“புது அமைச்சர் எப்படியிருக்கிறார்” என்று ஆபிசுக்குள் நுழைந்த ரகசியாவிடம் கேள்வியை வைத்தோம்.
“ஆபீஸ்க்குள்ள நுழைஞ்சு உக்கார கூட இல்லை, அதுக்குள்ள நியூஸ் கேக்குறீங்க.” செல்லாமாய் கடுப்பானாள் ரகசியா.
“கோவிச்சுக்காத ரகசியா..ஒரு ஆர்வம்தான் புது அமைச்சர் என்ன செய்றார்னு?”
“புது அமைச்சர் உற்சாகமாய் இருக்கிறார். எல்லோரிடமும் மரியாதையாய் பழகுகிறார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். பந்தா எதுவும் இல்லையாம். தெரியாதவற்றை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துக் கொள்கிறாராம். தலைமைச் செயலகத்தில் இரண்டாவது மாடியில் டி பிளாக்கில் இருக்கிறது உதயதிதியின் அறை. இதற்கு முன்பு அந்த அறையில் சிறப்பு செயலாக்கத் திட்டத்தின் அதிகாரிகள் இருந்தார்கள்”
“மற்ற அமைச்சர்கள் எல்லோரும் எப்படியிருக்கிறார்கள்?”
“உதயநிதி அமைச்சரவையில் இருப்பது அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வசதியாக இருக்கிறது என்றுதான் தகவல் வருகிறது. முதல்வரை அணுக முடியாத சூழலில் சின்னவர் காதில் விஷயங்களைப் போட்டுவிட்டால் அது முதல்வருக்கு சென்று விடும். முதல்வருக்கு செய்தி சொல்ல உதயநிதி உதவியாக இருப்பார் என்று கருதுகிறார்களாம். ஆனால் தேவையில்லாமல் யாரும் உதயநிதி அறைக்கு செல்லக் கூடாது என்று அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூறப்பட்டிருக்கிறதாம். துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்று சொல்கிறார்கள்”
“சின்ன சி.எம்.மா பார்க்கிறாங்கனு சொல்ற. சரி, உதயநிதி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிச்சு முரசொலியில் பலரும் விளம்பரம் கொடுத்திருந்தனர். ஆனால் அவர் அமைச்சரானபோது அப்படி விளம்பரங்கள் குவியவில்லையே?”
“இந்த விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். மக்கள் கண்களை உறுத்தக் கூடாது என்று கூறியிருக்கிறார். அதனால்தான் விளம்பரங்கள் கொடுக்கப்படவில்லை.”
“அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர்கள் எல்லோரும் திருப்தியா?
“எல்லோருக்கும் திருப்தி என்று கூற முடியாது. முணுமுணுப்புகள் கேட்கத்தான் செய்கிறது. துரைமுருகன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் போன்ற மூத்த தலைவர்களுக்கு முக்கிய இலாகாக்களை ஒதுக்காமல் இருப்பது அவர்களின் அதிருப்திக்கான முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும் அதிமுகவில் இருந்து வந்த சேகர்பாபுவுக்கு வளமான சிஎம்டிஏ துறை கொடுக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு எரிச்சல். சென்னை மாநகரில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களும் இந்த டிபார்ட்மெண்ட்லதான் அனுமதி வாங்க வேண்டும். திமுகவிலேயே காலம் காலமாக இருப்பவர்களை விட்டுவிட்டு, அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதா என்று அவர்கள் பொங்கி எழுகிறார்கள்.”
“இதுக்கு முதல்வர் தரப்பில் என்ன சமாதானம் செய்திருக்கிறார்கள்?”
“நேரடியா எந்த சமாதானமும் சொல்லவில்லை. ஆனால் முதல்வருக்கு நெருக்கமானவர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள். அவர்கள் அதிமுகவிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் அவர்கள்தான் வேகமாய் பணியாற்றுகிறார்கள். செந்தில் பாலாஜி, சேகர் பாபு இந்த இருவரும் வேகமாய் பணியாற்றுகிறார்கள், அதனால்தான் முதல்வர் அவர்களை நம்புகிறார் என்று கூறுகிறார்கள். பழைய திமுகவினர் அத்தனை வேகம் இல்லை என்பது முதல்வர் எண்ணமாக இருக்கிறதாம்”
“டிஆர் பாலு மகன் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்னு சொன்னாங்களே?”
”தனக்குப் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த டிஆர்பி ராஜா, அப்படி ஏதும் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ட்வீட் போட்டுக் கொண்டிருக்கிறார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவமே இல்லையா என்று அவரது ஆதரவாளர்களும் எரிச்சலில் இருக்கிறார்கள்.”
