சென்னையில் ஒரு தனியார் வங்கி. அதில் 500 கோடியைக் கொள்ளையடிக்க திட்டம் போடும் ஒரு கும்பல். அந்த வங்கிக்குள் நுழைந்த கும்பலிடம், தான் 5000 கோடியைக் கொள்ளையடிக்க வந்திருப்பதாக சொல்லி ரவுசு காட்டும் ஹீரோ. இந்த பின்னணியில் ஒரு வங்கிக் கொள்ளையை வைத்து, மக்களிடம் வங்கிகள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கின்றன என்ற இன்ஃபோடெய்மெண்ட்டை கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத்.
வில்லத்தனமான நடிப்பில் விஸ்வரூபம் எடுத்து பகடி ஆட்டம் ஆடியிருக்கிறார் அஜித்குமார். பெப்பர் எல்லாம் காலியாகி வெறும் சால்ட் மட்டுமே மிச்சமிருக்கும் லுக்கில் அஜித். மற்றவர்களின் டயலாக்குகளுக்கு அவர் அடிக்கும் நையாண்டி கவுண்டர். கேங்ஸ்டருக்கான பாடி லாங்வேஜ் என தனது முன்னாள் ரசிகர்களுக்கும் இந்நாள் நலம்விரும்பிகளுக்கும் பரபர பாஸ்டாவை பொங்கல் விருந்தாக கொடுத்திருக்கிறார்.
நடிப்பில் வெளுத்துக் கட்டும் மஞ்சு வாரியர் அடக்கமாக, அலட்டாமல் நடித்திருக்கிறார்.
சமுத்திரக்கனி, ஜான் கோகேன், மகாநதி சங்கர், பக்ஸ் என இதர நட்சத்திரப் பட்டாளங்களும் கதைக்கேற்ற கச்சிதமான நடிப்பு.
பட்டிமன்றங்களில் நையாண்டித்தனம் செய்யும் மோகனசுந்தரம், மை.பா. என்ற டிவி சேனல் நிருபராக காமெடியில் அதகளப்படுத்தி இருக்கிறார்.
ஜிப்ரானின் இசையில் ‘சிலா சிலா’ பாடல் திரையரங்கிற்குள் ரசிகர்களுக்கான கொண்டாட்ட விருந்து இசை. கேங்ஸ்டா பாடல் பட ஃபினிஷிங் டச்.
வங்கிக்குள் நடக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் விறுவிறுப்பை எகிற வைக்கிறது நீரவ் ஷாவின் ஸ்டெடி கேம். ஆக்ஷன் பட வேகத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது கேமரா. மிலனின் செட், படம் பார்க்கும் போது நாமும் வங்கிக்குள் இருப்பதை போன்ற உணர்வை அளிக்கிறது. விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கும், சுப்ரீம் சுந்தர் ஆக்ஷனும் திரைக்கதைக்கு துணிவு.
முதல் பாதியில் இதயம் பலவீனமானவர்களோ, இரைச்சலினால் டென்ஷனாகும் பழக்கமுள்ளவர்களோ கொஞ்சம் பஞ்சையோ அல்லது இயர் கார்ட்டையோ கையோடு கொண்டு செல்வது நலம். அந்தளவிற்கு சரமாரியாக சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சுடும் காட்சிகளில் பாயும் குண்டுகளைப் பார்க்கும் போது நாலைந்து குண்டுகள் நம்முடைய இடப்பக்கமும் வலப்பக்கமும் உரசிக்கொண்டு போவதைப் போலிருக்கிறது.
இரண்டாம் பாதியில் பேங்கில் இருந்து வெளியே வந்து ஃப்ளாஷ் பேக்கிற்குள் நுழைகிறது திரைக்கதை. வங்கிகள் எப்படியெல்லாம் மியூச்சுவல் ஃபண்ட், க்ரெடிட் கார்ட், பங்குச்சந்தை மூலம் ஏமாற்றுகின்றன என்பதை கமர்ஷியல் சினிமாவுக்கான டெமோ போல காட்டியிருக்கிறார்கள். அதிலும் வரும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.
ஃபுல் மீல்ஸில் கறியில் குழம்பில் ரசத்தில் இருக்கும் கருவேப்பிலையை ரொம்ப அவசியமானது என்றாலும் ஒரு ஓரமாக தூக்கி வைத்துவிட்டு சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுவோமே, அதே பாணியில் இப்படியெல்லாம் நடக்குமா, வாய்ப்பு இருக்குமா மாதிரியான லாஜிக் சமாச்சாரங்களை ஓரமாக தூக்கிவைத்துவிட்டு முழுப் படத்தை போதும். அப்படியொரு ஒரு கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார்கள்.