குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று 2-வது முறையாக பதவியேற்றார்.
குஜராத் சட்டசபைக்கு கடந்த 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதன்மூலம் குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அக்கட்சியின் எம் எல் ஏக்கள் கூட்டத்தில் பூபேந்திர படேல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குஜராத் முதல்வரின் பதவியேற்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. காந்தி நகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 2-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி கடந்த ஆண்டு செப்டம்பரில் மாற்றப்பட்டு அப்பதவி பூபேந்திர படேலுக்கு வழங்கப்பட்டது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூ. 1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம் – மத்திய அமைச்சர் தகவல்
ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளது. மத்திய அரசின் நிதி தற்போது ரூ. 26 லட்சம் கோடி மக்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. நேரடி பணப் பரிமாற்றத்தால் ரூ. 2.25 லட்சம் கோடியை அரசு சேமித்துள்ளது. வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக ஜன்தன் திட்டத்தின் மூலம் 45 கோடி இலவச வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. 135 கோடி ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம், அரசின் பணப் பயன் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல நாடுகள் சிரமங்களைச் சந்தித்தன. நாம் கோ-வின் இணைய தளம் மூலம் 216 கோடி தடுப்பூசிகளை செலுத்தி உள்ளோம்” என்றார்.
சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை
இந்தியாவில் இருந்து இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்திற்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து விமான சேவையை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தன. இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அந்த விமான சேவைகள் இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய விமானங்களை இயக்கி வந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானம் புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்றது. ஏற்கனவே விமான சேவைகளை இயக்கி வந்த அலையன்ஸ் ஏர் நிறுவனம், சென்னை- யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவைகளை தொடங்கியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,046 கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பை 1000 கன அடியாக உயர்த்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சிறுகளத்தூர், வழுதிலம் பேடு, திருநீர்மலை, அனகா புத்தூர் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கும். எனவே, இப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.