ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்
வருடம் இரண்டாயிரம்…
வட அமெரிக்காவில் பெரும் பரபரப்பு…
Survior எனப்படும் Reality Show ஒன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
போர்ணியோ காடுகளில் ஒரு கூட்டம் ஆட்களைக் கொண்டுபோய் விட்டு, எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவர்கள் எப்படித் தப்பிப் பிழைக்கிறார்கள் என்பதை நேரடியாகப் படம் பிடித்து ஒளிபரப்புகிறார்கள் என்று ஒரே பரபரப்பு. .
பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் எல்லாம் இந்தப் பரபரப்பு சொல்லி மாளாது. வேலையிடங்களில் பெரும் பேசுபொருளாகும் அளவுக்கு எங்கும் எதிலும் ‘சர்வைவர்’. இதுதான் இந்த வகையில் வட அமெரிக்காவில் முதலாவதானது.
ஆனால், இது ஒன்றும் அமெரிக்க தொலைக்காட்சி கண்டுபிடித்த அற்புதம் அல்ல. Expedition Robinson என்ற பெயரில் சுவீடிஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றை அமெரிக்காவில் இந்தப் பெயரில் புதிதாகத் தயாரித்து வெளியிட்டார்கள்.
புது உலகம் காண கடல் பயணம் போய், கப்பல் மூழ்கி எல்லாரும் இறந்த பின்னால், தீவு ஒன்றில் கரை ஒதுங்கி 28 வருடங்கள் வாழ்ந்த றொபின்சன் குரூசோ நாவல் கதை போன்று, இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றவர்களும் எந்த நவீன வசதிகளும் இல்லாத ஆதிவாசி வாழ்க்கை வாழ்வதைப் படம் பிடித்துக் காட்டுவற்காகத்தான் இத்தனை பில்டப்பும்.
அப்போது நான் அதீத ரொறன்ரோ ‘ஸ்டார்’ பத்திரிகை வாசகன். அதன் என்டர்டெய்ன்மென்ட் பகுதி மட்டும் எங்கள் ஊர் பத்திரிகைகள் சைஸில் இருக்கும். போதாக்குறைக்கு, மூன்றாம் பக்கத்து அரைகுறை ஆடையழகிகளில் மையல் கொண்டோர் வாங்கி வந்து வீசி எறிந்த ரொறன்ரோ ‘சண்’ வேலையிடத்தில் சாப்பாட்டு அறையில் இருக்கும். அதில் அந்த ஷோ பற்றி கிசுகிசுக்கள் வேறு.
தொலைக்காட்சிகளில் என்டர்டெய்ன்மென்ட் பகுதிகளில் ஆர்வலர், நிபுணர் உரையாடல்கள் என, கிட்டத்தட்ட வட அமெரிக்க வாழ்க்கையை இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
இவ்வளவு பரபரப்பும் அது நியாயமானது தான்.
தென் சீனக் கடற்பகுதியில் அமைந்துள்ள ஆசியாவின் பெரும் தீவு போர்ணியோ. இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய மூன்று நாடுகளும் பங்கு போடும் தீவு.
இங்குள்ள காடுகள் பற்றி பயமூட்டும் கர்ண பரம்பரைக் கதைகள் உள்ளன. அதில் மனிதர்களை உண்ணும் மனிதர்கள், கொடிய மிருகங்கள் மட்டுமின்றி, மனிதர்களை வளைத்துப் பிடித்து உறுஞ்சி, எலும்புக் கூட்டை வீசி எறியும் தாவரங்களும் இருப்பதாகவும், அந்தக் காட்டுக்குள் செல்பவர்கள் திரும்பி வருவதில்லை என்றும் அந்தக் காலத்து மித்திரனிலும் அது போன்ற பரபரப்பு பத்திரிகைகளிலும், மாயாவி சித்திரக் கதைகளிலும் வாசித்த ஞாபகம்.
அவ்வாறான ஒரு தீவில் எந்தவித வசதிகளும் உதவிகளும் இல்லாமல், கப்பலில் கொண்டு போய் ஒரு கூட்டம் ஆட்களை இறக்கி விட்டு, இதனுள் நீங்களே உணவு, உறையுள் எல்லாவற்றையும் தேடிக் கொள்ளுங்கள், நாங்கள் திரும்பி வரும்போது உங்களில் யார் தப்பியிருப்பார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்பது போல கதை விடும் போது, அது திகிலூட்டுவதாகத்தானே இருக்கும். அதைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும் போது வெற்றி பெறத்தானே செய்யும். இயற்கையோடு போராடி தப்பிப் பிழைத்த ஆதிமனிதர்கள் போல, இவர்களும் போராடுவதைப் பார்க்க மகாஜனங்கள் அவதிப்பட்டனர்.
