தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதிரடியாக சில நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்.
முதல் நடவடிக்கை. பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வந்த நடிகை காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்திருக்கிறார். காயத்ரி ரகுராம் பாஜகவின் வெளிநாடு மற்றும் வெளிமாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக பணியாற்றி வந்தார்.
இரண்டாவது நடவடிக்கை. திமுகவின் முன்னணி தலைவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா சமீபத்தில் பாஜகவில் இணைந்திருந்தார். அவரை இனி கட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறக்கூடாது என்று தடை விதித்திருக்கிறார். சூர்யா சிவா தமிழக பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கிறார்.
மூன்றாவது நடவடிக்கை. பாஜகவுக்கு ஆதரவாக எல்லோரும் யூடியுப் சேனல்களுக்குப் பேசக் கூடாது. கட்சியின் அனுமதி பெற்ற பின்பே பேச வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த அதிரடி நடவடிக்கைளுக்கு காரணம் இதுதான்.
இன்று காலை சமூக ஊடகமான ட்விட்டரில் ஒரு ஆடியோ உரையாடல் வெளியானது.
அந்த ஆடியோவில் சூர்யா சிவாவும் பாஜகவின் சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்ஸி சரணும் பேசுகிறார்கள். அதில் டெய்சியை பொதுவெளியில் சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளால் கடுமையாக கத்துகிறார் சூர்யா.
இந்த ஆடியோ வெளியில் வந்ததும் சமூக ஊடகங்கள் முழுவதும் பரவிவிட்டது.
இது குறித்து அண்ணாமலையிடம் டெய்சி சரணும் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெய்சி சரணுக்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டில் ‘ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜால்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன்.. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கட்சித் தலைவரான அண்ணாமலையின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்கிறார் என்று அண்ணாமலையிடம் கட்சியினர் சொல்ல அவர் உடனடியாக காயத்ரி ரகுராமை கட்சியில் இதில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார்.
காயத்ரி ரகுராம்க்கும் அண்ணாமலைக்கும் ஆரம்பத்திலிருந்தே பிரச்சினைகள்தாம்.
தமிழ்நாட்டு பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதும் கட்சி நிர்வாகிகளை மாற்றினார். அப்போது காயத்ரி ரகுராமிடமிருந்து கலை கலாச்சாரப் பிரிவு தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அப்போதே கட்சிக்கு தான் செய்தவற்றை பட்டியலிட்டு தனக்கு பதவி கொடுக்கவில்லை என்று புலம்பினார்.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவருக்கு வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு பொறுப்பு கொடுக்கப்பட்டது.
ஆனாலும் அவருக்கும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் அவருடன் இருப்பவர்களுக்கு மோதல் தொடர்ந்துக் கொண்டு இருப்பதை பாஜகவினரே பேசுகிறார்கள்.
திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு உடனடியாக பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. அதனை நீண்ட கால பாஜகவினர் விரும்பவில்லை. எரிச்சலடைந்தார்கள்.
மாற்றுக் கட்சியிலிருந்து வருபவர்களுக்கு பதவிகள் கொடுத்தால்தான் நிறைய பேர் கட்சியில் வந்து சேர்வார்கள் என்பது தற்போதைய தமிழக பாஜகவின் வாதம். ஆனால் மாற்றுக் கட்சியில் வந்தவர்களால் பிரச்சினைதான் என்று ஒரிஜினல் பாஜகவினர் கூறுகிறார்கள்.
உதாரணமாக மதுரையில் ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் சென்ற போது அவர் மீது அங்கிருந்த பாஜகவினர் செருப்பு வீசினர். அது பெரிய சர்ச்சையானது.
அன்றிரவே பாஜகவின் மதுரை பொறுப்பாளராக இருந்த டாக்டர் சரவணன், அமைச்சர் பிடிஆரை சந்தித்து வருத்தம் தெரிவித்தார். அது பாஜகவுக்கு தர்மசங்கடமாக மாறியது. டாக்டர் சரவணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இப்போது சூர்யா சிவா ஆபாசமாக பேசி கட்சிக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார். அவர் மீது விசாரணை நடக்கும் என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் திமுக பேச்சாளர் ஒருவர் நடிகை குஷ்புவை தரக்குறைவாக பேசினார். அதற்கு பாஜகவின் கடும் கண்டனங்கள் தெரிவித்தார்கள். முதல்வர் ஸ்டாலினே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் கூறினார்கள்.
இன்று அவர்கள் கட்சி நிர்வாகிகளே ஆபாசமாக தரக்குறைவாக பேசியதற்கு என்ன நடவடிக்கை என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே ஒரு பொது நிகழ்ச்சியின் பாஜக பெண் பிரமுகரை ஒருவர் விரல்களால் சீண்டிய காட்சிகள் வீடியோக்களாக வைரலாக வலம் வந்தன.
இப்போது இந்த ஆபாச பேச்சு வைரலாகிக் கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் தாமரையை மலரச் செய்ய எடுக்கும் முயற்சிகள் இந்த ஆபாசங்களுக்கு இடையேதான் நடக்க வேண்டியிருக்கிறது.