தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரி பேராசிரியைகளும் தங்களது உடல் வடிவத்தை மறைக்கும் வகையில் ‘ஓவர் கோட்’ அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது பேராசிரியைகளிடையே கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஏன் ஓவர்கோட் அணியச் சொல்கிறது? பேராசிரியைகள் எதிர்ப்பது ஏன்?
தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் துணைச் செயலாளர் பி.தனசேகர், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர், கல்லூரி கல்வி இயக்குனர் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் அக்டோபர் 18-ஆம் தேதி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி தெரியும் விதமாகவும் தங்கள் உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் மேலங்கி (ஓவர்கோட்) அணியவும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், “பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும்” எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு பலர் எதிர்ப்பும் பலர் ஆதரவும் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய, பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி, “இது நல்ல முடிவு. ஏற்கனவே பல சுயநிதிக் கல்லூரிகள் தங்கள் பெண் ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதித்துள்ளன. பெண் ஆசிரியைகள் ஓவர் கோட் அணியும் போது வகுப்பறைகளில் வசதியாக இருப்பார்கள். பெண் ஊழியர்களிடையே சமத்துவம் இருக்கும். ஆண் ஊழியர்கள் பொதுவாக டை மற்றும் ஷூவுடன் முறையாக உடை அணிவதால் அவர்களுக்கு ஓவர் கோட் தேவைப்படாது’ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் டி.வீரமணி, ‘’பெண் ஊழியர்கள் சேலை அணிந்து வகுப்பு எடுக்கும்போது, அவர்கள் அசௌகரியமாக உணரலாம். சில மாணவர்கள் அவர்களை கிண்டல் செய்யலாம். இதைத் தவிர்க்க, ஓவர் கோட் அணிவது நல்லது” என்று கூறியுள்ளார்.
ஆனால், இது தொடர்பாக நாம் பேசிய பேராசிரியைகள் அனைவரும், இது பெண்களை அவமதிக்கும் செயல் என்றனர்.
“பெண் பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பை மறைக்க மேலங்கியை அணியச் சொல்வது அவர்களை அவமானப்படுத்தும் செயல். சேலையில் தெரியும் உடல் அமைப்புதான் உங்களுக்கு பிரச்சினை என்றால் சுடிதார் அணியச் சொல்லலாம். பேராசிரியர்களை மட்டுமல்லாமல் அவர்களிடம் படிக்கும் மாணவர்களையும் இது அவமதிக்கிறது.
நமது உயர் கல்வி அமைப்பில் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு அரசு கலைக் கல்லூரிகளில் ஏற்பட்ட உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பியதுடன் சரி, அதன்பின்னர் இதுவரைக்கும் கடந்த 10 ஆண்டுகளாக அரசு கலைக் கல்லூரிகளில் எந்தவிதமான பணி நியமனங்களும் நடைபெறாமல் உள்ளது. இதன் விளைவாக மாணவர்களின் கல்வியின் தரம் குறைந்துள்ளது.
தகுதி வாய்ந்த பேராசிரியர்களை நியமனம் செய்யாமல் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு அரசு கலைக் கல்லூரிகளில் பாடம் நடத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை புதிதாக 40-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளை திறந்து நடத்தி வரும் தமிழ்நாடு அரசு ஏன் இதுவரை உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது?
தேர்தலின் போது, அரசு கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என திமுக உறுதியளித்திருந்தது. ஆனால், இதுவரை அதனை செய்யவில்லை. இதனால், பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒருவர் இறந்தே போய்விட்டார். பேராசிரியர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்று உண்மையிலேயே அரசு நினைத்தால், முதலில் தற்காலிக பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
நமது அரசுக் கல்லூரிகள் பலவற்றில் தூய்மையான கழிவறை வசதி இல்லை. ஒரு சில இடங்களில் மாணவிகள் பக்கத்து வயல்வெளிகளுக்கு செல்ல வேண்டிய நிலையே உள்ளது.
மேலும், அரசு கல்லூரி வகுப்பறைகளில் ஃபேன் வசதி கிடையாது; ஃபேன் இருந்தால் பழுதடைந்து இருக்கும். சுற்றாது. இதில் நான்கு மணி நேரம் நின்றுகொண்டே பாடம் எடுக்கும் பேராசிரியர்கள் நிலை எப்படி இருக்கும். பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் நிலையோ இன்னும் மோசம், நாள் முழுவதும் நின்றுகொண்டே இருக்க வேண்டும்.
இதையெல்லாம் சரி செய்யாமல், ‘ஓவர் கோட்’ அணிவதால் எல்லாம் சரியாகிவிடும் என அரசு நினைப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. குஜராத்தில் சாலையோர குடிசைகளை மறைக்க பிரதமர் மோடி துணி கட்டியது போல்தான் இது.