ஆனால், வெறுமனே தப்பிப் பிழைத்தல் என்பது சுவாரசியம் இல்லாதிருக்கும் என்பதால், அந்த நிகழ்ச்சி விளையாட்டு வடிவத்தில்தான் இருந்தது. அதில் பங்கேற்றவர்களுக்கு வாக்களித்து ஒவ்வொருவராக வெளியேற்றுவதும் கடைசியில் ஒருவர் மிஞ்சுவதாகவும் அவருக்கே பரிசு கிடைப்பதாகவும் கதை இலாகா கதை பண்ணியது. அதிலும் கதாநாயகர்கள், வில்லர்கள், குணசித்திர நடிகர்கள், கவர்ச்சி நாயகிகள் என்று பல்வேறு பாத்திரப் படைப்புகள்.
தமிழில் என்றால் டூயட், குரூப் டான்ஸ் எல்லாம் இருந்திருக்கும்.
ஒரு தடவை பெரும் பரபரப்பு…
இருட்டில் மங்கிய ஒளியில் இருவர் உடலுறவு கொள்வது போன்ற காட்சி. மறுநாள் அவர்கள் உண்மையாகவே உடலுறவு கொண்டார்களா, இல்லையா என்பதே பெரும் பேச்சாக இருந்தது.
Did they? Or didn’t they?
நான் வெளிநாடு வந்த காலத்தில் ஐரோப்பிய தொலைக்காட்சிகளில் மல்யுத்தம் வெகுபிரபலமானதாக இருந்தது. World Wrestling Federation நடத்திய இந்த மல்யுத்தம் அகதிகளான நம்மவர் மத்தியிலும் பிரபலமானதாக இருந்தது. அதில் பிரபலமானவர்களின் பெயர்கள், அவர்களின் பாத்திரங்கள் சம்பந்தப்பட்ட கதைகள் என்பவற்றில் சக அகதிகள் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருந்தார்கள். எனக்கோ அதைப் பார்க்கச் சிரிப்பாக இருக்கும்.
இந்த மல்யுத்த நிகழ்ச்சி ரொறன்ரோவில் நான் வசித்த இடத்திற்கு அருகில், நான் தேடிப் பார்க்கும் கலைப் படங்களைத் திரையிடும் கார்ள்ட்டன் சினிமாவுக்கு பக்கத்தில் இருந்த, மிகவும் பிரபலமான விளையாட்டு அரங்கான Maple Leaf Gardens-இல் நடைபெறும். நான் படம் பார்க்கப் போகும் நாட்களில் வீதியில் நீளத்திற்கு டிக்கட் எடுக்க பார்வையாளர்கள் வரிசையில் காத்திருப்பார்கள். அதை உண்மையான ரியாலிட்டி நிகழ்ச்சியாக, திறமையை சார்ந்த விளையாட்டாக நம்பியவர்கள் தான் பெரும்பாலோர்.
இப்படியாகத் தான் சேர்வைவரும் ஓடிக் கொண்டிருந்தது. அதன் இறுதிக் காட்சி ஊடகங்களில் பெரும் பரபரப்பாக இருந்தது. அந்தக் கடைசிக் காட்சியை முழுமையாக 5.17 கோடிப் பேர் பார்த்திருக்கிறார்கள். சில பகுதிகளை பார்த்தவர்களையும் சேர்த்தால் 12.5 கோடிப் பேர் பார்த்திருப்பதாக ‘நீல்சன்’ நிறுவனம் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை சாதனையை பின்னால் வந்த இந்த நிகழ்ச்சியின் தொடர்கள் எதுவுமே முறியடிக்கவில்லை.
அந்தக் கடைசி நிகழ்ச்சியை மட்டும் நான் பார்த்தேன். பார்க்கத் தொடங்கியதுமே எனக்குச் சிரிப்புதான் வந்தது. அந்த நிகழ்ச்சி தயாரிப்பிற்கும் தொழில் நுட்பத்திற்கும் என சகல நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் இடங்கள், மின்வசதிகள் எதுவும் இல்லாமல், போட்டியாளர்களுடன் கேமராக்களை மரங்களிலோ கம்பங்களிலோ நட்டு விட்டு வெளியேறி இருக்க முடியாது.
