No menu items!

புத்தகம் படிப்போம்: யாழ்ப்பாணப் பார்வை

புத்தகம் படிப்போம்: யாழ்ப்பாணப் பார்வை

சச்சிதானந்தன் சுகிர்தராஜா

இந்தத் தலைப்பு செல்வத்தின் புத்தகத்தில் வரும் வரியிலிருந்து எடுக்கப்பட்டது. ‘பார்க்கத்தகாத ஒரு இக்கட்டான சுழலில் ‘யாழ்ப்பாணப் பார்வை’யை வீசி எங்களைப் பார்த்துக் கொண்டு நின்றார்’ என்று செல்வம் எழுதுகிறார். இந்த யாழ்ப்பாணப் பார்வையைதான் செல்வம் கலாதியாக, அவருடைய கலகலப்பான அதே நேரத்தில் கவலை தரும் தொனியில் இந்தப் பிரதியில் பதிவு செய்திருக்கிறார். தமிழரின் வாழ்வில் இரண்டு அம்சங்கள் தான் தொடர்ந்து சுழண்டுகொண்டு இருகின்றன. ஒன்று காதல், மற்றது மோதல். இந்த நூலில் இது இரண்டும் உண்டு. இரண்டுமே தோல்வியில் முடிவடைகின்றன. ஆனால், இது ஒரு நிறைவான புத்தகம், மற்றும் விடுதலை அளிக்கும் புத்தகம்.

இந்த எழுத்து துன்பமும் இன்பமும் வலியும் பகடியும் நிறைந்த ஒரு நினைவு கூறல். இங்கே சொல்லப்பட்டவை எந்த ஒரு சரித்திரப் புத்தகத்திலும் பதிவு செய்யபடப்போவது அல்ல. ஆனால், இவை ஈழத்தமிழரின் வாழ்வில் நடந்தவை. ஒரு இனம் ஒரு காலகட்டத்தில் அனுபவித்த, வியப்புகளும் விக்கினங்களும் வியாகுலங்களும் அவர்களின் பலமும் பலகீனமும் எந்தவிதத் தீர்ப்பும் இல்லாமல் இங்கே சொல்லப்படுகிறது. இங்கே கூறப்பட்டது ஒரு சிலரின் நினைவுகளில் இன்னும் இருக்கலாம். செல்வத்தின் எழுத்து அந்த சரித்திரத்தை ஆவணப் படுத்தியது மட்டுமல்ல இந்தச் சம்பவங்கள் அவரை என்ன ஆளாக மாற்றியதும் என்றும் கூறுகிறது. இங்கே கூறப்பட்டவை சும்மா நினைவலைகளோ ஞாபக்குறிப்புகளோ அல்ல. அதற்குள்ளாக ஒரு கதையமைப்பையும் கருவையும் உருவாக்கி ஒரு இலக்கிய செளந்திரியத்தைக் கொடுத்திருக்கிறார். பக்தித்தன்மை இல்லாமல் பழங்கால நினைவுகளை ஒரு கலையம்சம் கொண்ட கெடித்தனமான ஒரு புனைவிலக்கியமாக செல்வம் மாற்றியிருக்கிறார். இந்த நூலில் வரும் மனிதர்கள் உன்மையான மாந்தர்களாகவே இருக்கலாம். செல்வத்தின் எழுத்தில் சுவைநலஞ் சான்றவர்களாக வடிவமைக்கப்பட்டிருகிறார்கள்.

இந்த நாவல் தொன்மம், காதல், யாழ்ப்பாண சாதி அடுக்குகள், மற்றும் அரசியல் பிரதிபலிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள மிகவும் வியக்கத்தக்க இலக்கிய இணைவு. ”யாழ்பாணத்தான், மட்டக்களப்பான், மன்னாரான் என்ற வேற்றுமையே மறைஞ்சு” , அவன் சிங்களவன், இவன் முஸ்லீம், அவன் யாழ்ப்பாணத்தான், இவன் கிழக்கான், மற்றவன் மலை நாட்டான் எண்டு பிரிஞ்சு நிற்க விரும்பாத கனவியலான இலங்கை இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது..

தனக்கே உரித்தான ஒரு பாணியை செல்வம் உருவாக்கி இருக்கிறார். சமகாலத்தின் நேரடி விமர்சனமாக நல்ல கதையை எழுதமுடியும் என்று செல்வம் நிரூபித்திருக்கிறார். செல்வம் அவர்களின் வழக்கமான ஏக்கம் மற்றும் நுணுக்கமான சமூக, அரசியல் அவதானிப்பு கலவையுடன் எழுதப்பட்டுள்ளது.

