு முன்பாக வெளியான ‘சர்கார்’ முதல் நாளில் சுமார் 71 கோடி, ‘பிகில்’ ஏறக்குறைய 67 கோடியும், ’மெர்சல்’ சுமார் 50 கோடியும் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தெரிவிக்கிறது.
வாரிசுவின் முதல் நாள் வசூல் நன்றாக இருந்தாலும், விஜயின் முந்தையப்படங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. அதையும் தாண்டி 50 கோடி என்ற இலக்கைக் கூட எட்டவில்லை என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜயின் ‘வாரிசு’ வசூலில் பின் தங்கியதற்கு படத்தின் கதைதான் காரணம் என்று சொன்னாலும், பார்ப்பதற்கு டிவி சிரீயல் போல் இருக்கிறது என்று கமெண்ட் அடித்தாலும், இது ஒருவகையில் விஜய்க்கு சறுக்கல்தான் என்கிறார்கள்.
ஆனால் பொங்கல் விடுமுறை இன்னும் ஆரம்பிக்காத நிலையில் இந்த வசூலை கணக்கில் எடுத்து கொள்ளகூடாது. விடுமுறை ஆரம்பித்த பின்னர் வரும் வசூலை வைத்தே எதையும் தீர்மானிக்க முடியுமென விவரமறிந்த சினிமா புள்ளிகள் கூறுகின்றனர்.
சிரஞ்சீவியிடமிருந்து நம் ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது!
2023- பொங்கல் தமிழ் சினிமாவில் பல அதிர்வுகளை உண்டாக்கியிருக்கிறது. காரணம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோக்களான அஜித் – விஜய் படங்கள் நேரடியாக மோதியிருக்கின்றன.
‘துணிவு’, ‘வாரிசு’ என இரண்டுப் படங்களும் ஒரே நாளில் மோதியிருப்பதால், 2023-ல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் வசூலில் பெரிய இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு ஹீரோக்களின் படங்கள் வெவ்வேறு நாட்களில் வெளியாகி இருந்தால், இந்த இரண்டுப் படங்களையும் மக்கள் அனைவரும் பார்க்க வாய்ப்புகள் அதிகம். அப்படி மக்கள் அதிகம் பேர் திரையரங்குகளுக்கு வரும் போது பாக்ஸ் ஆபீஸ் வசூலும் அதிகமாகும். இதனால் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் புதிய உயரத்தைத் தொடவும் வாய்ப்புகள் உருவாகலாம்.
ஆனால் இதில் யாருடைய பிடிவாதம், ஈகோ காரணம் என்று தெரியவில்லை. அஜித் – விஜய் படங்கள் ஒரே நாளில் களமிறங்கி விட்டன.
இங்கே இப்படி இருக்க தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சங்கராந்திக்கு சிரஞ்சீவி நடித்திருக்கும் ’வால்டர் வீரய்யா’, நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ம ரெட்டி’ படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டுப் படங்களையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி இருக்கையில் தனது இரண்டுப் படங்களையும் ஒரே நாளில் ஏன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட வேண்டுமென்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சிரஞ்சீவி இது குறித்து தனது கருத்தை தெரிவிக்கையில், ‘என் படம் ‘வால்டர் வீரய்யாவை’ மக்கள் சங்கராந்திக்குதான் கண்டிப்பாக பார்த்தாக வேண்டுமென்பதில்லை. இப்போது ரிலீஸ் செய்வதை விட பிப்ரவரியில் கூட வெளியிட்டு இருக்கலாம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் என் படத்தை பிப்ரவரியில் வெளியிடலாமா என்று கேட்டிருந்தால் நான் அதற்கு ஒகே சொல்லியிருப்பேன். படத்தில் கதை நன்றாக ரிலீஸ் தேதி ஒன்றும் பெரிய விஷயமில்லை.’’ என்று கூறியிருக்கிறார்.
சிரஞ்சீவி ஏன் இப்படி பின்வாங்க காரணம் என்று சிலர் கேட்கையில், ‘படம் பார்க்க வருகிற மக்களோட நிதி நிலவரத்தை நாம் யோசித்து பார்க்க வேண்டியது அவசியம். இந்த இரண்டுப் படங்களுமே நன்றாக இருந்தால், ஒரு படம் பார்த்தவர்களுக்கு அடுத்தப் படத்தைப் பார்க்க டிக்கெட் வாங்குவதற்கு கையில் பணம் இல்லாமல் போகலாம். இதனால் இரண்டாவது படத்தை பார்க்க மக்களால் முடியாமல் போனால் யாருக்கு நஷ்டம்?’ என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் சிரஞ்சீவி.
சினிமாவை உண்மையாக காதலிப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும்.