அவர்கள் சகலரும் அங்கேயே உணவு, குளியல் வசதிகள் உட்பட்ட, ஆடம்பர வசதிகளுடன்தான் இருக்க வேண்டும். அவர்களால் நிச்சயம் கற்களை உரசி நெருப்பு உருவாக்கி, அணிலைக் கல்லால் அடித்து சுட்டு சாப்பிடும் கற்கால மனிதர்களாக முடியாது. அவர்களுக்கு என பிரத்தியேக சமையல்காரர்கள் உட்பட ஒரு ஹோட்டலில் இருக்கக் கூடிய வசதிகள் இருக்கும்.
ஆனால், இந்த போட்டியாளர்கள் ஆதிமனிதர்கள் மாதிரி இயற்கையோடு போட்டி போட்டு வாழ்கிறார்கள் என்ற அப்பட்டமான பொய்யை யதார்த்தம் என்று நம்பி இத்தனை கோடிப் பேர் பார்த்திருக்கிறார்களே என்றதும் எனக்கு சப் என்று போய் விட்டது.
மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போலவே, செயற்கையான காட்சியமைப்புகளோடு முன்தயாரிப்புகளுடனான கதை சொல்லல், எந்த சுவாரஷ்யமும் இல்லாத சிறுபிள்ளைத் தனமான போட்டிகளுடன்… படுமோசமான, செயற்கைத் தனமான நடிப்பு!
கடைசி விளையாட்டு ஒரு கம்பத்தை நீண்ட நேரமாகப் பிடித்து இருப்பது யார் என்ற போட்டி. அதில் இரு போட்டியாளர்களில் ஒருவர் தன்னினச் சேர்க்கையாளர், இன்னொருவர் அமெரிக்க மரைன் படைகளில் இருந்து இளைப்பாறியவர். கடைசியில் அந்த தன்னினச் சேர்க்கையாளர் தான் மில்லியன் டொலர் வென்றார்.
நீண்ட காலத்தின் பின்னர் அவர் அந்தப் பணத்திற்கு வரி கட்டவில்லை என்ற குற்றம் சாட்டப்பட்டு நான்கு வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றார்.
நிகழ்ச்சி தயாரிப்பு பற்றியும் பல தகவல்கள் வெளியாகின.
உண்மையில் போர்ணியோவின் மழைக்காடுகளுக்குள் இந்த நிகழ்ச்சி படமாக்கப்படவில்லை. போர்ணியோவிலிருந்து சற்று தள்ளியிருந்த தீவு ஒன்றில் தான் நடைபெற்றது. படப்பிடிப்பு நடப்பதற்கு முன்பாகவே அந்தப் பகுதியில் ஆபத்தான விடயங்களை அப்புறப்படுத்தி, கொடிய விலங்குகள் இருக்கின்றனவா என்றெல்லாம் செக் பண்ணி, தயாரிப்பு பிரிவினருக்கு சகல வசதிகளும் செய்து, காட்சிக்கான செட் போடப்பட்டுத் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
முதலாது சர்வைவரில் கலந்துகொள்ள ஆறாயிரம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் 800 பேருக்கு நேர்முகப்பரீட்சை வைத்து அதில் 48 பேரை தெரிவு செய்து, பின்னர் பதினெட்டுப் பேர் இறுதியில் தெரிவானார்கள். இவர்களை நிகழ்ச்சியில் காட்டப்பட்டதுபோல் கப்பலில் கொண்டு போய் போர்ணியோ காடுகளில் இறக்கி விட்டு வந்திருந்தால் யாருமே திரும்பி வந்திருக்க மாட்டார்கள்.
இந்த ஏமாற்றுவித்தையின் பின்னால் இருப்பது என்ன?
வழமை போல, பணம்.
பொய்யை உண்மை என்று நம்பி, இலகுவாக ஏமாறக் கூடிய ஒரு பெருங் கூட்டம். அதை வைத்துப் பணம் சம்பாதிக்கலாம்.
