அலுவலகத்தில் உங்களுடன் சில வாரங்கள் நெருங்கிப் பழகிய ஒருவர், திடீரென ஒரு நாள், ‘நான் உங்கள் ஆபீஸ் ஸ்டாப் இல்லை. போலீஸ். ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஆபீஸில் வேலை செய்வதுபோல் நடித்தேன்.’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதே போன்றதொரு அதிர்ச்சியை சந்தித்திருக்கிறார்கள் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் இருக்கும் மகாத்மா காந்தி நினைவு மருத்துவ கல்லூரி மாணவர்கள்.
ஒரு சக மாணவியைப் போல் அந்த கல்லூரியின் கேண்டீனில் எல்லோருடனும் பேசிக்கொண்டிருந்த ஷாலினி சவுகான், திடீரென ஒரு நாள் போலீஸ் கான்ஸ்டபிளாக அவதாரம் எடுத்திருக்கிறார். கல்லூரியில் நடக்கும் ராகிங்கை கண்டுபிடிக்க தான் மாணவியாக நடித்ததாக கூறியிருக்கும் ஷாலினி, ராகிங்கில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்ய காரணமாக இருந்திருக்கிறார்.
ஷாலினி சவுகான் சமீபத்தில்தான் காவல்துறையில் சேர்ந்திருந்தார். போலீஸ்காரரான அவரது அப்பா 2010-ம் ஆண்டில் காலமாக, தானும் அவரைப் போல் ஒரு போலீஸாக வேண்டும் என்று விரும்பி இந்த துறையை தேர்ந்தெடுத்திருந்தார். சன்யோகிதாகஞ்ச் காவல் நிலையத்தில் அவர் கான்ஸ்டபிளாக சேர்ந்த சில மாதங்களில் ஒரு புகார் வந்திருக்கிறது. இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் புதிய மாணவர்களை ராகிங் செய்கிறார்கள் என்பதுதான் அந்த புகார்.
ஜூலை மாதம் இந்த புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களை கண்டுபிடிக்க கல்லூரிக்கு சென்றிருக்கிறார்கள் போலீஸார். ஆனால் அவர்கள் விசாரணைக்கு சென்றபோது பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களை ராகிங் செய்தவர்களை பகிரங்கமாக சுட்டிக் காட்ட தயங்கியுள்ளனர். அவர்களைப் பிடிக்க உதவினால், எதிர்காலத்தில் தங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்று தயங்கியுள்ளனர்.
என்ன செய்வது என்று யோசித்துள்ள போலீஸார், கடைசியில் தங்கள் காவல் நிலையத்தில் புதிதாக சேர்ந்துள்ள, பார்ப்பதற்கு கல்லூரி மாணவியைப் போல் தோற்றமளித்த ஷாலினியை, அதே கல்லூரிக்கு ஒரு மாணவியைப் போல அனுப்ப திட்டமிட்டு இருக்கிறார்கள். ஷாலினியும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட், பையில் சில புத்தகங்கள் என்று ஒரு நர்சிங் மாணவியைப் போல் கடந்த 2 மாதங்களாக கல்லூரிக்கு சென்று வந்துள்ளார் ஷாலினி. அவருக்கு பாதுகாப்பாக சில ஆன் போலீஸார் கேண்டீனில் உணவு வாங்கச் செல்வதைப் போல் அவ்வப்போது சென்று கேண்டீனை நோட்டம் விட்டிருக்கிறார்கள். கிளாஸைக் கட் அடித்து கேண்டீனிலேயே சுற்றும் மாணவி என்ற பிம்பத்தை ஏற்படுத்திய ஷாலினி, கடந்த 2 மாதங்கள் தினமும் சுமார் 5 மணிநேரம் மாணவர்களுடன் பழகி ராகிங்குக்கு காரணமான 11 மாணவர்களை கைது செய்ய உதவி இருக்கிறார்.
“கால்லூரிக்கு செல்லும் முன் ராகிங்கில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் மாணவர்களின் லிஸ்டை எங்கள் உயர் அதிகாரி என்னிடம் கொடுத்திருந்தார். அதை வைத்து அவர்களை கண்காணிக்கத் தொடங்கினேன். பொதுவாக கல்லூரியில் மாணவர்கள் சகஜமாக இருக்கும் இடம் கேண்டீன். அங்கு யாரும் ஐடெண்டி கார்டையும் கேட்க மாட்டார்கள். அதனால்தான் நான் அவர்களை கண்காணிக்க கேண்டீனை தேர்வு செய்தேன். தினமும் சுமார் 5 மணி நேரம் நான் கேண்டீனிலேயே இருந்தேன். பார்ப்பவர்களுக்கு நான் கிளாஸைக் கட் அடித்து கேண்டீனில் சுற்றுவதுபோல் தோன்றும். கேண்டீனிலேயே இருந்த நான் மெதுவாக அங்கு வரும் கல்லூரி மாணவர்களை நட்பாக்கிக் கொண்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாக அங்கு வரும் மாணவர்களிடம் பேசி பேசி அங்கு நடக்கும் விஷயங்களைத் திரட்டினேன். ராகிங்கால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களிடம் இருந்து விஷயங்களை வாங்கினேன். சுமார் 2 மாதங்கள் இப்படி கேண்டீனிலேயே மாணவியைப் போல் நடித்து ராகிங் தொடர்பான 11 குற்றவாளிகளைக் கண்டுபிடித்தேன்” என்று இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடித்த கதையைச் சொல்கிறார் ஷாலினி.