கிரிக்கெட்டில் ஒரு அணியின் வெற்றி – தோல்வியை நிர்ணயிப்பதில் அதன் கேப்டனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இக்கட்டான நேரத்தில் ஒரு கேப்டன் எடுக்கும் முடிவுகள் அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்கும். அந்த வகையில் ஐபிஎல்லில் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தவர் ‘தல’ தோனி.
ஐபிஎல் ஆரம்பித்தது முதல் 2021-ம் ஆண்டுவரை மற்ற அணிகளெல்லாம் கேப்டனை மாற்றியபோதிலும், தோனிதான் கேப்டன் என்பதில் சிஎஸ்கே உறுதியாக இருந்தது. அவரது தலைமையில் சிஎஸ்கே அணி 4 முறை பட்டம் வென்றதுடன் பலமுறை ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது.
ஆனால், கடந்த ஆண்டில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்தார் தோனி. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தைக் கொடுத்தது. தான் அணியில் இருக்கும்போதே, புதிய கேப்டனை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜடேஜேவைக் கேப்டனாக்கச் சொன்னர். ஆனால் கேப்டனாக இருந்து பழக்கப்படாத ஜடேஜாவால் இந்தச் சுமையை தாங்க முடியவில்லை. அணியை வழிநடத்த முடியாமல் திணறினார். கேப்டன் பதவி அழுத்தத்தினால் அவரது ஆட்டமும் பாதிக்கப்பட்டது.
இதனால் கடந்த ஆண்டில் சிஎஸ்கே அணி முதல் பாதி ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. இதனால் தொடரின் பாதியில் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கேப்டன் பதவி மீண்டும் தோனி வசம் சென்றது. ஆனால் அதிகபட்சம் இந்த ஆண்டில் மட்டுமே தோனியால் அணிக்கு கேப்டனாக செயல்பட முடியும் என்ற நிலையில் மீண்டும் புதிய கேப்டனை தேடிக்கொண்டு இருக்கிறது சிஎஸ்கே.
சிஎஸ்கேயின் கேப்டன் யார் என்ற குழப்பம் தீர்க்கப்படாமலேயே 2023-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடைபெற்றது. இதில் பென் ஸ்டோக்ஸை வாங்கியது.
சிஎஸ்கேயின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ்தான் என்று அடித்துச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதற்கான காரணங்களையும் கூறுகிறார்கள்.
ஒரு சிறந்த கேப்டனை வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சிஎஸ்கே நிர்வாகக் குழு 16.25 கோடி ரூபாயைக் கொடுத்து பென் ஸ்டோக்ஸை வாங்கியது. இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ், அந்த அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர். அத்துடன் இக்கட்டான பல சூழல்களில் தனி நபராக நின்று இங்கிலாந்து அணியை கரைசேர்த்த பெருமையும் பென் ஸ்டோக்ஸுக்கு உண்டு. இதுபோன்ற காரணங்களால்தான் பென் ஸ்டோக்ஸை அதிக விலைகொடுத்து வாங்கி இருக்கிறது சிஎஸ்கே.
இந்த தொடரின் ஆரம்பத்திலோ அல்லது மத்தியிலோ அணியின் தலைமைப் பொறுப்பை பென் ஸ்டோக்ஸிடம் தோனி ஒப்படைப்பார். பின்னர் ஒரு சாதாரண வீரராக இருந்து அணியை வழிநடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி, தோனியின் கடைசி தொடராக இருக்கும் என்பதால் அடுத்த ஆண்டில் அணியின் முழு பொறுப்பையும் பென் ஸ்டோக்ஸ் ஏற்பார் என்று பென் ஸ்டோக்ஸ் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில் பென் ஸ்டோக்ஸைவிட அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக்கவே அணி நிர்வாகம் விரும்புவதாக மற்றொரு கருத்தும் இருக்கிறது.
ருதுராஜுக்கு கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ள இளம் வீரராக ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். நம்பிக்கையான தொடக்க ஆட்டக்காரரான அவர் நீண்ட காலமாக அணியில் இருப்பதால், சிஎஸ்கேவின் கலாச்சாரம் முழுமையாக தெரிந்தவர். தோனி மட்டுமின்றி பயிற்சியாளர் பிளம்மிங், தற்போது துணை பயிற்சியாளராக பொறுப்பேற்கும் பிராவோ ஆகியோருக்கும் நெருக்கமானவர். ஜடேஜாவைப் போல் அனுபவம் இல்லாத கேப்டனாக ருதுராஜ் இல்லை. ஏற்கெனவே மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக இருந்து பல வெற்றிகளை அவர் வாங்கிக் கொடுத்துள்ளார். அத்துடன் அவர் இளம் வீரராகவும் இருப்பதால் அடுத்த 5 ஆண்டுகளுக்காவது அவரை கேப்டனாக வைத்திருக்க முடியும். அதனால் பென் ஸ்டோஸுக்கு பதில் ருதுராஜை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இந்த ஐபிஎல் போட்டியில் வேண்டுமானால் பென் ஸ்டோக்ஸ் முழுமையாக ஆடுவார் ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐபிஎல் நடக்கும் காலகட்டத்தில் இங்கிலாந்து அணி சர்வதேச போட்டிகளில் ஆடினால், ஸ்டோக்ஸ் அங்கே போய்விடுவார். இதனால் திடீர் வெற்றிடம் ஏற்படும். எனவே அவரை அவசரப்பட்டு கேப்டனாக்க வேண்டாம் என்பதும் அவர்கள் வைக்கும் கூடுதல் வாதமாக இருக்கிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் ருதுராஜ்கே கேப்டனாக வாய்ப்பு அதிகம் இருப்பது போல் தோன்றுகிறது. தோனி, ஸ்டோக்ஸ் இருவர் ஆலோசனைகளையும் வாங்கிக் கொண்டு சிறப்பாக கேப்டன்ஷிப் பண்ண முடியும்.
சிஎஸ்கே போன்ற மக்களின் பெரும் ஆதரவு பெற்ற அணியின் கேப்டனுக்கு இருக்கும் அழுத்தத்தை இளம் வீரரான ருதுராஜ் தாங்குவாரா….அந்த அழுத்தம் அவர் ஆட்டத்தை பாதித்துவிடுமா என்ற சந்தேகங்கள் மட்டுமே ருதுராஜ்க்கும் கேப்டன்ஷிப்க்கும் குறுக்கே நிற்கிறது.