ரதன்
அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சிக்கு எதிராக 1985இல் நடைபெற்ற வழக்கை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ள படம் ‘Argentina, 1985’. இந்த ஆண்டு டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
‘Argentina, 1985’, திரைக்கதை சுவாரசியமாகவும் சில இடங்களில் நகைச்சுவையாகவும் நகர்கின்றது. ஒரு உண்மை வரலாற்றினை திரையில் பார்ப்பது என்பது அதுவும் நீதிமன்றக் காட்சிகள் நிறைந்த காட்சிகளுடன் பார்ப்பது பார்வையாளனுக்கு சற்று கடினமாகவேயிருக்கும். அதனை திரைக் கதையாசிரியர்கள் மாற்றியுள்ளார்கள்.
அந்த வழக்கு என்ன எனப் பார்க்கும் முன் கொஞ்சம் வரலாறு…
அர்ஜென்டினாவில் 1930க்கும் 1976க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் ஆறு தடவைகள் ஜனநாயக ஆட்சியை ஆக்கிரமித்து ராணுவம் ஆட்சி செய்தது. 1946–1955, 1973–1976 காலப் பகுதிகளில் மட்டுமே ஜனநாயக ஆட்சி நடைபெற்றது.
அர்ஜென்டினா ராணுவத்தின் பின்னால் தொடர்ச்சியாக அமெரிக்க அரசு செயல்பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அரசுகளை மாற்றியமைப்பதில் அமெரிக்கா இடைவிடாது செயல்பட்டு வந்தது. அது இன்றும் தொடர்கின்றது.
அர்ஜென்டினாவில் 1946 முதல் 1952 வரை ஜனாதிபதியாக இருந்தவர், ஜுவான் பெரோன். இவர் ஒரு முன்னால் ராணுவ தளபதி. 1952இல் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 1955இல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் 1973இல் தேர்தலில் வெற்றி பெற்ற ஜூவான் பெரோன், 1974இல் இறக்கும் வரை ஆட்சி செய்தார். இவரது வாழ்வை மையமாகக் கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளன. இவரது இரண்டாவது மனைவி பிரபல நடிகையும் தொழிற்சங்கவாதியுமான, ஈவா டுவார்டே (எவிடா) ஆவார்.
1974இல் ஜூவான் பெரோன் இறந்த பின்னர் அவரது மூன்றாவது மனைவி இசபெல் பெரோன் ஜனாதிபதியாக பதவியேற்றார். இவர் அர்ஜென்டினாவின் முதல் பெண் ஜனாதிபதியாவார். இவரையும் ஒரு மார்க்சியவாதியாக அமெரிக்கா முத்திரை குத்தியது. விளைவு பங்குனி 24, 1976இல் ராணுவம் ஆட்சியைக் கைப்பிடித்தது. ஜனாதிபதியைக் கைது செய்து சிறையிலடைத்தது. 1981இல் ஸபெயினில் தஞ்சம் புகுந்தார் இசபெல். 2007இல் ஸ்பெயின் அரசு இவரை நாடு கடத்த மறுத்துவிட்டது.
முற்று முழுதாக ராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய ராணுவ ஆட்சிக்குழு அமைக்கப்பட்டு, அந்த குழு அர்ஜென்டினாவை ஆட்சி செய்தது. இதன் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் ஜார்ஜ் ரஃபேல் விடேலா பதிவியேற்றார். இவருடன் அட்மிரல் எமிலியோ எட்வர்டோ மஸ்ஸெரா, பிரிகேடியர்-ஜெனரல் ஆர்லாண்டோ ரமோன் அகோஸ்டி இணைந்து செயல்பட்டனர்.
