இந்திய ரிசர்வ் வங்கி சில்லறை வர்த்தக பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துகிறது.
அது என்ன டிஜிட்டல் கரன்சி?
அதை யார் பயன்படுத்தலாம்?
ஸ்பெஷாலிட்டி என்ன?
நிறைய கேள்விகள் இருக்கிறது. பதில்களைப் பார்ப்போம்.
டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன?
பணப் பரிவர்த்தனை, கொடுக்கல் வாங்கல்களில் முதலில் நாம் பணத்தை ரொக்கமாக கையாண்டு வந்தோம். வங்கிக் கணக்கு, காசோலை, டிடி போன்றவை என்பது அடுத்தகட்டம். இப்போது ஏடிஎம் கார்ட், IMPS, NEFT, RTGS போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள், யுபிஐ, கூகிள் பே, போன் பே என பல வழிகளிலும் இப்போது கையாள்கிறோம். இன்னொரு பக்கம் பிட்காயின் உட்பட பல கிரிப்டோகரன்சிகளும் புழக்கத்தில் உள்ளன.
இவை எல்லாவற்றிலும் இருந்து வேறுபட்டது தற்போது வெளிவந்துள்ள டிஜிட்டல் கரன்சி. காகித வடிவில் இல்லாமல், டிஜிட்டல் வடிவில், ரூபாய் நோட்டுகளில் இருப்பது போன்றே தனிப்பட்ட சீரியல் எண்களுடன் டிஜிட்டல் கரன்சி இருக்கும்.
இதன் மதிப்பு மாறிக்கொண்டே இருக்காது. இந்திய ரூபாய்க்கு என்ன மதிப்புள்ளதோ அதே மதிப்புதான் டிஜிட்டல் கரன்சிக்கும். இது தொடர்பான அறிவிப்பில், “பேப்பர் வடிவிலான ரூபாய் மற்றும் நாணய வடிவிலான ரூபாய் மதிப்புகளுக்கு இணையான மதிப்பில் இந்த டிஜிட்டல் கரன்சிகளும் விநியோகிக்கப்படும்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆம், இது தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாயின் மின்னணு வடிவம்தான். இதனை சிபிடிசி (சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி) என்றும் இ-ருபி என்றும் அழைக்கிறார்கள்.
இந்தியாதான் முதலில் அறிமுகப்படுத்துகிறதா?
டிஜிட்டல் கரன்சி என்பது உலகத்துக்கு புதியதல்ல. நைஜீரியா, ஜமைக்கா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கெனவே டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளன. விரைவில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் 27 உறுப்பு நாடுகளில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும், பல நாடுகளும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக பரிசோதனை அடிப்படையில் கடந்த நவம்பர் 1-தேதி மொத்த பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தற்போது, சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சியை நாளை (1-12-2022) வெளியிட உள்ளது.
முதல்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வரம் ஆகிய 4 நகரங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் சில்லறை பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சியை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்நகரங்களிலும் இது சோதனை முயற்சி என்பதால், குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையே பரிவர்த்தனை நிகழும்.
தொடர்ந்து அகமதாபாத், கவுஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா, சிம்லா, கங்டக் ஆகிய நகரங்களுக்கும், பரோடா வங்கி, இந்திய யூனியன் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றுக்கும் டிஜிட்டல் கரன்சி விரிவுபடுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் கரன்சியின் சிறப்பு என்ன?
அதிகளவில் பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு, வேறு நாடுகளுக்குப் பணம் அனுப்புபவர்களுக்கு டிஜிட்டல் கரன்சி மிக உதவியானது. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு டிஜிட்டல் கரன்சி வழியாகப் பணம் அனுப்பினால், உடனடியாக வரவு வைக்கப்படும், மாற்றம் உடனடியாக நடக்கும்.
நடுவே வேறு எந்த ஒரு அமைப்பும் இடைத்தரகர்களும் இல்லையென்பதால், கூடுதல் பரிவர்த்தனைக் கட்டணங்கள் இல்லை. இதனால், பணம் அனுப்புபவர்களுக்கு செலவு குறையும். மேலும், மற்ற மின்னணு பரிவர்த்தனைகளைவிட டிஜிட்டல் கரன்சி அதிகப் பாதுகாப்பானது. எனவே, பெரிய நிறுவனங்கள் தங்கள் வியாபார பணப் பரிமாற்றத்தை சிக்கல் இல்லாமல் மேற்கொள்ளலாம்.
இந்திய ரிவர்வ் வங்கியை பொறுத்தவரைக்கும் ரூபாய் தாளை அச்சடிக்கும் வேலையில்லை. எனவே, பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு மிச்சமாகும்.
டிஜிட்டல் கரன்சி ரிசர்வ் வங்கியுடையது என்பதால் எங்கெல்லாம் அது போகிறது என்பதை ரிசர்வ் வங்கியால் கண்காணிக்க முடியும். எனவே கறுப்பு பணம், ஊழலுக்கான வாய்ப்புகள் குறையும்.
யார், யார் பயன்படுத்தலாம்?
வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை தொடங்கி சில்லறை வர்த்தகம், தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான பணபரிவர்த்தனை வரை அனைத்துக்கும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எப்படிப் பயன்படுத்துவது?
கூகிள் பே, போன் பே போன்ற ஆப்கள் மூலமும் IMPS, NEFT, RTGS என ஆன்லைன் மூலமும் ஏற்கனவே நாம் பணத்தை டிஜிட்டலாகவும் பயன்படுத்துகிறோம். இதற்கெல்லாம் ஒரு வங்கிக் கணக்கு வேண்டும். ஆனால், தற்போது வரப்போகும் டிஜிட்டல் கரன்சிக்கு வங்கிக் கணக்கே தேவையில்லை. ரயில் டிக்கெட் முதல் போன் ரிசார்ஜ் வரை இப்போது பல பரிவர்த்தனைகளுக்கும் இ-வாலட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுபோல் ஒரு இ-வாலட் இருந்தாலே போதுமானது. செல்போன் ஆப் வழியாகவும் ஆன்லைன், ஆஃப்லைனிலும் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.
ஒரு இ-வாலட்டில் இருந்து இன்னொரு இ-வாலட்டுக்கு டிஜிட்டல் கரன்சியை அனுப்பலாம், பெறலாம். இதற்கு வங்கிக் கணக்கு தேவையில்லை.
சரி, நம் இ-வாலட்டுக்கு எப்படி டிஜிட்டல் கரன்சி வரும்?
ஆன்லைனில் பணத்தை கொடுத்து டிஜிட்டல் கரன்சி வாங்கலாம். நாம் விற்பனை செய்யும் பொருள் அல்லது சேவைக்கான மதிப்பை டிஜிட்டல் கரன்சியாக வாங்கிக்கொள்ளலாம். இதற்கான பரிவர்த்தனை இ-வாலட்கள் இடையே, அதாவது இரண்டு போன்களுக்கு இடையே முடிந்துவிடும்.