குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் கடந்த 1, 5 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மதியம் 1 மணி நிலவரப்படி குஜராத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 154 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. இதன்மூலம் அம்மாநிலத்தில் அமோகமாக வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்கவைக்கிறது. தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. கட்லோதியா தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் 23,713 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
குஜராத்தில் காங்கிரஸ் 19, ஆம் ஆத்மி கட்சி 6, இதர கட்சிகள் 3 இடங்களில் முன்னணியில் உள்ளன.
ஹிமாச்சல் பிரதேசில் காங்கிரஸ் முன்னிலை
ஹிமாச்சல் பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் மதியம் 1 மணிவரையிலான நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 36 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 29 இடங்களிலும், இதர கட்சிகள் 3 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் முன்னணி பெற்றதன் மூலம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்: 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த 5-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து பின்னர் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றிரவு புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுவை, தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை (9-11-2022) நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பண மதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு: தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
இந்தியா முழுவதும் கடந்த 2016 நவம்பர் 8ஆம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. எனினும், போதுமான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாத காரணத்தால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களில் சிலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ரிசர்வ் வங்கி சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி மற்றும் மனுதாரர்கள் சார்பில் ப.சிதம்பரம், ஷ்யாம் தவன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் விசாரணை முடிந்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும்(ஆர்பிஐ) தாக்கல் செய்ய வேண்டும். வரும் 10-ம்தே திக்குள் மனுதாரர்கள் தங்கள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்தனர்.