எலன் மஸ்க் எந்த நேரத்தில் ட்விட்டர் தளத்தை வாங்கினாரோ தெரியவில்லை. அன்றிலிருந்து அவருக்கு இறங்குமுகம்தான். முதலில் ட்விட்டரில் ப்ளூடிக்கை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்ததால் ட்விட்டர்வாசிகளின் வெறுப்பை சம்பாதித்தார். பின்னர் ட்விட்டரில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கியதால் அவர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்தார். ட்விட்டரை வாங்கியதால் கடனாளியாகவும் ஆனார். இதை அடைக்க டெஸ்லா நிறுவனத்தின் சில பங்குகளை விற்றார். இப்போது எல்லாவற்றுக்கும் மேலாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெருமையை இழந்து நிற்கிறார்.
பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தால் நேற்று ஒரே நாளில் மட்டும் தனது சொத்தில் 4 பில்லியன் டாலர்களை எலன் மஸ்க் இழக்க, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட். விலையுயர்ந்த ஆடை, அழகு சாதனப் பொருள்கள், ஹாண்ட் பேக்குகள் போன்ற பல பொருள்களைத் தயாரிக்கும் LVMH Louis Vuitton – லூயி விட்டான் நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட்தான் இப்போது உலகின் நம்பர் 1 பணக்காரர். கோ திரைப்பட படத்தில் அகநக சிரிப்புகள் அழகா என்று ஒரு பாடல் வரும் அந்தப் பாடலில் ‘வா காதல் ஃபெராரி – இள நெஞ்சை அள்ளும் சோனாலி – லூயி விட்டான் கண்ணாடி – பல கண்கள் பின்னாடி’ என்ற வரிகளை கவனித்திருப்பீர்கள்..அந்த லூயி விட்டான் நிறுவனத்தின் முதலாளிதான் இன்று உலகின் நம்பர் ஒன் பணக்காரர்.
வர்த்தகம் சார்ந்த செய்திகளை வெளியிடும் முன்னணி பத்திரிகைகளான ஃபோர்ப்ஸ், புளூம்பெர்க் ஆகிய இரண்டும் இதை உறுதி செய்திருக்கின்றன. 73 வயதில் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை அடைந்திருக்கிறார் அர்னால்ட்.
எலன் மஸ்க் நம்பர் 1 பணக்காரராக இருந்தபோது அவரைப் பற்றி பல விஷயங்களை கேள்விப்பட்டு இருக்கிறோம். இப்போது பெர்னார்ட் அர்னால்ட்தான் முதல் பணக்காரர். அவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டாமா?…
தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான Ferret-Savinel construction company என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வாழ்க்கையை தொடங்கியவர் அர்னால்ட். பின்னர் படிப்படியாக முன்னேறியவர் 1978-ல் அதே நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
1984-ம் ஆண்டில் நஷ்டத்தில் இயங்கிவந்த Agache-Willot-Boussac’, என்ற நிறுவனத்தை வாங்கினார். வாங்கிய வேகத்தில் அதில் பணியாற்றிவந்த சுமார் 9 ஆயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். இது அவர் மீதான வெறுப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. உள்ளூரில் அவர் ‘தி டெர்மினேட்டர்’ என்று அழைக்கப்பட்டார். ஆனால் அதே நிறுவனத்தை லாபம் கொழிக்கும் நிறுவனமாக சில ஆண்டுகளிலேயே மாற்றிய அர்னால்ட், அதிலிருந்து வந்த பணத்தை வைத்து 1989-ம் ஆண்டில் LVMH Louis Vuitton நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கினார். அதன் வளர்ச்சிதான் இன்று அவரை உலகின் நம்பர் 1 பணக்காரராக்கி உள்ளது.
எலன் மஸ்குக்கு சுய விளம்பரத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதற்கு நேர் எதிராக விளம்பரத்தில் கொஞ்சம்கூட விருப்பம் இல்லாதவர் அர்னால்ட். தன்னைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளியாவதைக்கூட அவர் விரும்ப மாட்டார்.
அர்னால்டுக்கு பிடித்த விஷயம் ஓவியங்கள். பிக்காசோ, ஹென்ரி மூர், ஆண்டி வாரெல் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் ஓவியங்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிக் குவித்துள்ளார். ஓவியங்களுக்கான ஒரு அறக்கட்டளையைக்கூட அவர் தொடங்கி நடத்தி வருகிறார். பியானோ வாசிப்பதிலும் இவருக்கு விருப்பம் அதிகம்.
எல்லோருக்கும் ஒரு ரோல் மாடல் இருப்பார். அந்த வகையில் ஸ்டீவ் ஜாப்ஸும், வாரன் பஃபெட்டும்தான் அர்னால்டின் ரோல் மாடல்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு முன்பு அளித்த பேட்டியில் அர்னால்ட் இதை சொல்லியிருக்கிறார்.
நம்ம ஊர் அதானியைப் போலவே ஆட்சியாளர்களுடன் நெருங்கிப் பழகுவது அர்னால்டின் குணம். பிரான்ஸ் நாட்டின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிபர்களுக்கு மிக நெருக்கமானவர் அர்னார்ல்ட். அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெருமளவு நிதியுதவி வழங்கியுள்ளார். முன்னாள் அதிபர் சர்கோசியின் திருமணத்தைக்கூட முன்னின்று நடத்தியுள்ளார். தர்போதைய அதிபர் மெக்ரானின் மனைவி, அர்னால்டின் மகனுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.
1990-ம் ஆண்டில் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார் அர்னால்ட். பின்னர் 1991-ல் கனடா நாட்டைச் சேர்ந்த பியானோ இசைக்கலைஞரான ஹெலன் மெர்சியர் என்பவரை திருமனம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
பஹாமஸ் தீவுகளில் 3.5 கோடி டாலர் மதிப்பில் தனக்கென்று சொந்தமாக ஒரு தீவை வாங்கி வைத்திருக்கிறார் அர்னால்ட். சாதாரண மக்கள் அங்கு சென்ரு ஒரு வாரம் தங்குவதற்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்களை கட்டணமாக வாங்குகிறார்.