உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், அதிகாரிகள், உதயநிதியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவிப் பிரமாணம் முடிந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு தலைமைச் செயலகம் சென்று அவரது அறையில் அமைச்சராக பொறுப்பேற்றார்.
அமைச்சராக பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற முயற்சிப்பேன். அமைச்சராக முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன். மாமன்னன்தான் நடிகராக எனது கடைசி திரைப்படம். இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியாது, செயல்பாடுகள் மூலமே பதிலளிக்க முடியும்” என்றார்.
அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி, ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றியங்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமிக்கு நகர்ப்புற திட்டமிடல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பன் கூட்டுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு சீர்மரபினர் நலத்துறை, கதர், கிராமம் தொழில் வாரியத்துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் சேகர்பாபு வசம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜவுளி மற்றும் கைத்தறித்துறை இலாகா மட்டும் அமைச்சர் காந்தி வசம் உள்ளது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஓய்வூதியம், புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வைத்திருந்த மெய்யநாதன் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக நீடிக்கிறார்.
இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க ஐநா வேண்டுகோள்
இந்திய – சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா – சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யங்ட்சி பகுதியில் உண்மை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 9-ம் தேதி இந்திய-சீன படைகள் மோதிக்கொண்டன. இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி இந்தியா – சீனாவுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரொஸ் செய்தித்தொடர்பாளர் ஸ்டெப்னி டுஜரிக் கூறுகையில், இந்தியா – சீன படைகள் மோதல் குறித்து அறிந்தோம். எல்லையில் பதற்றம் மேலும் அதிகரிக்காமல் பதற்றம் தணிய நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்’ என்றார்.
கொச்சியில் 23-ம் தேதி ஐ.பி.எல் மினி ஏலம்
கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐ.பி.எல் மினி ஏலம் நடைபெற உள்ளது.
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களும் அடங்கும். இதையொட்டி ஐ.பி.எல். வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் வருகிற 23-ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் ஏலத்தில் பதிவு செய்த வீரர்களில் இருந்து 405 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
இதில் 273 பேர் இந்திய வீரர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள். 4 பேர் உறுப்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் உடையவர்கள். 282 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடாதவர்கள். உறுப்பு நாட்டை சேர்ந்த 4 வீரர்களும் இதில் அடங்குவார்கள்.