இந்திய பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அதுவரை புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் இனிமேல் செல்லாது என அறிவித்தார். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அதனால் அதனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று 58 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
இந்த அமர்வு நீதிமன்றத்தின் குளிர்கால விடுமுறைக்கு முன்பாக கடந்த ஆண்டு டிச.7 ஆம் தேதியில் வாதங்கள் அனைத்தையும் கேட்டுவிட்டு, தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில்,மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் மீண்டும் விபரீதம்: நெரிசலில் சிக்கி 3 பேர் பலி
ஆந்திரா மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. எதிர்க்கட்சியாக தெலங்குதேசம் கட்சி உள்ளது. 2024ஆம் நாடாளுமன்ற தேர்தலுடன் அங்கு சட்டமன்ற பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ளது. எனவே, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருகிறார். ஆளும் கட்சியை குறிவைத்து ‘நமது மாநிலத்திற்கு ஏன் இப்படிப்பட்ட தலை எழுத்து’ என்ற பெயரில் அவர் மாநிலம் தழுவிய பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று குண்டூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிலையில், அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சில நாள்களுக்கு முன்னர் நெல்லூரில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் சிக்கி பெண் உள்பட 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுக்கூட்டத்தின் போது, சமையல் எண்ணெய், அரிசி போன்ற பொருள்களை தெலுங்குதேசம் கட்சியினர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாகவும் அதை பெற மக்கள் முந்தியடித்து சென்றதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் வேலையின்மை 8.30% ஆக உயர்வு
இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம், இந்தியாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில் கடந்த நவம்பரில் வேலையின்மை 8 சதவீதமாக இருந்தது. அது டிசம்பர் மாதம் 8.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஹரியாணாவில் வேலையின்மை 37.4 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை 8.96 சதவீதத்திலிருந்து 10.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் கிராமப்புற வேலையின்மை 7.55 சதவீதத்திலிருந்து 7.44 சதவீதமாக குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இன்று முதல் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக ஆரம்பப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் மாணவ, மாணவிகளுக்கு திருத்தப்பட்ட அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் முதல் நாளில் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பின்தங்கிய பாடங்களில் கவனம் செலுத்தி அவர்கள் தேர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலுவை பாடங்களை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வைணவ கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவத் திருத்தலங்களான பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கோவிந்தா… கோவிந்தா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நேற்று இரவு 10 மணி முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் காத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு பிறகு கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் கூடியது.