இவர்கள் காலகட்டத்தில், 1974 முதல் 1983 வரை அர்ஜென்டினாவை ராணுவம் மிகவும் கொடூரமான முறையில் ஆட்சி செய்தது. ‘ஆபரேஷன் காண்டோர்’ (Operation Condor – Eliminating Marxist Subversion) எனப்படும் ஒழிப்பு முறையை செயல்படுத்தியது. அர்ஜென்டினாவில் மட்டுமல்லாமல் சிலே, உருகுவே, பராகுவே, பொலிவியா, பிரேசில், பெரு, ஈகுவடார் போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் மத்திய அமெரிக்க நாடுகளிலும் அமெரிக்க அரசினால் செயல்படுத்தப்பட்டது. இடதுசாரி அரசியல்வாதிகளே இந்த நடவடிக்கையின் முதல் பலி. இடதுசாரி புத்திஜீவிகள், ஆதரவாளர்கள் ஒழிப்பும் இதன் பிரதான நோக்கம். இடதுசாரி சார்பு அரசுகளை தூக்கியெறிந்து, அமெரிக்க சார்பு அரசுகளை ஆட்சியில் இருத்துவதன் மூலம், தொடர்ச்சியான சுரண்டல்களையும் அமெரிக்க செயல்படுத்தி வந்தது. ஜோர்ன்சன், நிக்சன், போர்ட், கார்ட்டர், றீகன் ஆகிய ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலங்களில், அவர்களது ஆசியுடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.
அர்ஜென்டினாவில் 1975 கார்த்திகை மாதம் இந்த ஆபரேஷன் நடவடிக்கை ஆரம்பமானது. இடதுசாரி அரசியலுக்கு ஆதரவு வழங்கும் பல்கலைக் கழக ஆசிரியர்கள், அறிஞர்கள், பொது மக்கள் என பல தரப்பட்டவர்களையும் இந்த நடவடிக்கை ஒழித்தது, கைது செய்து சித்திரவதை செய்தது. மதகுருமார்கள், மாணவர்கள், விவசாயிகள் என ஒருவரையும் இந்த நடவடிக்கை விட்டுவைக்கவில்லை.
இதற்காக, அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சியின் போது ‘Triple A’ (Argentine Anticommunist Alliance) கொலையணி உருவாக்கப்பட்டது. இதற்கான ஆலோசனைகளை சிலே, உருகுவே, பொலிவிய நாட்டு அமெரிக்க சார்பு அதிகாரிகள் வழங்கினார்கள். ஆல்ஜீரியாவில் பிரென்ச் அரசு செயல்பட்டது போல், அர்ஜென்டினா இடதுசாரிகள் மற்றும் ஆதரவாளர்களை ஹெலிகொப்டரில் அல்லது சிறிய விமானத்தில் கடத்தி கடலில் எறிவார்கள். பின்னர் இவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெறுவார்கள். பிள்ளைகள் கடத்தப்பட்டார்கள். பல பிள்ளைகள், சிறார்கள் வலது சாரி சார்பு செல்வந்தர்களுக்கு தத்து கொடுக்கப்பட்டார்கள்.
இதனால் அர்ஜென்டினாவில் 1975-1983 வரையிலான காலப் பகுதியில் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்; 30 ஆயிரம் பேர் காணாமல் போயினர்; 4 லட்சம் பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், 1980களின் ஆரம்பத்தில் அர்ஜென்டினாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. சித்திரை 2, 1982இல் போர்க்லன்ட் தீவுக்கான போர் அர்ஜென்டினாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் நடைபெற்றது. பிரித்தானியா இதில் வெற்றி பெற்றது. போரின் தோல்வி, பொருளாதார தேக்கம் போன்றவை அர்ஜென்டினாவின் ராணுவ கொடுங்கோலாட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது. நாசிகளை விட மோசமான கொடுங்கோலாட்சி செய்த ராணுவம் ஜனநாயக முறையில் தேர்தல்களை நடத்த ஒப்புக்கொண்டது.
ராணுவத்தினரால் கடலில், நதிகளில் விமானங்களிலிருந்து தூக்கியெறியப்பட்டு மரணமானவரின் உடல்கள் புயல், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களால் கரை ஒதுங்கத் தொடங்கின. இதுவும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இதன் விளைவாக, 1983இன் இறுதியில் நடைபெற்ற தேர்தலில் ரவுல் ரிக்கார்டோ அல்போன்சின் (Raúl Ricardo Alfonsín) வெற்றி பெற்று ஜனாதிபதியானார். அல்போன்சின், ராணுவ அடக்குமுறையில் நடைபெற்ற சட்டமீறல்களுக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ள பணித்தார். இந்த வழக்கு ராணுவ நீதிமன்றத்திலிருந்து பின்னர் மக்கள் நீதி மன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.
