உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்றுகூட இன்னும் முடியாத நிலையில் இதில் பிரேசில் அணிதான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று கணித்திருக்கிறார் டைம் டிராவலர் என்ற டிக் டாக்கர். டைம் மிஷின் மூலம் எதிர்காலத்துக்கு சென்று அதில் நடப்பதை தான் முன்பே சொல்வதாக இந்த டைம் டிராவலர் கூறிவருகிறார். தற்போது @worldcuptimetraveller என்ற பெயரில் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், இந்த உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் மற்றும் பிரான்ஸ் அணிகள் சந்திக்கும், அதில் பிரேசில் அணி 2-1 என்ற கோல்கணக்கில் கோப்பையை வெல்லும் என்று கணித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் பிரேசில் அணிக்கான கோல்களை ரிச்சர்லிசன், மார்கினோஸ் ஆகியோர் அடிப்பார்கள் என்றும் இதை டைம் மிஷின் பயணம் மூலம் தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார். பிரான்ஸ் அணிக்கான கோலை ஆண்டனி கிரீஸ்மேன் அடிப்பார் என்றும் இவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே 2020-ல் நடந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வென்று இத்தாலி அணி கோப்பையை வெல்லும் என்று இவர் கணித்திருந்தார். அது சரியாக நடந்ததால், இப்போதும் அவரது கணிப்பு பொய்யாகாது என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் பிரேசில் ரசிகர்கள்.
தோல்வியைக் கொண்டாடிய ஈரான் மக்கள்
வழக்கமாக தங்கள் அணி உலகக் கோப்பையில் தோற்றால் அந்நாட்டு மக்கள் வருத்தப்படுவார்கள். ஆனால், இதற்கு நேர்மாறாக அமெரிக்காவிடம் ஈரான் அணி தோற்றதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி உள்ளனர். தெருக்களில் பட்டாசு வெடித்தும் நடனமாடியும் இந்த வெற்றியை ஈரானிய மக்கள் கொண்டாடியுள்ளனர்.
ஈரான் அரசின் ஹிஜாப் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், அந்நாட்டு கால்பந்து அணியையும் அரசின் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள். அதனால் இந்த தோல்வியை அரசின் தோல்வியாகக் கருதி அவர்கள் கொண்டாடியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உலகக் கோப்பையின்போது தேசிய கீதம் பாடாத கால்பந்து வீரர்களுக்கு ஈரான் அரசு என்ன தண்டனை கொடுக்குமோ என்ற அச்சமும் அந்நாட்டு மக்களிடையே உள்ளது.
தேசிய கீதம் பாடாததுடன் ஈரானின் முக்கிய அரசியல் எதிரியாக கருதப்படும் அமெரிக்க அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவியதால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று அந்நாட்டு பத்திரிகைகள் சொல்கின்றன.
ஆவணப்படம் எடுக்கும் மெஸ்ஸி
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் ஒவ்வொரு நாளையும் டாக்குமெண்டரியாக படமாக்கி வருகிறார் லயோனல் மெஸ்ஸி. இந்த உலகக் கோப்பையுடன் தான் ஓய்வு பெறவுள்ள நிலையில், தனது கடைசி உலகக் கோப்பையை படமாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அத்துடன் இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணி வெல்லும் என்று உறுதியாக நம்பும் அவர், அந்த வெற்றிப் பாதையின் ஒவ்வொரு அசைவையும் ஆவணப்படுத்துவதற்காக இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் பேசுவது, ஒவ்வொரு நாளும் பயிற்சி பெறுவது, ஓட்டலில் இருந்து ஸ்டேடியத்துக்கான பயனம் என்று அர்ஜெண்டினா அணியின் ஒவ்வொரு அசைவையும் இதில் படமாக்கி வருகிறார் மெஸ்ஸி. அவர் தயாரிக்கும் இந்த டாக்குமெண்டரி படத்தை வாங்குவதற்கு இப்போதே விளையாட்டு சேனல்கள் போட்டி போட்டு வருகின்றன.