மழை தூறியபோது பெய்த மழையை மறைக்க குடைபிடித்துக்கொண்டு நின்ற பத்மினி உள்ளே வாருங்கள் என்ற அவரின் வார்த்தைளிலும் அரசியல்வாதிகள் சொல்லுற மாதிரி, ‘ஒரு குடையின் கீழ் வாருங்கள்’ என்ற கோசத்தின்ரை உண்மையை அண்டைக்கு விளங்கிக் கொண்டன் என்ற வார்த்தைகளில் பகிடியும் இருக்கிறது அரசியல்வாதிகள் பற்றிய ஏளன இகல்ச்சியுமிருக்கிறது. மதசார்பற்ற எழுதிலும் இறையியல் கருத்து எதிரலையையும் பார்க்கலாம். ‘காரிருளில் பேரொளியைக் கண்டேன்’ என்ற வேதவாக்கியம் இதற்கு மேதகு எடுத்துகாட்டு.

இந்தக் கதையில் 70களில் யாழ்ப்பாணத்தைக் காணலாம். அப்போது 65 சதத்தில் சினிமா பார்க்கமுடிந்தது. அதைவிட எல்லாவற்றிக்கும் யாழ்ப்பாண இளைஞர்கள் முன் வரிசையில் நிற்கவேண்டியிருந்த நாட்கள் இவை. இந்தக் கலாச்சார அப்பியாசத்தை செல்வத்தின் வரிகளிலேயே தருகிறென்: ’நான் அறிஞ்சு எங்கட இளைஞர்கள் முன்வரிசைக்கு நிக்கிறது நினைவுக்கு வந்தது. எப்பிடியாவது படிச்சு பலகலைகழகம் போக வேணும் எண்டு ரீயூசன் போனா… அங்க முன்வரிசை. மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய்ப் பிழைக்கிறத்துக்காக ஏஜேன்சிய ளுக்கு முன்வரிசை… பிறகு போராட்டம் செய்து அடிமை விலங்கறுக்கப் போறம் எண்டு இயக்கங்களிலை இணையுறத்துக்கு முன் வரிசை…’ சினிமா தியட்டரில் படம் பார்த்துவிட்டி மூத்திரமடிக்க அங்கேயும் முதல் வரிசை. நீங்கள் படித்த கடைசி வரி செல்வத்துடையதல்ல. நான் சும்மா சேர்த்துக்கொண்டது.

ஈழத்து எழுத்துக்களில் இரண்டு சங்கதிகள் முக்கியமாக இருக்கும். விடுதலை இயங்கங்கள், யாழ்ப்பாண சாதியீயம். இவை இல்லாவிட்டால் ஒடியல் மா போடாத யாழ்பாண கூழ் போலிருக்கும். “ஆனால் என்ன… ஒருவன் போராட முன்னுக்கு வந்தால் ஒன்பது பேர் காட்டிக்கொடுக்க நிற்கிறாங்கள்”; ”விடுதலைப் போராட்டம் தொடங்க முதலே காட்டிக்கொடுக்கும் போராட்டம் தொடங்கிவிட்டது” ;”மார்ட்டின் போனால் என்ன..? யோகேஸ்வரன் வந்தால் என்ன..? இந்தப் பிரச்சினையை ஆரும் தீர்க்கப் போறது இல்லை”, என்ற வார்த்தைகள் அரசியல்வாதிகள், இயக்கங்கள் பற்றி யாழ்ப்பாணத்தானின் உள்ளார்த்த ஏளன இகழ்ச்சியும் வெறுப்பும் எமாற்றமும் சந்தேகமும் தெரிகிறது.

‘தமிழர்களுக்கு இனி கஸ்ரம் தான்… ஆயுதம் வந்துவிட்டதெல்லே’ என்ற இந்த வரிகள் அ.சிவானந்தனின் ஆங்கில நாவலிலின் தீர்க்கதரிசனமான கடைசிப் பத்தியை நினைவூட்டுகிறது. தூப்பாக்கிகளின் காலம் ஆரம்பமாகிவிட்டது. இப்போது யோகியின் கையில் தூப்பாக்கி இருந்தது. யோகியின் எளிர்ச்சியுடன் அறப்போராட்டம் முடிந்துவிட்டது. இனி தமிழரின் விமோசனத்திற்கு ஆயுதந்தான் விடை என்று சிவானந்தனின் நாவல் முடிவடைகிறது. ஈழத்தமிழர் வாழ்வில் தூப்பாக்கிக் கலாச்சாரம் புகுந்த பின் செல்வத்தின் வாழ்க்கையில் என்ன நடந்தது? அதை அவரே சொல்லட்டும்: “உண்மையிலை நான் யாழ்பாணத்தை விட்டு வெளிகிட்டதுக்கு பத்மினியின்ர பிரச்சினை மட்டும் காரணமில்லை. தமிரழசுக்கட்சி அரசியலை தாண்டி, ஆயதப் போரட்ட ஆயுத்தங்கள் நடக்கத் தொடங்கியதை நான் உணரத் தொடங்கினன். காலமும் வயதும் சூழலும் சாதகமாக அமைய, எனக்கும் அதோட ஒரு மெல்லிய தொடர்பு இருந்தது. அத்தோட நானும் சேர்ந்து இறுகி விடுவேனோ எண்டும் அச்சப்பட்டன். ” இந்த அச்சம் அந்த நாட்களில் பல ஈழத் தமிழர்களுக்கு இருந்திருக்கிறது.

