No menu items!

தமிழ்நாட்டின் Whatsapp தலைவர் – மிஸ்.ரகசியா

தமிழ்நாட்டின் Whatsapp தலைவர் – மிஸ்.ரகசியா

”குஜராத்துக்குப் போலாம்னு இருக்கேன்…ஆபீஸ்ல பெர்மிஷன் கிடைக்குமா?” என்று கேட்டவாறே அலுவலகத்துக்குள் வந்தாள் ரகசியா.

“குஜராத் தேர்தல் ரிசல்ட் கவர் பண்ண போறியா? லோக்கல் அரசியல்தானே நமக்கு முக்கியம். குஜராத் ரிசல்ட்டா முக்கியம்?”

“குஜராத் தேர்தல் முடிவுகளை வச்சுதான் பல கட்சிகள் அரசியல் முடிவுகளை எடுக்கப் போகுது. முக்கியமா திமுக” என்றாள்.

“திமுகவுக்கும் குஜராத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“நேத்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.. அதுல முதல்வர் குஜராத் தேர்தல் பத்தி பேசியிருக்காரு. குஜராத் தேர்தல் ரிசல்ட் அடிப்படைலதான் நாடாளுமன்றத் தேர்தல் எப்போன்றத பாஜக முடிவு பண்ணும்னு சொல்லியிருக்காரு”

“அது என்ன கணக்கு?”

‘குஜராத் தேர்தல்ல அபாரமா பாஜக ஜெயிச்சிருச்சுனா, 2024 மே மாதம் நடக்க வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலை 2023 ஆகஸ்ட், செப்டம்பர்லயே நடத்திடுவாங்கனு சொல்லியிருக்கார். தேர்தல்ல தோல்வியோ இல்லாட்டி கஷ்டப்பட்டு ஜெயிச்சாலோ நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல நடக்கும்னு பேசியிருக்கிறார். அதனால எலெக்‌ஷன் சீக்கிரம் வந்தாலும் சந்திக்கிறதுக்கு ரெடியா இருக்கணும்னு சொன்னாராம். இந்த மாசத்திலேயே கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் நிரப்பிடணும்னும் சொல்லியிருக்காரு”

“தேர்தல் சீக்கிரம் வந்துரும்னு ஸ்டாலின் எதிர்பார்க்கிறார் போல. குஜராத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்? ஏதாவது நியூஸ் உண்டா?”

“பாஜக கொஞ்சம் பயத்தோடதான் இருக்கு. அந்தப் பயத்தின் வெளிப்பாடுதான் பிரதமர் குஜராத்தில் நீண்ட நாட்கள் பரப்புரை செய்யறது. இப்ப பதவியில இருக்கிற பாஜகவினர் மீது மக்கள் கோபமா இருக்காங்கன்னு பாஜக தலைமைக்கு தெரிஞ்சிருக்கு. அதனால குஜராத் தேர்தல்லயும் மோடியை மட்டுமே முன்னிலைப்படுத்துறாங்க. லோக்கல் தலைவர்கள் யாருமில்லை. அது மட்டுமில்லாம இந்த தடவை முதல்முறையா ஆம் ஆத்மி குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல்ல போட்டி போடுது. யாரோட வாக்குகளை அது பிரிக்கும்னு சரியா தெரியல.. இதெல்லாம் பாஜகவுக்கு அச்சத்தை கொடுத்திருக்கு”

‘அப்ப தோத்திடுவாங்களா?”

“தோத்துருவோம்கிற பயம் இல்லை. பாஜக ஜெயிக்கும் ஆனா குறைந்த வாக்குகள் வித்தியாசத்துல ஜெயிக்கும்னு சொல்றாங்க. அது பாஜகவுக்கு பலவீனம்தானே”

’சரி, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துல வேற என்ன விசேஷம்?”

“பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசினதுதான் ஹைலைட். எதிராளியை பலவீனமா நினைச்சிடாதிங்க. அவங்களை பலவீனம்னு நினைச்சோம்னா நாமளும் நமது பலத்தை காட்ட மாட்டோம் அது எதிராளிக்கு வசதியா போய்டும்னு சொல்லியிருக்கார்”

“எதிராளினு அவர் சொல்றது பாஜகவையா அதிமுகவையா?”

“ரெண்டு கட்சியையும்தான். அதிமுக உடைஞ்சு பலவீனமாயிருக்கு. பாஜக இன்னும் வளரவே இல்லைன்ற எண்ணம் திமுகவுல இருக்கு. அது தப்புனு சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனா துரைமுருகன் அப்படி பேசினாலும் கட்சிக்காரங்க யாரும் எடப்பாடியையும் அண்ணாமலையையும் சீரியசாவே எடுத்துக்கிறதில்லை”

‘எப்படி சொல்ற?”

