விட்னஸ் (Witness) – தமிழ் (சோனி லைவ்)
தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்களைச் சொல்லும் படம் ‘விட்னஸ்’.
தூய்மை பணியாளர் ரோகிணியின் மகன் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது இறந்து விடுகிறார். மகனை இழந்து நிர்க்கதியாக நிற்கும் ரோகிணி, அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த போராடுகிறார். அவருக்கு உதவ முன்வருகிறார் அதே குடியிருப்பில் வசிக்கும் ஷரத்தா ஸ்ரீநாத். அவர்களால் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நின்று ஜெயிக்க முடிந்ததா என்பதுதான் விட்னஸ் படத்தின் கதை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி உள்ளது.
ஃபால் (Fall) – (தமிழ் – வெப் தொடர்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பின்னர் காப்பாற்றப்படும் அஞ்சலிக்கு, தற்கொலை முயற்சிக்கு முன்பான 24 மணி நேரம் மட்டுமே நினைவில் இருக்கிறது. மற்ற சம்பவங்களை மறந்துவிடுகிறார். தான் யார் என்பதை தேட முயலும் அவரது முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி பெறுகின்றன என்பதுதான் இந்த வெப் தொடரின் மையக் கதை.
நடிகை அஞ்சலி, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டாம் அண்ட் ஜெர்ரி (Tom & Jerry) – ஆங்கிலம் (நெட்பிளிக்ஸ்)
நியூயார்க் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அட்டகாசம் செய்யும் ஜெர்ரியை (எலி) பிடிப்பதற்காக டாமை (பூனை) பணியில் அமர்த்துகிறார்கள். ஜெர்ரியைப் பிடிக்க டாம் செய்யும் முயற்சிகளும் அதை ஜெர்ரி முறியடிக்கும்போது நடக்கும் காமெடி கூத்துகளும்தான் ‘டாம் அண்ட் ஜெர்ரி’யின் கதை நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள இப்படத்தை குழந்தைகளுடன் சேர்ந்து வீக் எண்டில் ரசிக்கலாம். நிச்சயம் கிச்சு கிச்சு மூட்டும்.
சுப் (Chup) – (இந்தி) – ஜீ5
ஊரில் உள்ள சினிமா விமர்சகர்கள் ஒவ்வொருவராக கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அப்படி கொல்லப்படும் சினிமா விமர்சகர்களின் நெற்றியில் திரைப்படங்களுக்கு அவர்கள் கொடுக்கும் ஸ்டார்களைப் போல் ஒன்று, நான்கைரை, ஒன்றரை என்று கத்தியால் ஸ்டார்கள் பொறிக்கப்படுகின்றன. அந்த கொலைகளை செய்வது யார்? இதற்கான காரணம் என்ன என்பதை போலீஸ் அதிகாரி கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.
சன்னி தியோல், துல்கர் சல்மான், பூஜா பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும் இந்த ஓடிடியில் இருக்கிறது. பரபரப்பான த்ரில்லர் கதையை பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
யசோதா (Yashoda) – (தெலுங்கு) – அமேசான் பிரைம்
மயோசிட்டிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, அந்த பிரச்சினைக்கு நடுவில் நடித்துள்ள படம் யசோதா. இப்படம் இப்போது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
தன் தங்கையின் சிகிச்சைக்காக பணம் தேவைப்படுவதால் வாடகைத் தாயாக சம்மதிக்கிறார் சமந்தா. வயிற்றில் வளரும் குழந்தை பணக்கார வீட்டுக்குச் சொந்தமானது என்பதால், மருத்துவ வசதிகளுடன் கூடிய ‘ஹைடெக்’ இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள் அவரை. குழந்தை பிறக்கும்வரை அங்கேயே இருக்க வேண்டும் என்கிறார்கள்.
அங்கு நடக்கும் சில விஷயங்கள் சந்தேகப்படும் விதத்தில் இருப்பதால் அதைப்பற்றி விசாரணையில் இறங்குகிறார் சமந்தா. அவர் கண்டறிந்த விஷயம் என்ன? தன்னைப்போன்று அங்கு இருக்கும் வாடகைத் தாய்களுக்கு அவரால் நீதியைப் பெற்றுத்தர முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
ஹரி – ஹரீஷ் இயக்கியுள்ள இப்படத்துக்கு மணி சர்மா இசை அமைத்துள்ளார்