இந்தப் பக்கங்களில் நிறைய சாதீயம் பேசப்படுகிறது. இங்கே சாதி பார்க்கிறவர்கள் வழமையான கெட்ட மனிதர்களான யாழ்ப்பாண வெள்ளாளர்கள் அல்ல. ஒடுக்கப்பட்டவர்களே ஒடுக்கப்பட்டவர்களை வம்சிக்கிறார்கள். கீழே நான் தந்திருக்கும் வரிகளை வாசியுங்கள்: ”இண்டைக்கும் மீன் பிடிச்சுக்கொண்டிருக்கிற உங்கட குடும்பங்களுக்கு இது பிரச் சினையில்லாமல் இருக்கலாம். இப்ப உத் தியோகம் பார்த்தாலும் சுண்ணாம்பு எரிச் சுக் கூலி வேலை செய்யிற பரம்பரையிலை போய் சம்மந்தம் செய்யிறது எங்கட சாதிக்கே அழகில்லைத் தெரியுமோ” ; ”உங்கடை பேரன்மார் வெறும் மேலோடை தொழிலுக்குப் போன காலத் திலை லோங்ஸ் சேட் போட்டு உத்தியோகத்திற்கு போன பரம்பரை நாங்கள்.” இவை இரண்டும் பத்மினியின் அக்கா சொன் பொன் மொழிகள்.”வெளிநாட்டுக்குப் போனால் நான் மேலோங்கி ஆகிவிடுவேனோ’ எண்டு சொல்லி சொல்லி அவவை என் மடியில் சரிச்சன்” என்ற செல்வத்தின் வரிகளில் வலியும் தெரிகிறது, அவரின் வல்லமையற்ற தன்மையும் தெரிகிறது.

இந்த எழுத்தில் போதாமையே இல்லையா? மனிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் ஏராளமான பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தொங்கவிட்டப் பட்டது போல், செல்வதின் ஆக்கத்திலும் உரிப்பட்ட கதாபாத்திரங்கள் உலவுகிறார்கள். அவர்கள் எல்லாம் இப்போ எங்கே. சாதிகட்டுப்பட்டுக்குள் செல்வத்தை வைத்துக்கொள்ளப் பார்த்த ஜோசேப்பு மஸ்டர் என்னவனார்? இவருக்கும் பத்மினிக்கும் இடையே நின்று சாதியம் பேசிய அவருடைய சகோதரியின் சாதீய வெறுப்பு நிலை யாழ்ப்பான மனிக்கூடு உயரத்தைத் தொட்டுவிடதா அல்லது நிலாவெளி கினறின் அடித்தளத்துக்குச் சென்று தனிந்துவிட்டதா? செல்வமீது கண்வைத்த அந்த மன்னார் பெண் எங்கே? யாழ்ப்பாணதில் வாழ்வதற்கு ஒருவர் நல்ல சாதியாயிருக்கவேண்டும், அல்லது பணக்காரராக இருக்கவேண்டும் இவை இரண்டும் இல்லாவிட்டால் சண்டியராக இருக்கவேண்டும் என்று சொன்ன சந்திரனின் கதி என்ன?

பொன்னியின் செல்வன் பற்றி எழுந்த கேள்வி செல்வத்தின் நூலுக்கும் பொருந்தும். ஒரு கதை அகநிலை மற்றும் கற்பனையில் மூழ்கி வரலாற்றை எழுதினால் அது சரித்திரத்திக்குத் துரோகம் செய்கிறதா? வெளிப்படுத்துகிறதா? ஆலன் சீலியின் அசோக்கா நாவலில் வரும் புத்தர் இப்படிக் கூறுகிறார் :ஒரு புனைகதை படைப்பு வரலாற்றுப் புரிதலுக்கான பாதையை ஒளிரச் செய்தால் அது சரித்திரப் புரட்டல்ல.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று எதையுமே ஒற்றைத்தனதில் கட்டுபடுத்த முயலும் இந்ந நாட்களின் இந்த துவித, இரும பிரதிபலிப்புகளையே இந்த நூல் எதிர்பார்க்கிறது. அதையே செல்வமும் எதிர்பார்க்கிறார், விரும்புவார்.


யாழ்ப்பாணப் பார்வை – செல்வம் அருளானந்தம்; வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...