“கவர்னர்கிட்ட அண்ணாமலை சொன்ன புகார்ல ஒண்ணு, மத்திய அரசோட ஜல்சக்தி திட்டத்தை திமுக அரசு சரியா பயன்படுத்தலன்றது. ஆனா உண்மை என்னனா..அது சம்பந்தமான மத்திய அமைச்சர் இரண்டு மாசம் முன்னாலதான் தமிழ்நாட்டுக்கு வந்து அந்தத் திட்டம் நல்லா செயல்படுத்தப்படுதுனு பாரட்டிட்டு போனார். மத்திய அரசு விருதும் கிடைச்சது. வாட்சப்ல வர்ற ரெண்டு வீடியோவை வச்சுக்கிட்டு அண்ணாமலை கவர்னர்கிட்ட கம்ப்ளைண்ட் பண்றார்னு பேசி சிரிக்கிறாங்க. ஒரு அமைச்சர், அண்ணாமலைக்கு வாட்சப் தலைவர்னு பட்டப் பெயர் வச்சிருக்காராம். அறிவாலயத்துல இதை சொல்லி சிரிக்கிறாங்க”

“பிரதமர் பாதுகாப்புல குறைபாடுனு புதுப் பிரச்சினையை அண்ணாமலை கிளப்பியிருக்கிறாரே..ஆளுநர்கிட்டயும் புகார் சொல்லியிருக்கிறாரே..”

“அதையும் காமெடியாத்தான் அறிவாலயத்துல பார்க்கிறாங்க. பிரதமர் பாதுகாப்பு பணியைப் பொறுத்தவரைக்கும் பிரதமர் விழா நடக்கும் இடம் உறுதியானதும் மத்திய பாதுகாப்பு படையினர்தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள். அதில் மாநில அரசுக்கு அதிக பொறுப்புகள் கிடையாது. அது மட்டுமில்லாமல் செஸ் ஒலிம்பியாட் நடந்து மூணு மாசம் கழிச்சு இந்தப் பிரச்சினையை அண்ணாமலை கிளப்புறது பாஜக தலைவர்களின் ஆபாச ஆடியோவிலிருந்து திசை திருப்புறதுக்குனு சொல்றாங்க. செஸ் விழாவுக்கு வந்துட்டு போன பிறகு காந்திகிராம பல்கலைக்கழக விழாவுக்கு பிரதமர் வந்துட்டு போயிருக்கிறார். அப்பலாம் பாதுகாப்புல குளறுபடி இல்லையானு கேக்குறாங்க”

”நியாயமான கேள்விதான்?”

“இதொடு இன்னொரு முக்கியமான பிரச்சினையையும் திமுககாரங்க எழுப்புறாங்க. காந்தி கிராம பல்கலைக்கழக விழாவுக்கு வந்துட்டு பிரதமர் கிளம்புனபோது வானிலை சரியில்லாததால ஹெலிகாப்டர்ல போகாமா கார்ல மதுரைக்கு போனார். அப்போ அண்ணாமலையும் பிரதமர் கூட கார்ல ஏறிக்கிட்டார். அவருக்கு பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படலனு சொல்றாங்க. அது சரியானும் கேக்குறாங்க”

”இதையெல்லாம் அண்ணாமலை சமாளிச்சிட மாட்டாரா?”

“திமுக எதிர்ப்புகளை சமாளிச்சுடுவார் ஆனா சொந்தக் கட்சிக்காரங்க எதிர்ப்பைதான் அவரால சமாளிக்க முடியல. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் அனுமதி கொடுக்காததும் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கு. ஆளுநர் ஒப்புதல் கொடுக்கலன்ற நியூசுக்கு அப்புறம் ரெண்டு பேர் ஆன்லைன் ரம்மியால தற்கொலை பண்ணியிருக்காங்க. அதுக்கு காரணம் ஆளுநர்தான்னு திமுகவினர் பரப்புறாங்க. இது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கு. பாஜக தலைவர்களும் ஆளுநர் கிட்ட பேசியிருக்காங்க. அமைச்சரும் பேசிட்டார். ஆனா ஆளுநர் இன்னும் முடிவெடுக்கலையாம்”

“கஷ்டம்தான். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டை சிறப்பா கொண்டாடப் போறதா திமுக அறிவிச்சிருக்கே?”

”இது திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சி. ஒரு குடும்பத்தை சார்ந்துதான் திமுக இருக்குன்ற பிம்பத்தை இது உடைக்கும்னு சொல்றாங்க. டிபிஐ வளாகத்துல சிலை, டிபிஐ வளாகத்துக்கு அன்பழகன் பெயர்.. அன்பழகன் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி”

“அவரது நூற்றாண்டுக்காக நூறு பொதுக் கூட்டங்கள் நடத்தப் போறதாகவும் சொல்லியிருக்காங்களே”

“இது திமுக தலைவர் ஸ்டாலின் ஐடியாவாம். இந்தப் பொதுக் கூட்டங்கள் மூலம் திமுகவினரை ஒன்று சேர்த்து உற்சாகப்படுத்த முடியும்னு சொல்லியிருக்கிறார். எதிர்க் கட்சிகளுக்குப் பதில் சொல்லவும் முடியும்னு திமுக தலைவர் நம்புகிறார்”

‘நல்ல யோசனைதான். அதிமுக நியூஸ் எதுவும் இல்லையா?”

“எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் குழப்பத்திலேயே இருக்காங்க. தனக்கு நேரம் சரியில்லை என்று எடப்பாடி பழனிசாமி பரிகார பூஜை நடத்தியிருக்கிறார். ஓபிஎஸ்ஸுடன் சேர வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுப்பதை அவர் விரும்பவில்லை”

“ஜெயலலிதா நினைவு தினத்துக்கு அதிமுக என்ன செய்யப் போகுது?”

“நினைவு தினம் 4ஆம் தேதியா 5ஆம் தேதியா? அதுவே குழப்பத்துல இருக்கு..பார்ப்போம் அதிமுக கோஷ்டிகள் என்ன செய்யறாங்கனு” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...