கேளிக்கை உலகம் விசித்திரமானது. அது பகட்டுகளைக் காட்டி ஏமாற்றுவது. ஒரு புறத்தில் உனக்கும் இப்படி ஒரு வாழ்வு கிடைக்கும் என்று ஏமாற்றும். உனக்கு கிடைக்காது என்று தெரிந்தாலும், அவ்வாறான ஒரு வாழ்வை கனவு கண்டு வாயைப் பிளந்து பிரமித்துக் கொள் என்று ஏமாற்றும்.
எந்த திறமைகளும் இல்லாமல் எத்தனையோ பேர் பில்லியனர்கள் ஆக இந்த கற்பனை உலகம் வழி வகுத்திருக்கிறது. Keeping Up With The Kardashian குடும்பத்தினரின் வாழ்க்கையைக் கண்டு பிரமித்துப் போய், தானும் பணம் படைத்தவராகவும் பிரபலமானவராகவும் (Rich and famous) ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்ற நினைப்பில், அதைப் பிரதி செய்யும் கனவோடு ஒரு தலைமுறையை ஊடகங்கள் உருவாக்கியிருக்கின்றன.
இதற்கெல்லாம் திறமை அவசியம் இல்லை என்றும் அழகாக, கவர்ச்சி காட்டினால் போதும் என்ற நினைப்புள்ள இளம் தலைமுறை ஒன்று இங்குண்டு. Famous for being famous ரோல் மொடல்கள் இங்கே எக்கச்சக்கம். அவர்கள் பற்றிய கிசுகிசுக்கள் கூட மாலை நேர முக்கிய செய்திகளாகி விடுகின்றன.
Tabloid show எனப்படும் சமூகச் சீரழிவையும் சிதைவுகளையும் பொதுவெளியில் கொண்டு வந்து பரபரப்புக்குள்ளாக்கியது Gerardo Riveraவாகத் தான் இருக்க வேண்டும். சென்சேஷனல் ஜேர்னலிசத்தின் மோசமான வடிவம் அது.
இந்த டப்லோய்ட் ஷோ வடிவம் வெற்றி பெற்று பார்வையாளர்களைக் குவிக்கத் தொடங்கியதும் பல்வேறு புதுப்புது ஷோக்கள் உருவாகின. சொற்ப பணத்திற்காகவும், இந்த பதினைந்து நிமிடப் புகழை நிரந்தரமாக்கலாம் என்ற கனவோடும், தங்கள் குடும்பங்களில் உள்ள சீரழிவுகளை, தங்கள் அழுக்குத் துணிகளை பகிரங்கமாக துவைக்க முன்வரும் ஒரு கூட்டத்தை தொலைக்காட்சிகளில் பகல் நேரங்களில் அதிகமாகக் காணலாம். இவர்களுள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்து, சிறுதொகைக்காக நடிக்க வைக்கப்பட்டு, சுரண்டப்படுவோரும் (Exploit) உண்டு.
இந்த காட்சிகளின் நெறியாளர்கள் எல்லாம் சமூகத்திற்கு இருக்கும் நெறிமுறைகள் எனப்படும் பிற்போக்குச் சிந்தனைகளுக்கு தாங்கள் தான் காவலர்கள் என்பது போல, அதே பிற்போக்குச் சிந்தனை கொண்ட பார்வையாளர்களின் பிரதிநிதியாக இருந்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருப்பார்கள்.
இந்த நிகழ்ச்சிகள் தான் தமிழ்நாட்டின் ‘என்னம்மா, இப்படிப் பண்ணீட்டீங்களேம்மா!’ வகைகளின் நதி மூலங்கள்.
இப்படியான ஷோக்களில் கலந்துகொள்வது ரிச் அன்ட் பேமஸ் ஆவதற்கான குறுக்கு வழி என்றும், லாட்டரி சீட்டுகளில் போல தங்களுக்கும் பரிசு கிட்டலாம் என்ற நினைப்பிலும் பலர் கலந்துகொள்கிறார்கள்.
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் தங்களது கதைக்கு தகுந்தவர்களாக வரக் கூடிய பரபரப்பான கதாபாத்திரங்களையே, சமூகத்தில் முரணான கலர்புல்லான வரலாறு கொண்டவர்களையே தெரிவு செய்வார்கள். அவர்களைச் சுற்றித்தான் கதைகளைக் கட்டமைக்க முடியும்.
சுவாரசியம் இல்லாத சாதாரண பொதுமக்களையோ, நல்ல பண்புகளை உடையவர்களையோ அங்கே காட்டினால் யாருக்கு ஆர்வம் இருக்கும்?
