கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா, “கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். புதிய வகை கொரோனா பரவலை தீவ்ரமாக கண்காணித்து வருகிறோம் . புதிய கொரோனா வகையை கண்டறிய சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது. சீனா கொரோனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது” என்றார்.
கொரோனா அச்சுறுத்தல்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவமால் தடுப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சீன நிலவரம் கவலை அளிக்கிறது: உலக சுகாதார நிறுவன தலைவர்
திர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
“சீன அரசு கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவமனையில் நோயாளிகள் அதிகமாகும் விகிதம், இறப்பு விகிதம், தீவிர சிகிச்சைக்கான தேவை குறித்த விவரங்களை பகிய வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்திப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்து பேசினார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் பயணமாக நேற்று அமெரிக்காவுக்கு சென்றார். போர் தொடங்கியதற்கு பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்து ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து பேசிய ஜெலன்ஸ்கி, “அமெரிக்க காங்கிரசின் ஆதரவுக்கு நன்றி. ஜனாதிபதிக்கு மிக்க நன்றி, இரு கட்சி ஆதரவுக்கு நன்றி, எங்கள் சாதாரண மக்களின் சார்பாக , அமெரிக்கா மக்களுக்கும் நன்றி” என்றார்.
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போடுபவர்களை காலில் போட்டு மிதிப்போம் – செல்லூர் ராஜூ
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு போடுபவர்கள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம். இந்த இயக்கத்தை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு தெய்வ பிறவி. அவருடைய சிலையில் காவித்துண்டை போடுபவர்கள் மனித பிறவி அல்ல ,ஒரு இழிவான பிறவி.
காவித் துண்டை எங்கு போட வேண்டுமோ அங்கு போட வேண்டும். குங்குமத்தை நெற்றியில் தான் வைக்க வேண்டும். அதை தரையில் போட்டு மிதிக்க கூடாது. அது போல நாடு போற்றும் மக்கள் தலைவரை காவி துண்டு போட்டு கொச்சைப்படுத்துபவர்கள் இழிவான பிறவிகள்இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம்” என்றார்.