நம்ம ஊர் தியேட்டர்களில் பாப்கார்ன் விலையைப் பார்த்து ரசிகர்கள் டென்ஷன் ஆவதைப் பார்த்திருக்கிறோம். உலகக் கோப்பை போட்டி நடக்கும் மைதானங்களில் விற்கப்படும் உணவுகளின் விலையைப் பார்த்தும் இதேபோல் டென்ஷனாகிக் கிடக்கிறார்கள் கால்பந்து ரசிகர்கள்.
போட்டி நடக்கும் மைதானங்களிலும், ஃபேன் சோன்களிலும் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்புப்படி மைதானங்களிலும் ஃபேன் சோன்களிலும் சாலட்டுக்கு 900 ரூபாயும், ஐஸ் கிரீமுக்கு 2,800 ரூபாயும், காபிக்கு 3,300 ரூபாயும், சீஸ் பர்க்கருக்கு 3,800 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் செல்வு செய்து உலகக் கோப்பையை காண வந்திருக்கும் ரசிகர்கள், இப்போது உணவுக்கும் ஏராளமாக செலவு செய்யவேண்டி இருப்பதை நினைத்து வேதனைப்படுகிறார்கள்.
உணவுப் பொருட்களின் விலை மட்டுமின்றி அதன் தரமும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து வரும் ரசிகர்கள், அங்கு விற்கப்படும் சாலட்டைச் சாப்பிட்டு முகம் சுழிக்கிறார்கள். “என் வீட்டு எலிகூட இதைவிட சிறந்த சாலட்டைச் சாப்பிடும்” என்று இங்கிலாந்து ரசிகர் ஒருவர் பேட்டி கொடுக்கும் அளவுக்கு ஸ்டேடியத்தில் விற்கப்படும் உணவின் தரம் மோசமானதாக இருக்கிறது.
2 சகோதரர்கள் 2 அணிகள்
சகோதரர்கள் இருவர் ஒரே அணிக்காக ஆடுவதை கிரிக்கெட்டில் பார்த்திருக்கிறோம். ஸ்டீவ் வாஹ் – மார்க் வாஹ், இர்பான் பதான் – யூசுப் பதான், ஹர்திக் பாண்டியா – குர்னால் பாண்டியா என்று இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டியில் 2 சகோதரர்கள் இருவேறு அணிகளுக்காக ஆடி வருகிறார்கள். இவர்களின் ஒருவரான இனாகி வில்லியம்ஸ் கானா அணிக்காக விளையாட, அவரது சகோதரர் நிகோ வில்லியம்ஸ், ஸ்பெயின் அணிக்காக ஆடி வருகிறார்.
இவர்கள் இருவரும் ஸ்பெயின் நாட்டில் குடியேறிய கானா நாட்டு தம்பதிக்கு பிறந்தவர்கள். முன்காலத்தில் பஞ்சம் பிழைப்பதற்காக ஒரு டிரக்கில் உட்காரக்கூட இடம் கிடைக்காமல் அவர்கள் ஸ்பெயின் நாட்டுக்கு வந்துள்ளனர். அங்கு படிப்படியாக வளர்ந்த இவர்கள் தங்கள் மகன்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்துள்ளனர். இருவரில் ஒருவர் தான் பிறந்த நாட்டை தாய்நாடாக கொள்ள, மற்றவர் தன் பெற்றோரின் நாட்டுக்காக ஆடுகிறார். இருவரில் யார் ஜெயித்தாலும் தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்கிறார்களாம் இவர்களின் பெற்றோர்.
டோஹாவில் கால்பந்து கண்காட்சி
ஆசிய நாடுகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்களுக்கு அர்ஜென்டினா, பிரேசில் போன்ற தென் அமெரிக்க நாட்டு கால்பந்து அணிகளை மிகவும் பிடிக்கும். எக்காலத்துக்குமான தங்கள் கால்பந்து நாயகர்களாக பீலே, மரடோனா போன்றவர்களையே அவர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்த வகை ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக கத்தாரின் டோஹா நகரில் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. பீலே, மரடோனா ஆகிய நட்சத்திரங்களின் உருவச் சிலைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் ஆட்டங்களின் வீடியோக்களையும் இங்கு பார்த்து ரசிக்கலாம். அங்குள்ள ஸ்போர்ட்ஸ் கார்னரின் ரசிகர்களுக்கான கோல் அடிக்கும் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தங்களுக்கு பிடித்தமான கால்பந்து ஹீரோக்களின் சிலைகளுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்புடன் இணைந்து உள்ளூர் சுற்றுலாத் துறை நடத்திவரும் இந்த கண்காட்சி கால்பந்து போட்டிகளுக்கு இணையாக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.