மனிதர்கள், யாருமே பார்க்காத போது நடந்து கொள்வதற்கும், காமிராக்களின் கண்காணிப்புகளின் போது நடந்து கொள்வதற்கும் எப்போதுமே வித்தியாசம் இருக்கும். கண்காணிப்புக் காமிராக்களுக்கு பயந்து திருடாதவர்கள், யாருமே பார்க்கவில்லை என்றால் திருடக் கூடும்.
ஒரே இடத்தில் வெளியேறும் வாய்ப்புகளின் இன்றி அடைக்கப்பட்டவர்கள், தங்களை 24 மணி நேரமும் காமிராக்களின் பதிவு செய்து கொண்டிருக்கிறது என்று தெரிந்த நிலையில் மற்றவர்களோடு உறவாடும் போது அவர்களின் செயற்பாடுகள் இயற்கையாக இருக்குமா?
தங்களைப் பற்றி மற்றவர்களின் கணிப்பீடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அதற்குத் தகுந்த மாதிரி செயற்கையாகத் தானே நடந்து கொள்வார்கள்.
இத்தனை போட்டியாளர்கள், எத்தனையோ காமிராக்கள்.
24 மணி நேரக் கண்காணிப்பு.
எத்தனை மணி நேர படப்பிடிப்பு?
அதெல்லாம் வெட்டி ஒட்டப்பட்டு, எவ்வளவு நேரம் ஒளிபரப்பாகிறது?
இந்தப் படப்பிடிப்பில் இருந்து தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான கதை ஒன்றை உருவாக்குவதில் என்ன சிக்கல் இருக்கும்?
பார்வையாளர்களை உணர்வு ரீதியாக ஒன்றிக்க வைப்பதற்கான கதை ஒன்றை அவர்கள் இலகுவாக உருவாக்கிக் கொள்ளலாம். இந்த நாள் முழுவதுமான ஊடாட்டத்தில் பார்வையாளர்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் தீர்மானிப்பதையே ஒளிபரப்புகிறார்கள்.
கதாநாயகர்கள், வில்லர்கள், வெற்றி பெறச் சந்தர்ப்பம் இல்லாத underdog, அனுதாபம் பெற வைக்கும் குணசித்திர நடிகர்கள் என்று இத்தனை மணி நேர வீடியோவுக்குள் தங்களுக்கு விருப்பமான வகையில் வெட்டிப் பொருத்தலாம்.
அதன் வெற்றி பார்வையாளர்களை உணர்வு பூர்வமாக அதனோடு ஒன்றித்துப் போக வைப்பதில் தான் இருக்கும். பார்வையாளர்களுக்கு தகுந்த மாதிரி, அவர்களுக்குப் பிடித்தமான கதாபாத்திரங்கள் உருவாக்கப்படும். இதுவே பார்வையாளர்களின் வாக்களிப்பு ஆகும் போது, பெரும் பரபரப்பு உண்டாகும்.
பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு பாதகம் நிகழுமாயின், தங்களுக்குப் பிடித்த முடிவுக்காக பார்வையாளர்களின் பெரும்பான்மை விருப்பையும் மீறி தயாரிப்பாளர்கள் ஆட்களை வெளியேற்றுவர். முடிவை மாற்றியமைப்பர்.
சேர்வைவரில் இடையில் வெளியேற்றப்பட்ட பெண் ஒருவர் தன்னை திட்டமிட்டு வெளியேற்றியதன் மூலம் முடிவை மாற்றியதாகவும், தன்னோடு போட்டியிட்ட இருவரை தன்னை வெளியேற்றுவதற்காக வாக்களிக்கும்படி நிர்ப்பந்தித்ததாகவும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதெல்லாம் பார்வையாளர் ரேட்டிங்கும், அதனால் வரும் விளம்பரங்களும் லாபங்களும் சம்பந்தமானது.
இதை யதார்த்தமானதாக கட்டமைப்பதில் தான் இந்த நிகழ்ச்சிகளின் வெற்றி தங்கியிருக்கிறது.
