தமிழ்நாடு அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் சார்ந்த அனைத்து தரவுகளையும் பொது விநியோக துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பொது மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அந்தந்த துறைகள் தனித் தனியாக தரவுகளை சேமித்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் தரவுகளைக் கொண்டு, ஒருங்கிணைப்பு மாநில குடும்பத் தரவு தளத்தை தயார் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பணியை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்யவுள்ளது. இதில் அனைத்து துறைகளின் தரவுகளையும் ஒருங்கிணைந்து இந்தத் தரவு தளம் உருவாக்கப்படவுள்ளது.
இதில் ஆதார் எண் போல் ஒவ்வொரு குடிமக்களுக்கும் ‘மக்கள் ஐடி’ என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தரவுத் தளத்தை தயார் செய்வதற்கான டெண்டரை மின் ஆளுமை முகமை கோரியுள்ளது.
அதிமுகவை பா.ஜ.க. கட்டுப்படுத்தவில்லை! – எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்குசாவடி அளவில் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும். ஓபிஎஸ் பண்த்தை கொடுத்து கூட்டத்தை கூட்டி உள்ளார். திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார். கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்து கொள்ளும். அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். அதிமுகவை பாஜக எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை. தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது” என்றார்.
ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எம். ரவியை சபாநாயகர் அப்பாவு இன்று சந்தித்து பேசினார். 2023-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 9-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு கூடும் சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று உரை நிகழ்த்துவார். ஆளுநர் ஆர்.என். ரவி 9-ந்தேதி சட்டசபையில் உரையாற்ற இருப்பதையொட்டி சம்பிரதாயப்படி அவரை சபாநாயகர் நேரில் சென்று அழைப்பு விடுக்க வேண்டும். அந்த மரபுப்படி சபாநாயகர் அப்பாவு இன்று கிண்டி மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையில் உரையாற்ற வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
நாய்க்கு பாலியல் துன்புறுத்தல்: இலங்கை ஜனாதிபதி ஆலோசகர் மீது குற்றச்சாட்டு
இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக இருந்தவருமான ரான ஆஷு மாரசிங்க மீது, நாய் ஒன்றை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆஷு மாரசிங்க தனது முன்னாள் காதலியின் நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கடந்த 23ஆம் தேதி ஊடக சந்திப்பொன்றில், ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆஷு மாரசிங்கவின் முன்னாள் காதலி என கூறப்படும் ஆதர்ஷா கரந்தனா ஆகியோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆஷு மாரசிங்க நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில், இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவின் தேசிய அமைப்பாளருமான ஹிருணிகா பிரேமசந்திர, இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி, நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.