‘சூரியன் மறையாத அரசாங்கம்’ என்ற பெருமை இங்கிலாந்து அரசுக்கு ஒரு காலத்தில் இருந்தது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் அந்நாட்டின் அரசு பரந்து விரிந்திருந்ததால் இங்கிலாந்துக்கு இந்த பெருமை இருந்தது. அது அந்தக் காலம்…. இப்போது அதையே கொஞ்சம் மாற்றி ‘இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை’ என்ற சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள் வாழ்வதே இதற்கு காரணம்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி மற்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கிறார்கள். 2022-ம் ஆண்டுவரை சுமார் 1 கோடியே 80 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ளனர். இந்த பட்டியலில் இந்தியர்களுக்கு அடுத்த இடத்தை மெக்சிகோ நாட்டினர் பிடித்துள்ளனர். அந்நாட்டைச் சேர்ந்த சுமார் 1.1 கோடி மக்கள் பல்வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இந்தியா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யா (1.1 கோடி மக்கள்), சீனா (1 கோடி மக்கள்), சிரியா (80 லட்சம் மக்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மக்களும் ஏராளமாக வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ளனர். இதன்படி வங்கதேசத்தைச் சேர்ந்த 70 லட்சம் பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த 60 லட்சம் பேரும் தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளில் செட்டில் ஆகியிருக்கிறார்கள்.
இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முக்கிய காரணமாக கல்வி இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 5.9 லட்சம் இந்திய மாணவர்கள் கல்வி பயில்வதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 2021-ம் ஆண்டில் 4.4 லட்சம் மாணவர்களும், 2022 ஜூன் மாதம் வரை 2.5 லட்சம் மாணவர்களும் வெளிநாடுகளுக்கு படிப்பதற்காக சென்ருள்ளனர்.
இதில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கனடா நாட்டுக்குத்தான் படிப்பதற்காக சென்றுள்ளனர். 2019-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி கனடாவுக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் படிப்பதற்காக சென்றுள்ளனர். கனடாவுக்கு அடுத்ததாக அமெரிக்காவுக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள் படிப்பதற்காக சென்றுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு 74 ஆயிரம் மாணவர்களும், இங்கிலாந்துக்கு 37 ஆயிரம் மாணவர்களும், சீனாவுக்கு 19 ஆயிரம் மாணவர்களும் படிப்பதற்காக சென்றுள்ளனர்.
கல்வியைப் போலவே வேலையைத் தேடியும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 2020-ம் ஆண்டில் 7.2 லட்சம் பேரும், 2021-ம் ஆண்டில் 8.3 லட்சம் பேரும், 2022-ம் ஆண்டில் 13 லட்சம் பேரும் வேலைதேடி வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவ்வாறு வேலைக்கு சென்றவர்கள் அனுப்பும் பணத்தின் எண்ணிக்கையிலும் மற்ற நாடுகளைவிட இந்தியாவே முன்னணியில் உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலம் நாட்டுக்கு 89 பில்லியன் டாலர்கள் வருவாய் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ இருக்கிறது. அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் 54 பில்லியன் டாலர்களை தங்கள் நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். அதற்கு அடுத்ததாக சீனர்கள் 53 பில்லியன் டாலர்களை தங்கள் நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து 19.8 பில்லியன் டாலர்கள் வந்துள்ளன. அடுத்ததாக அமெரிக்காவில் இருந்து 15.8 பில்லியன் அமெரிக்க டாலர்களும், சவுதி அரேபியாவில் இருந்து 13.1 பில்லியன் டாலர்களும் வந்துள்ளன.
பல்வேறு வேலைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து செட்டிலான இந்தியர்களில் 16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதில் கடந்த ஆண்டில் மட்டும் 1.8 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்.
இந்தியர்கள் வெளிநாடுகளில் சாதிப்பது பெருமைக்குரியதாக பார்க்கப்பட்டாலும் இத்தனை லட்சம் பேர் வருடா வருடம் நாட்டை விட்டு வெளியேறுவது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்