“எதிர்ப்புகள் அவ்வளவுதானா?”
“புதுச்சேரியில் நடந்த திருமண விழாவில் பேசியபோது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை லேசாக விமர்சித்து பேசியுள்ளார் முதல்வர். தனியாகக் கூப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயத்தை இப்படி பொது வெளியில் பேசலாமா என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புலம்புகிறார்கள், இதனால் வன்னிய சமூக வாக்குகள் பாதிக்கும் என்கிறார்கள்”
“உதயநிதியின் துறைக்கு செயலாளராக அதுல்யா மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாரே?”
“இதில் அதுல்யா மிஸ்ராவுக்கு அத்தனை விருப்பம் இல்லையாம், ‘நான் சீனியர் ஐஏஎஸ் அதிகாரி. ஜூனியர் அமைச்சரின் துறைக்கு என்னை செயலாளராக்குவதா?’ என்று தலைமைச் செயலாளரிடம் முதலில் முறையிட்டிருக்கிறார். அதற்கு தலைமைச் செயலாளர், ‘உதயநிதிக்கு இந்த பதவி புதிது. அனுபவம் இல்லை. அவரை சரியாக வழி நடத்தக்கூடிய அதிகாரி நீங்கள்தான் என்று முதல்வர் உங்களை தேர்வு செய்து இருக்கிறார்’ என்று பதிலளித்தாராம். முதல்வர் சாய்ஸ் என்றதும் மிஸ்ரா கூல் ஆகிவிட்டாராம்”
“எடப்பாடி பழனிச்சாமி கவலையாய் இருக்கிறார் என்கிறார்களே. பாஜக மீது கோபமாயும் இருக்கிறாராமே?”
“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகவே இருப்பது என்பதுதான் அவரது முக்கிய கவலை. கட்சி தொடர்பான வழக்கை சீக்கிரம் முடிக்கலாம் என்றால் அதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போடுகிறாரே என்பதுதான் எடப்பாடியின் கவலை. கட்சி தொடர்பான வழக்கு முடிக்கப்படாமல் இருப்பதால் பூத் கமிட்டி அமைப்பது போன்ற வேலைகள் தாமதமாகி வருவதாக தனது ஆதரவாளர்களிடம் புலம்பி இருக்கிறார். இன்னொரு பக்கம் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜகவினர் சொல்லிவருவதும் அவரது கவலையை அதிகப்படுத்தி இருக்கிறது. இதற்கு பின்னணியில் அண்ணாமலை இருப்பதாக எடப்பாடி சந்தேகப்படுகிறார். இதனிடையே பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘என்னால் எடப்பாடி வாழ்க… ஓபிஎஸ் வாழ்க… என்றெல்லாம் கோஷம் போட முடியாது’ என்று பேசியதாக எடப்பாடி காதில் விழுந்திருக்கிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி தொடர வேண்டுமானால் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க திட்டமிட்டுள்ளாராம்.”
“எடப்பாடிக்காக பாஜக தலைமை அண்ணாமலையை மாற்றுமா?”
“எடப்பாடிக்காக மாற்றுமா என்று தெரியாது. ஆனால் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் என்று அந்த கட்சிக்கு உள்ளேயே குரல்கள் அதிகரித்துள்ளன. கேசவ விநாயகத்தின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். சூர்யா சிவா ராஜினாமா பற்றி அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காததும் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.”
“காங்கிரஸ் கட்சியில் அழகிரிக்கு எதிராக எழுந்த கலகம் அடங்கிவிட்டதா?”
“இப்போதைக்கு அடங்கிவிட்டது. தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி எப்படியும் நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடர்வார் போல் தெரிகிறது. அழகிரியை மாற்ற கோரிக்கை வைத்த தமிழகத் தலைவர்களிடம் இதெல்லாம் என் அதிகாரத்தில் வரவில்லை நீங்கள் ராகுல் காந்தியை போய் பாருங்கள் என்று அனுப்பி வைத்து விட்டார் கார்கே . எதிர்ப்புகள் அடங்கிய நிலையில் கட்சி உற்சாகமாக இருக்கிறது என்பதை காட்டுவதற்காக புதிய திட்டமாக தொகுதிக்கு நூறு இடங்களில் கட்சி கொடியேற்றம் என்று 234 தொகுதிகளிலும் மொத்தம் 23,400 கொடியேற்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார் அழகிரி அந்தத் திட்டத்தை வடசென்னையில் இருந்து தொடங்க இருக்கிறார்.”
”கொடியேத்துவதையாவது ஒற்றுமையாக பண்ணுவார்களா?”
“ஒற்றுமைக்கும் காங்கிரசுக்கும் ஒத்து வராது” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.