அதிமுக பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மாநாடு ஒன்றை பிரமாண்டமாக நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 17-ந் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி இந்த மாநாட்டை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி அல்லது கோவையில் மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தனது ஆதரவாளர்களை திரட்டி, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு முன்னோட்டமாக சிறப்பான முறையில் மாநாட்டை நடத்தவும் அதிமுக முன்னணி நிர்வாகிகள் வியூகம் வகுத்துள்ளனர். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்த எடப்பாடி பழனிசாமி அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார். இதுதொடர்பாக மாநாட்டில் மேலும் பல அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கா, தம்பியாக பழகுகிறோம் – டெய்சி சரண், திருச்சி சூர்யா கூட்டாக பேட்டி
சர்ச்சை ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் வைத்து பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, ‘சமீபத்தில் வெளியான ஆடியோ விஷயம், எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அவல் ஆகும். ஆனால், பாஜகவில் நாங்கள் சேர்ந்த நாள் முதல் அப்படி இல்லை. எங்களது பிரச்சினையை நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை. எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமூகமாக முடித்துவிட்டோம்.
எங்கள் தரப்பில் இருந்து ஆடியோ வெளியாகவில்லை. அது குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தணிக்கை செய்து வருகிறது. நாங்கள் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்பதால், குடும்பமாக பழகி வந்தோம். அக்கா, தம்பியாக பழகுகிறோம். இனியும் அதே நிலை தொடரும். ஆடியோ விவகாரம், சின்னதொரு அசாம்பாவிதம் தான். கே.டி. ராகவன் இன்று வரை கட்சி பணியை தொடரவில்லை” என்று கூறினர்.
இந்நிலையில் திருச்சி சூர்யா, “கட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன்” என்றார்.
நடிகர் ஆர்.கே. மனைவியை கட்டிப்போட்டு 200 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் நேபாளிகள் கைது
‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் ஆர்.கே. என்ற ராதாகிருஷ்ணன் (வயது 60); இவரது மனைவி ராஜீ (51). இவர்கள் சென்னை நந்தம்பாக்கம், டிபன்ஸ் ஆபிசர்ஸ் காலனி, 12ஆவது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார்கள். கடந்த 10ஆம் தேதி ராஜீ வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் அவரது கை, கால்களை கட்டிப்போட்டு, வாயை டேப் வைத்து அடைத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டி பீரோ சாவியை வாங்கி வீட்டில் இருந்த 200 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நேபாளிகள் என கண்டுபிடித்தனர். இதனிடையே, ஆர்.கே. வீட்டில் வேலை செய்து வந்த ரமேஷ் (38) என்பவரும் சம்பவம் நடைபெற்றது முதல் இல்லாமல் இருப்பதால் அவர் தான் திட்டமிட்டு இந்த இருவர் மூலமாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது. அதன் காரணமாக ரமேஷின் மைத்துனர் கணேஷ் ராகையா உள்ளிட்ட 20 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேபாள் சென்று கபுல் பகதூர் கத்தரி மற்றும் கரண் கத்தரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மின்கட்டணம் – ஆதார் அட்டை இணைக்காதவர்களுக்கு 2 நாள் அவகாசம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் கே.மலர்விழி, அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணைய வழியிலும், நேரடியாகவும் மின் கட்டணத்தை வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, மின் கட்டணம் செலுத்துவதற்கு, நவ. 24 முதல் நவ.30-ம் தேதி வரை இறுதிநாள் உள்ள தாழ்வழுத்தப் பிரிவு மின் நுகர்வோர் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும். உதாரணமாக, ஒரு நுகர்வோருக்கு நவ.28-ம் தேதி மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் என்றால், அவருக்கு நவ.30 வரை அவகாசம் வழங்க வேண்டும். அதேநேரம், ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்க வேண்டும். இது தொடர்பான தகவல்களை, மின் கட்டண வசூல் மையங்கள் வாயிலாக நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.