No menu items!

CSK குறிவைக்கும் வீரர்கள்

CSK குறிவைக்கும் வீரர்கள்

2023-ம் ஆண்டில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் ஆடும் வீரர்களை வாங்குவதற்கான மினி ஏலம் 23-ம் தேதி கொச்சியில் நடக்கிறது. ஏலம் நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஏலத்தில் யாரையெல்லாம் வாங்க வாய்ப்புள்ளது என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ராபின் உத்தப்பா, பிராவோ உள்ளிட்ட வீரர்கள் இல்லாத நிலையில், அவர்களுக்கு மாற்றாக வலுவான வீரர்களை வாங்கவேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. சென்னை அணியிடம் இப்போது 20.45 கோடி ரூபாய் மீதமுள்ள நிலையில் யாரையெல்லாம் வாங்க வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்.

கேன் வில்லியம்சன்:

சிஎஸ்கே அணியின் முக்கிய தேவை ஒரு கேப்டன். சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் தோனி, இந்த தொடருடன் ஓய்வுபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த ஆண்டு அவர் அணியில் இருக்கும்போதே புதிதாக ஒரு கேப்டனை உருவாக்க வேண்டிய நிலையில் சிஎஸ்கே உள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டில் ஜடேஜாவை கேப்டனாக்கி ஒரு முயற்சி செய்து பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் ஒரு நல்ல கேப்டனாக செயல்பட முடியவில்லை.

எனவே ஏற்கெனவே உள்ளவர்களில் ஒருவரை கேப்டனாக்குவதைவிட, கேப்டனாக அனுபவம் உள்ள ஒருவரை வாங்கினால் என்ன என்ற யோசனையில் சிஎஸ்கே உள்ளது. இதற்கு பொருத்தமான நபராக கேன் வில்லியம்சன் இருக்கிறார். நியூஸிலாந்து அணிக்கு மட்டுமின்றி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கேப்டனாக இருந்தவர் கேன் வில்லியம்சன். இப்போது சன் ரைசர்ஸ் அணியில் இருந்து கேன் வில்லியம்சன் விடுவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிஎஸ்கே அணி குறிவைக்கும் என்று நம்பப்படுகிறது.

சாம் கரண்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தோனிக்கும் தூணாக இருந்த பிராவோ, இப்போது அணியின் பயிற்சியாளராக மாறியிருக்கிறார். எனவே அவரது இடத்துக்கு ஒரு நல்ல வெளிநாட்டு ஆல்ரவுண்டரை சிஎஸ்கே தேடுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து வீரர் சாம் கரணை சென்னை அணி வாங்க வாய்ப்புகள் அதிகம். சென்னை அணிக்காக ஏற்கெனவே பல போட்டிகளில் சிறப்பாக ஆடியவர் சாம் கரண். சிஎஸ்கே அணியின் சுட்டிக் குழந்தை என செல்லமாக அழைக்கப்பட்ட அவர், தற்போது சர்வதேச போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே பிராவோவின் இடத்தை சாம் கரண் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேசன் ஹோல்டர்:

ஒருவேளை சாம் கரணை வாங்க முடியாமல் போனால் ஜேசன் ஹோல்டரை வாங்க சிஎஸ்கே அணி முயற்சி செய்யலாம். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனான ஜேசன் ஹோல்டர் வேகப்பந்து வீச்சாளர் மட்டுமின்றி, ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார். இது சென்னை அணிக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெகதீசன்:

இந்த ஆண்டில் ஏலத்துக்கு முன்பு சிஎஸ்கே அணி விடுவித்த வீரர்களில் ஒருவர் ஜெகதீசன். ஆனால் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஆடிய விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் போட்டியில் 5 சதங்களுடன் 830 ரன்களை குவித்துள்ளார் ஜெகதீசன். 120 ரன்களைக் கடந்த ஸ்டிரைக் ரேட்டையும் வைத்துள்ளார். இதனால் அவரை மீண்டும் வாங்கினால் என்ன என்ற எண்ணம் சிஎஸ்கே வட்டாரத்தில் எழுந்துள்ளது. அவர் விக்கெட் கீப்பராகவும் இருப்பதால் தோனிக்கு மாற்றாக இருப்பார் என்ற எண்ணமும் உள்ளது. எனவே சிஎஸ்கேவால் சில மாதங்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட ஜெகதீசன், அதிக ஏலத்தொகையுடன் மீண்டும் சிஎஸ்கேவில் இணைக்கப்படலாம்.

மயங்க் அகர்வால்:

சென்னை அணி இப்போது பலவீனமாக இருக்கும் விஷயங்களில் ஒன்று பேட்டிங். இதை ஈடுகட்ட மயங்க் அகர்வாலை வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டனாக இருந்தவர் என்பதால் புதிய கேப்டனாக அவரை உருவாக்கவும் வாய்ப்பு இருப்பதாக சிஎஸ்கே வட்டாரத்தில் பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...