நேற்று செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்திருக்கிறார் அண்ணாமலை. சாதாரண கேள்வி. பெண்களுக்கு பாஜகவில் பாதுகாப்பு இல்லை என்கிறாரே தலைவராக உங்கள் பதில் என்ன?
இது போன்ற பிரச்சினை எந்தக் கட்சியில் வந்திருந்தாலும் அந்தக் கட்சியின் தலைவரிடமோ அல்லது முக்கிய நிர்வாகிகளிடமோ இந்தக் கேள்வியை செய்தியாளர்கள் வைத்திருப்பார்கள்.
பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்ற மிகச் சில அரசியல் தலைவர்களைத் தவிர அனைத்து அரசியல் தலைவர்களும் செய்தியாளர்களை தொடர்ந்து சந்திக்கிறார்கள். அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலையும் அப்படியே. செய்தியாளர்களை சந்திக்க தயங்கியதில்லை. கிட்டத்தட்ட தினம்தோறும் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பேட்டிகள் அளித்துக் கொண்டே இருக்கிறார். இது பாரட்டத்தக்கது.
வளரும் தலைவர் மீடியா வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார். எப்போதும் தான் மட்டுமே பேசு பொருளாக இருக்க வேண்டுமென்று திட்டமிடுகிறார். அதை செயல்படுத்துகிறார்.
இதில் கவனமாயிருக்க வேண்டியவர்கள் இருவர்.
முதலில் செய்தியாளர்கள். தேசியக் கட்சியான பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அந்தக் கட்சியைச் சார்ந்த ஒருவரே குற்றச்சாட்டு வைக்கும்போது அதை கேட்க வேண்டிய பொறுப்பு செய்தியாளர்களுக்கு இருக்கிறது. அதைதான் நேற்று செய்தார்கள். ஆனால் அதற்கு கடைசி வரை பதில் சொல்லவில்லை. ரஃபேல் வாட்ச், பிஜிஆர் எனர்ஜி, புதிய தலைமுறையுடன் சண்டை என ஆவேசப்பட்ட அண்ணாமலை அவர் நினைத்ததை சாதித்துவிட்டார். காயத்ரி ரகுராமுக்கு பதிலும் சொல்லவில்லை அதே நேரம் அவரது பெயர் அனைத்து ஊடகங்களிலும் வரும்படியும் பார்த்துக் கொண்டார். சமார்த்தியசாலி.
நேற்றைய சண்டையில் அண்ணாமலை சில விஷயங்களை மக்களுக்கு கடத்தியிருக்கிறார். ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றன. அரசு விளம்பரங்களுக்காக பயந்து நடந்துக் கொள்கின்றன. பாஜக தரும் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவதில்லை…அண்ணாமலை சண்டையிட்டார் என்று மேம்போக்காக தெரிந்தாலும் உள்ளுக்குள் இந்த விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன.
அண்ணாமலை சண்டையை ஆழ்ந்து பார்த்தவர்கள் அனைவரும் அண்ணாமலை சொல்லிய இந்தக் குற்றச்சாட்டுக்களையும் பார்த்திருப்பார்கள். இதை நம்புவார்களா நம்பமாட்டார்களா என்பது தெரியாது. ஆனால் இந்த விஷங்களை மக்களுக்கு கடத்திவிட்டார் அண்ணாமலை. காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுகள் திசை மாறி ஊடகங்கள் VS பாஜக என்ற பிம்பம் கிடைத்துவிட்டது. திசை திருப்புதல் வேலையில் ஈடுபடும் அரசியல் தலைவர்களிடம் ஊடகத்தினர் கவனமாக இருக்க வேண்டும்.
இரண்டாவது அதிமுகவினர். அ என்றால் அதிமுக என்று இருந்த நிலை மாறி இன்று அ என்றால் அண்ணாமலை என்ற சூழல் உருவாகி வருவதைக் கவனிக்க வேண்டும். எங்களுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கனவுலகிலேயே வாழ்ந்து கொண்டிருப்பது பயன் தராது. நேர்மறையாகவோ எதிர் மறையாகவோ அண்ணாமலையும் பாஜகவும் மக்களிடம் சென்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
எதிர்க் கட்சியாக அதிமுகவின் முக்கியத்துவம் குறைந்துக் கொண்டே வருகிறது.
நேற்று அண்ணாமலை பேசும்போது ஒரு வாக்கியத்தைக் கூறினார் டயரைக் கும்பிடுகிறவர்கள் நாங்கள் இல்லை என்று சொன்னார். இது நேரடியாக அதிமுகவைதான் குறிக்கிறது. ஜெயலலிதாவின் கார் டயரைக் கும்பிடுகிறவர்கள் என்ற பெயர் அதிமுகவினருக்கு உண்டு. அதை அண்ணாமலை கோடிட்டுக் காட்டுகிறார். கூட்டணிக் கட்சிக்கு அவர் கொடுக்கும் மரியாதை இதுதான்.
அதிமுகவினரும் கவனமாயிருக்க வேண்டிய காலமிது.