போட்டிகளாக நடக்கும் ரியலிட்டி ஷோக்களில் பங்குபற்றுவோரை அவமானப்படுத்தி, exploit பண்ணுதல், எந்த திறமையும் இல்லாதவர்களை celebrities ஆக்குதல், மோசமான நடத்தைகளை ஏற்றுக் கொள்ளக்கூடியனவாக்குதல், மோசமான பரபரப்பான நடவடிக்கைகள் செய்வோரை மட்டுமே முதன்மைப்படுத்துவது, கதைக்கு சுவாரஷ்யம் ஊட்டுவதற்காக சண்டைகளை உருவாக்குவது, வெவ்வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட படங்களோடு வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட ஒலிகளை இணைப்பது, வெவ்வேறு நேரக் காட்சிகளை தொடர்ச்சியானதாகக் காட்டுவது, பங்காளர்கள் வேறுவேறு இடங்களில் சொன்னதை இணைத்து, அவர்கள் சொல்லாத ஒன்றை உருவாக்குவது என பல்வேறு தில்லுமுல்லுகளால் தான் இந்த நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுகின்றன.
முதலாவது சர்வைவர் நிகழ்ச்சி உட்பட்ட பல்வேறு ‘ரியாலிட்டி ஷோ’ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்கிய Mark Burnett சொல்கிறார்… ‘நான் நல்ல கதைகளைச் சொல்கிறேன். அது உண்மையில் கதை வசனம் எழுதப்படாத நாடகம்.’ (‘I tell good stories. This really is not reality TV. It really is unscripted drama.’)
எந்த விதமான professionalismமும் இல்லாமல் அமெச்சூர் தனமான படுமோசமாக படம் பிடிக்கப்படும் சீரியல்களில் ஒன்றித்துப் போய், அந்தக் கதாபாத்திரங்களுக்காக அழுது கோபப்பட்டுக் கொள்ளும் இல்லத்தரசிகள் போல, இந்தக் கதைகளும் எத்தனை தடவையும் திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிக்காத திருவிழாக்காலப் புராணப் படிப்பு மாதிரி கவர்ந்திழுப்பன.
Apprentice என்ற ரியலிட்டி நிகழ்ச்சியை நடத்திய டொனால்ட் ட்ரம்ப் ஒரு வில்லனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அதில் அவர் சொல்லும் You are fired! என்னும் பஞ்ச் டயலாக் மிகவும் பிரபலம். அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்கு, அவரது அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்த கவனிப்பு பெரும் பங்கு வகித்திருந்தது.
இருபது வருடங்களுக்கு முன்னான றியலிட்டி ஷோக்கள் போலன்றி, தற்போதைய நிகழ்ச்சிகளுக்குப் போட்டியாக வலைத்தளங்களில் றியலிட்டி நட்சத்திரங்கள் உருவாகி விட்டார்கள். டிக்டொக் நட்சத்திரங்களின் றியலிட்டி ஷோக்கள் என்பது கூட பெரும் வணிகம் ஆகி விட்டது.
புராண காலத்து கற்பனைக் கதைகள் கொலை செய்யும் வெறி ஏற்படுத்தக் கூடிய மதங்களாகும் அளவுக்கு உண்மையாக நம்பப்படுவதும், பிரபலங்கள் பற்றிய கிசுகிசுக்கள் பொதுவெளியில் ஏற்படுத்தும் ஆர்வம் போலவே, பக்கத்து வீட்டு அந்தரங்கங்களுக்குள் மூக்கை நுழைப்பதுமாகவும் சமூக இயல்பு இருக்கிறது.
பக்கத்து வீட்டில் நடப்பதை வேலிக்கு மேலால் எட்டிப் பார்ப்பதில் கிடைக்கும் சுய இன்பம் போன்றது தான் இன்றைய பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி தினசரி அறிந்துகொள்ள ஏற்படும் துடிப்பு. இதற்கு தீனி போட, பணம் சம்பாதிப்பதற்காக தங்கள் படுக்கை அறைக்குள்ளும் காமிராக்களை பொருத்த தயாராக பலர் இருக்கிறார்கள்.
அமெரிக்காவிலேயே இவ்வாறான நிகழ்ச்சிகளை உண்மை என்று நம்பி, ரியாலிட்டி நிகழ்ச்சி தந்த புகழ் காரணமாக டொனால்ட் ட்ரம்பை ஜனாதிபதியாக தெரிவு செய்த போது, தங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபா போடப்படும் என்பதை நம்பி வாக்குப் போட்டு பிரதமரை தெரிவு செய்யும் நாட்டில் பிக்பாஸ்கள் மூளைச் சலவை செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?