மலை மேலிருந்து பல்லாயிரம் அடியில் பறந்து கீழே விழும் பேருந்து… இதில் துவங்குகிறது செம்பி திரைக்கதை.
அன்பு என்ற பேருந்தின் ஃப்ளாஷ்பேக்தான் செம்பியின் கதை. அந்தப் பேருந்தில் பலவிதமான மனிதர்கள். பலவிதமான உணர்வுகள். பலவிதமான செயல்கள் என பேருந்து பயணிகளின் வாழ்க்கையை பயணத்தின் வழியே சொல்லுகிறார் இயக்குநர் பிரபு சாலமன்.
இது போன்ற கதைக் களம் இயக்குநருக்கு புதிதல்ல. இயற்கை சார்ந்த பகுதிகளில் தனது திரைக்கதையை அமைப்பது அவருக்கு வழக்கம். இந்த முறை கொடைக்கானல் மலையை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏற்கனவே மைனா, கும்கி, கயல் என எளிய மக்களின் வாழ்க்கையை சுவாரசியமாக சொல்லியவர் இந்த முறையயும் எளிய மக்களின் வாழ்க்கையைதான் சொல்லியிருக்கிறார்.
செம்பியில் அந்த சுவாரசியம் இருக்கிறதா?
செம்பியின் பலம் அதன் கதாபாத்திரங்களில் இருக்கிறது.
அம்மாட்சியாக வீரத்தாய் கோவை சரளா தன்னுடைய கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். அவரது பேத்தி செம்பியாக நிலா.
கொடைக்கானல் புலியூர் கிராமத்தில் இவர்கள் இருவரும் வாழ்கிறர்கள். பழங்குடியின மக்களான இவர்கள் மலையில் கிடைக்கும் காடை முட்டை, தேன்,கிழங்கு போன்ற பொருட்களை எடுத்து வந்து சந்தையில் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்துபவர்கள்.
அப்படி ஒரு முறை தேன் எடுத்து சந்தையில் விற்க மலைப் பாதையில் நடந்துப் போகும் 10 வயது செம்பியை மூன்று இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்.
அந்த மூவரில் ஒருவன் பெரிய அரசியல்வாதியின் மகன். தன் மகன் தான் இந்தக் கொடுமையை செய்தவன் என்பது அரசியல்வாதிக்கு தெரியாது.
சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமையை முன் வைத்து அரசியல் செய்து ஆட்சியை பிடிக்கிறார் அந்த அரசியல் தலைவர். ஆட்சிக்கு வந்தப் பிறகு நடந்த உண்மை தெரிய வர, மகனையும் அவனது நண்பர்களையும் காப்பாற்ற முயற்சிகள் திரைக்கதையாக விரிகிறது.
பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க செம்பியின் பாட்டிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். பேரம் பேசும் காவல் துறை அதிகாரியை வேறுவழியின்றி தாக்கி கொன்றுவிட்டு அன்பு பேருந்தில் பேத்தி செம்பியுடன் தப்பிக்க பேருந்தில் ஏறுகிறார்.
பேருந்து பயணிகளில் ஒருவராக அஸ்வின் வருகிறார். அவருக்கு வழக்கறிஞர் கதாபாத்திரம். கடைசி வரை இவர் பெயர் தெரியாமலே கதை நகர்கிறது. செம்பிக்கும் பாட்டிக்கும் அவர் உதவுகிறார்.
நகைச்சுவை காட்சிகளிலேயே பார்த்துப் பழகிய கோவை சரளாவுக்கு செம்பியில் அழுத்தமான ரோல். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதே போல் செம்பியாக நடித்திருக்கும் சிறுமி நிலாவும் சிறப்பு.
படத்தில் பல நட்சத்திரங்கள். பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத். தம்பி ராமையா, கு.ஞானசம்பந்தன் என பட்டியல் நீளுகிறது.
இயற்கை அழகையும் வன்முறையின் கோரத்தையும் கவனமாக பதிவு செய்திருக்கிறது ஜீவனின் ஒளிப்பதிவு. இசை நிவாஸ் பிரசன்னா. காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது.
கடவுள் இக்கட்டான சூழலில் நமக்கு உதவுவார் என்று தனக்கே உண்டான பாணியில் இறை பக்தியை காட்டியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.
செம்பி – திரைக் கதையிலிருக்கும் சேதாரங்களை பொருட்படுத்தவில்லையென்றால் – தங்க கம்பி.