தமிழில் இன்று புதிதாக எழுத வருபவர்களுக்கு ஒரு ரோல் மாடலாகவும் ஆசிரியராகவும் இருப்பவர், எழுத்தாளர் பா. ராகவன். சிறுகதை, நாவல், அரசியல் வரலாற்று நூல்கள், திரைக்கதை, வசனம் என எழுத்து சார்ந்த அத்தனை பரிமாணங்களிலும் இயங்கி வருபவர். வாவ் தமிழா யூ டியூப் சேனலில் வெளியாகிவரும் ‘புக் டாக்’ தொடரில், தமிழில் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள் குறித்து பா. ராகவன் அளித்த நேர்காணல் இது.
“தமிழில் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று நூற்றுக்கணக்கான நூல்கள் உள்ளது. அதில் மிக முக்கியமான சிலதை மட்டும் சொல்கிறேன். ஒரு வாசகனாக, எழுத்தாளராக விரும்புபவர்கள் கட்டாயம் இவற்றை படித்திருக்க வேண்டும் என்று சொல்வேன். மனது வைத்து முயற்சி செய்தால் இந்த வருட சென்னை புத்தகக் காட்சியிலேயே அவை எல்லாவற்றையும் வாங்கிவிட முடியும். படிப்பதும் அதுபோல்தான். ஒரு நாளைக்கு இத்தனை பக்கம் என திட்டமிட்டு படிக்கத் தொடங்கினால் அது இயல்பாகி படிப்பது சுலபமாகிவிடும். இனி புத்தகங்கள்…
முதலில்…
உவேசாவின் ‘என் சரித்திரம்’
தமிழில் ஒரு சொல்லுக்கு எத்தனை மாற்று சொல் உள்ளது என்பதை இந்த புத்தகத்தில்தான் தெரிந்துகொள்ள முடியும். அவ்வளவு சொற்களை பயன்படுத்தியுள்ளார். ஒரு சொல்லை ஒரு பக்கத்தில் பார்த்தால் அடுத்த நான்கு பக்கங்களில் அதை மீண்டும் பார்க்க முடியாது. இது தமிழில் நிகழ்த்தப்பட்ட ஒரு சாதனை; வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், மொத்த புத்தகத்தில் ஒரு ஜாலி கிடையாது, ரொமான்ஸ் கிடையாது, திரில் கிடையாது, சஸ்பென்ஸ் கிடையாது. ‘நான் இந்த ஸ்கூலுக்கு போனேன், இந்த வாத்தியாரிடம் இந்த பாடம் படித்தேன். இதைத்தான் ஆயிரம் பக்கங்களுக்கு எழுதி வைத்திருக்கிறார். ஆனால், ஒரு இடத்தில்கூட சலிப்பு வராததுபோல் தான் கல்வி கற்றதையே ஒரு நாவலைவிட விறுவிறுப்பாக எழுதியுள்ளார். ஒரு முறை அல்ல, ஒரு நாளைக்கு நான்கு பக்கம் என்ற விதத்தில் நான் இந்த நூலை படித்துக்கொண்டே இருப்பேன். அவ்வளவு சுவாரஸ்யம்.
பைபிளின் ‘பழைய ஏற்பாடு’
எழுத்தாளர்கள் மொழி சார்ந்த அழகியல் உருவாக பைபிளின் ‘பழைய ஏற்பாடு’ அவசியம் படிக்க வேண்டும். மதம் என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு ஒரு இலக்கியப் பிரதியாக பார்த்தால் பழைய ஏற்பாடு அபாரமானது. திருவிழாக்கள் சவ்வு மிட்டாய் மாதிரி தமிழை எப்படியெல்லாம் வளைக்கலாம் இதில் கற்றுக்கொள்ள முடியும்.
நாலாயிர திவ்ய பிரபந்தம்
பைபிள் ‘பழைய ஏற்பாடு’ போலவே மொழி அழகு கொண்ட இன்னொரு நூல் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’. அழகு என்றால் அழகு அப்படியொரு அழகு. நீங்கள் பக்திமானாக இருக்க வேண்டுமென்றில்லை, நாத்திகராகக்கூட இருக்கலாம் – மொழி அழகுக்காக கட்டாயம் நாலாயிர திவ்ய பிரபந்தம் படிக்கவேண்டும்.
‘என் சரித்திரம்,’ ‘பழைய ஏற்பாடு’, ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ இந்த மூன்றும் அடிப்படை பாடம். மூன்றையும் படித்துவிட்டால் நீங்கள் தேர்ந்த ஒரு வாசகர் ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம். அதன்பின்னர் படிக்காமல் உங்களால் இருக்க முடியாது.
இந்த மூன்றுக்கு அடுத்து நான்காவது…
பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’
தமிழர் வாழ்வு சார்ந்த மொழி, அரசியல், கலை, கலாசாரம் எல்லாவற்றையும் அன்றைய இந்திய அரசியல் சூழல் பின்னணியில் இதில் தொட்டிருப்பார் பாரதியார். எனவே, அன்றைய அரசியல் சூழலோடு ஒப்பிட்டு படித்தால் இந்த புத்தகம் கொடுக்கக்கூடிய அனுபவம் அற்புதமானது.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் ‘அமுத மொழிகள்’
கதை படிப்பதில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது ‘அமுத மொழிகள்’ என்ற பெயரில் உள்ள ராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக் கதைகள். ராமகிருஷ்ணர் மடம் பதிப்பகத்தில் இது கிடைக்கும்.
இனி தற்கால இலக்கியம் பக்கம் பார்க்கலாம்…