பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்ட அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதியும், பாலமேட்டில் 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் அருகே உள்ள கோயிலில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். வெற்றி பெறும் முதல் மாட்டுக்கும், வீரருக்கும் கார் பரிசாக வழங்கப்படும். பங்கேற்கும் அனைத்து மாடுகளுக்கும் தங்கக் காசு வழங்கப்படும். மாடுகளைப் பிடிக்கும் அனைத்து வீரர்களுக்கும் தங்கக் காசு வழங்கப்படும்” என்று கூறினார்.
2024 ஜனவரி 1 அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும்: அமித்ஷா அறிவிப்பு
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, ராமர் கோயில் கட்டுவதற்கு ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் மூலம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திரிபுராவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த ஆண்டு 2024 ஜனவரி மாதம் 1ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் என்று கூறினார். 2024ஆம் ஆண்டு ஜனவரிக்குள் கட்டுமான பணிகள் முழுமையாக நடைபெற்று சங்கராந்தி பண்டிகை காலத்தில் கோயிலை திறந்து ஜனவரி 14ஆம் தேதி ராமர் சிலைகள் நிறுவப்படும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அமித்ஷா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை 46ஆவது புத்தக காட்சி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 46-வது புத்தக காட்சி இன்று தொடங்குகிறது. புத்தகக் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் கருணாநிதி பொற்கிழி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், சிறந்த பதிப்பாளர்களுக்கும் முதலமைச்சர் விருதுகளை வழங்கி சிறப்பிக்கவுள்ளார். 40-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்க உள்ள நிலையில் புத்தகக் கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் கோபம்… பாரம்பரியக் கோபம்: முரசொலி பதில்
“தமிழ்நாடு எனக் கூறுவதை விட தமிழகம் எனக் கூறுவதே சரியாக இருக்கும்” என கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார். இது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய அளவில் ட்விட்டரில் தமிழ்நாடு என்ற பெயர் பேசுபொருளானது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், ‘இது ஆளுநர் ரவி என்ற தனி மனிதரின் கோபம் அல்ல. பாரம்பரியக் கோபம். தனது முன்னோர்களின் கோபத்தை பிரதிபலிக்க வந்திருக்கிறார். தினந்தோறும் திராவிடம் பேசுபவர் நம்மை விட, அவர்தான். திராவிடம் இல்லாமல் அவர் பேசுவது இல்லை. இது நமக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. திராவிடம் என்ற வார்த்தையை வைத்து ஏமாற்றுகிறோமாம்! திராவிடம் என்பது ஏமாற்றுச் சொல் அல்ல, விழிப்புணர்வுச் சொல்! திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் ஒற்றைப் பொருள் தரும் இரட்டைச் சொற்கள்தான். ‘திராவிட மாடல்’ வளர்ச்சியின் மீதான கோபத்தைத்தான் ஆளுநரின் பேச்சுக்கள் வெளிப்படுத்துகிறது” என ‘முரசொலி’ தெரிவித்துள்ளது.