செர்பியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் வென்றாலும் சோகத்தில் இருக்கிறார்கள் பிரேசில் ரசிகர்கள். இப்போட்டியின்போது பிரேசிலின் நட்சத்திர வீரரான நெய்மர் காயமடைந்து இருப்பதே இதற்கு காரணம்.
செர்பியாவுடனான போட்டிக்கு நடுவில் நொண்டிக்கொண்டே வெளியேறினார் நெய்மர். அவரது காலில் காயம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காயம் சாதாரணமானதா? அடுத்த போட்டியில் நெய்மரால் ஆட முடியுமா என்பதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க பிரேசில் அணியின் மருத்துவர் மறுத்துள்ளார். இந்நிலையில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் ஆடியாக வேண்டுமே என்று கவலைப்படுகிறார்கள் பிரேசில் ரசிகர்கள்.
முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வேகமாக முன்னேறிவந்த பிரேசில், நடுவில் நெய்மருக்கு ஏற்பட்ட காயத்தால் அரை இறுதியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல்கணக்கில் மோசமாக தோற்றது. நெய்மரின் காயத்தால் பிரேசில் ரசிகர்கள் மனதில் அந்த காட்சிகள் மீண்டும் ஒருமுறை வந்து போகின்றன.
உலகக் கோப்பை கால்பந்தில் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு கால்பந்திலும் விருப்பம் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும். கிரிக்கெட் ஆட வருவதற்கு முன்பு தனது பள்ளி அணியின் கோல்கீப்பராக தோனி இருந்துள்ளார். ஐஎஸ்எல் லீக் கால்பந்து தொடரில் தனக்கென்று சொந்தமாக ஒரு அணியையும் வாங்கி நடத்தி வருகிறார் தோனி.
கால்பந்துக்கும் தோனிக்கும் இடையே இப்படி சில நெருக்கங்கள் இருக்க, கத்தார் உலகக் கோப்பையிலும் அவரது நிழல் படிகிறது. கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்க்கச் சென்ற இந்திய ரசிகர் ஒருவர், கூடவே தோனியின் பேனர் மற்றும் அவரது சிஎஸ்கே டிசர்ட் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளார்.
அவர் எடுத்துச் சென்றுள்ள போஸ்டரில் ‘forever thala dhoni’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைபார்த்து அங்குள்ள வெளிநாட்டு கால்பந்து ரசிகர்கள் சிலர், ‘யார் இவர்? இந்தியாவின் பிரபல கால்பந்து வீரரா?” என்று கேட்கிறார்களாம்.
சாதனை படைத்த ரொனால்டோ
கானா அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலம் 5 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்து உலகில் அடுத்த சில வருடங்களுக்காவது மற்ற வீரர்களால் முறியடிக்க முடியாத சாதனையாக இது இருக்கிறது.
இந்த சாதனையை படைத்தது பற்றி கருத்து தெரிவித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, “இது ஒரு சிறந்த தருணம். நான் கோல் அடித்து சாதனை படைத்தேன் என்பதைவிட எங்கள் அணி வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெறுவது மிக அவசியம். அந்த வெற்றி அணிக்கு கூடுதல் தன்னம்பிக்கையை அளிக்கும் அந்த அவகையில் இந்த போட்டி எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
மான்செஸ்டர் யுனைடட்டில் இருந்து விலகியதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. இப்போது என் முழு கவனமும் உலகக் கோப்பையில்தான் இருக்கிறது. தேசிய அணிக்காக ஆடுவதை நான் எப்போதும் முக்கியமான விஷயமாக கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.