அரச வழக்கறிஞர் பலவித இன்னல்களையும் சந்தித்தார். ஆனாலும், உயிராபத்தையும் மீறி வழக்கைத் தொடர்ந்தார். தனது உதவியாளர்களாக அப்பொழுதுதான் சட்டக் கல்லூரியிலிருந்து வெளியே வந்த இளம் சட்டபட்டதாரிகளை அமர்த்தினார். இறுதியில் 17 நாட்களில் பாதிக்கப்பட்ட 709 பேரை சட்டத்தின் முன் நிறுத்தினர்.
கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் குழந்தையைப் பெற்றெடுத்து, தனது குழந்தையை அணைக்க முடியாத நிலைமையிலிருந்த பெண்ணின் சாட்சியம் உட்பட பலர் சாட்சியம் அதிர்ச்சியளித்தன.
இறுதியில் ராணுவ ஆட்சிக் காலத்தின் ஜனாதிபதி விடேலாவுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு கொடுங்கோல் ராணுவ அதிகாரியான எட்வர்டோ மஸ்ஸெராவுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. வேறு சில அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டார்கள். 1985ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கின் பின்னரும் பாதிக்கப்பட்ட பலரும் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.
1985ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம்தான், ‘அர்ஜென்டினா 1985’. ‘Judgment at Nuremberg’, ‘JFK’ போன்ற படங்களைப் போல் நீதிமன்ற காட்சிகள் நிறைந்தது இப் படம். ரிக்கார்டோ டேரின், பீட்டர் லான்சானி ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
அரச வழக்கறிஞர், தனது இறுதி வாதத்தில் கூறும் வார்த்தைகளும் கருத்துக்களும் முக்கியமானவை. ராணுவத்தினரின் நடவடிக்கை குறித்து மூன்று வார்த்தைகளை கூறினார். ‘கொடூரமான, ரகசியமான, கோழைத்தன’மான செயற்பாடுகள். இவற்றை ராணுவத்தின் அடையாளமாக பதிவு செய்கின்றார்.
ஒருவரை மிகவும் கொடூரமாக துன்புறுத்தி அதனைப் பார்த்து மகிழ்தல் என்பது ஒரு போர் தந்திரமாகவோ, அரசியல் கருத்தியலாகவோ இருக்கமுடியாது. மாறாக அது ஒரு அறமற்ற வக்கிர மன நோய். இதனையே ராணுவத்தினர் செய்துள்ளனர் என அரச வழக்கறிஞர் குறிப்பிடுகின்றார். ராணுவத்தினர் சமூக மனிதர்கள் அல்ல என்பது இயக்குனரின் கருத்து. உண்மையும் அதுவே.
படத்தின் இயக்குனர் சாண்டியாகோ மிட்டர் (Santiago Mitre)க்கு ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த போது மூன்று வயது. அவர் தனது பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள் மூலம் கேட்டறிந்து ராணுவ ஆட்சியின் கொடூரங்களை உணர்ந்துள்ளார்.
அதேநேரம் இயக்குனர், இப் படத்தில் ராணுவத்தினரின் கொடுமைகளை விசாரணைக்கு உட்படுத்திய அர்ஜென்டினா ஜனாதிபதியையோ, அரச வழக்கறிஞரையோ, 17 நாட்களில் 709 பாதிக்கப்பட்டவர்களை சாட்சிக்கு அழைத்து வந்த இளம் சட்டத்தரணியையோ கதாநாயகனாக (Hero) காட்டவில்லை. இப் படத்தை மக்களுக்கான ஒரு படிப்பினையாகவே முன்வைத்துள்ளார்.
வரலாற்றுக்கும் இயக்குனர் முக்கியத்துவமளிக்கவில்லை. கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவார், “History repeats itself, the first as tragedy, then as farce.” பல அறிஞர்களும் சரித்திரம் மீள நடைபெறும் என்பார்கள். ஆனால் இயக்குனர், “ஒரு போதும் வேண்டாம்” (Never Again) என அழுத்தமாகக் கூறுகின்றார்.
*****
பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்: