மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
‘இந்த சிப் ஒரு சிறிய நாணயத்தின் அளவில் இருக்கும். இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூரோலிங்க் சோதனை தொடங்கும். இதன்மூலம் மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்த முடியும். இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, தங்களை அனுமதிக்குமாறு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடம் தனது குழு கேட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது’ என்று மஸ்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்கின் ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூராலிங்க் இதனை மேற்கொள்கிறது.
செல்போனில் வீடியோ எடுத்தவாறு பைக்கில் அதிவேகத்தில் சென்ற 2 மாணவர்கள் உயிரிழப்பு: சென்னையில் விபரீதம்
சென்னை தரமணி, தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர்கள் பிரவீன்(வயது 19), ஹரி (வயது 17). அண்மையில் இருவரும் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் தரமணி 100 அடி சாலையில் சென்றுள்ளனர். வாகனத்தை சுமார் 114 கி.மீ. வேகத்தில் பிரவீன் ஓட்டிச் சென்றுள்ளார். பின்னால் அமர்ந்திருந்த ஹரி, வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்துகொண்டே வந்துள்ளார். அப்போது, தரமணி சந்திப்பு அருகில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் சரிந்து விபத்தில் சிக்கியது. அதில், இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.
போலீஸார் விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில், சிறிது நேரத்தில் பிரவீன் இறந்துள்ளார். ஹரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
போலீசார் விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பிரவினிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 40 ஆயிரத்தை தாண்டியது; கிராம் ரூ. 5010க்கு விற்பனை
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 40,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 55 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் விலை 5,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.,
இதேபோல், வெள்ளி கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து 70,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
தென்கொரியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், யூட்யூபில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்காக மும்பை புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் அருகில் வந்த இளைஞர் ஒருவர், கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தார். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார். பின்னர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை இடைமறிந்த இளைஞர், மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினார். அதற்கு அந்தப் பெண் மறுத்துவிட்டார்.
இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவியது. இதைப் பகிர்ந்தவர்கள், மும்பை காவல் துறையை டேக் செய்து, இந்தியா வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதன் அடிப்படையில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையறிந்த தென்கொரிய பெண் மும்பை போலீஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.