தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். கடந்த 2-ம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவால், அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வதந்தி பரவத் தொடங்கியது. இதற்கு விளக்கமளித்து அவர் வெளியிட்ட பதிவில், “நான் வெளியிட்ட ட்விட்டர் பதிவு தற்செயலானது. என் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை வைத்து சிலர் வேறுமாதிரி புரிந்துள்ளனர். நான் எழுதும் புத்தகத்தின் உள்ளடக்கங்கள் மிகவும் நேர்மையாக இருக்கும் என்ற வகையில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனாலும் சிலருக்கு ஏற்பட்ட கவலைக்காக மன்னிக்கவும். இனி நான் அமைச்சராக இருக்கும் வரை அதை வெளியிட முடியாது என்பதால் அவ்வாறு தெரிவித்தேன். ஒவ்வொரு அமைச்சரும் ஒருநாள் அலுவலகத்தை விட்டு வெளியேறிதான் ஆக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு
அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டு உள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் வாக்குப்பதிவு) அறிமுகம் செய்ய உள்ளது தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்துகொள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடந்த வியாழக்கிழமை அதிமுக தலைமைக் கழகத்துக்கு கடிதம் கொடுத்து அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தை அதிமுக தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டனர். நேற்று இது தொடர்பாக 2-வதாக வந்த கடிதத்தையும், அதிமுக தலைமைக் கழகத்தில் வாங்காமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதனிடையே, சேலத்தில் இருந்து நேற்று சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளார். அப்போது நடைபெற்ற ஆலோசனையில் தேர்தல் ஆணையம் மறுபடியும் நமக்கு இடைக்கால பொதுச்செயலாளர் என்று கடிதம் அனுப்பினால் நேரில் சென்று பங்கேற்கலாம். அப்படி கடிதம் அனுப்பாத நிலையில் தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்றால் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் நாம் கலந்து கொண்டதாக பதிவு செய்யப்பட்டு விடும். எனவே, இதை தவிர்ப்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் கடிதம் வாயிலாக அதிமுகவின் கருத்துக்களை எழுதி கொடுத்து விடலாம் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
திருப்பதி, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பெணுமூரூ, அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராம். (வயது 30). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஜானகிராம் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். ஆன்லைன் விளையாட்டுக்காக தனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கினார். மேலும் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கினார். ஆன்லைனில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டுமென ஜானகிராமுக்கு நெருக்கடி அதிகரித்து வந்தது. மேலும் கடன் கொடுத்தவர்கள் மிரட்டத் தொடங்கினர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜானகிராம் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மக்கள் பெருக்கத்தை குறைக்க டோக்கியோவில் இருந்து வெளியேறும் குடும்பங்களுக்கு நிதியுதவி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மூன்றரை கோடி பேர் வசித்து வருகிறார்கள். அதேநேரம், நாட்டின் கிராம புறங்களில் மக்கள் தொகை குறைந்தபடி இருந்ததால் அதை தடுக்க கடந்த 2019-ம் ஆண்டு அரசு ஒரு திட்டத்தை தொடங்கியது. அதில் தலைநகர் டோக்கியோவில் இருந்து கிராம புறங்களுக்கு இடம் பெயர்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டு 71 பேரும், 2020-ம் ஆண்டு 290 பேரும் கடந்த ஆண்டு 1184 குடும்பங்களும் இடைம் பெயர்ந்தனர்.
இந்த நிலையில் தலைநகர் டோக்கியோவில் இருந்து வெளியேறும் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தலா ஒரு மில்லியன் யான் பணம் (இந்திய மதிப்பில் ரூ.6.33 லட்சம்) வழங்கப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்து உள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் டோக்கியோவில் இருந்து வெளியேறினால் 3 மில்லியன் யான் பணம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.