No menu items!

விஜய் மார்கெட்டை தடுக்கிறதா தெலுங்கு சினிமா? – வாரிசு பிரச்சினை

விஜய் மார்கெட்டை தடுக்கிறதா தெலுங்கு சினிமா? – வாரிசு பிரச்சினை

ஓய்வில் இருந்த எரிமலையைப் போல அமைதியாக இருந்த தமிழ் சினிமா தற்போது லாவாவைக் கொப்பளிக்கும் நிலைக்கு மாறியிருக்கிறது.

ஒரே காரணம் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு டப் படமான ‘வாரிசுடு’ [Varisu / Vaarasudu] ரிலீஸூக்கு எதிராக டோலிவுட்டில் கிளம்பியிருக்கும் பிரச்சினை

உண்மையில் என்னதான் பிரச்சினை?

சமீபத்தில் தெலுங்கு ஃப்லிம் ப்ரொடியூஸர்ஸ் கவுன்சில் [The Telugu Film Producers Council] ஒரு கடிதத்தை வெளியிட்டது. அக்கடிதத்தின் மூலம் வருகிற சங்க்ராந்தி [தமிழ்நாட்டில் பொங்கல் விழா நாட்கள்] போன்ற முக்கியமான பண்டிகைகளில் தெலுங்கில் டப் செய்யப்பட்டிருக்கும் படங்களை திரையிட வேண்டாம் என்று தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இந்த கடிதம், விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் தெலுங்கு டப் ஆக வெளியாக இருக்கும் ‘வாரிசுடு’ படத்தின் வெளியீட்டுக்கு முட்டுக்கட்டைப் போடும் ஒரு முயற்சி என தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது.

தெலுங்குப் படங்கள், டப்பிங் படங்கள் தமிழ்நாட்டில் வெளியிட எந்தவித தடைகளும் விதிக்கப்படுவது இல்லை. ஆனால் டோலிவுட்டில் மட்டும் ஏன் இப்படி பாரபட்சம் பார்க்கிறார்கள் என தமிழ் இயக்குநர்களிடையே, நடிகர்களிடையே ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

சீமான், லிங்குசாமி, பேரரசு என ஒவ்வொரு இயக்குநர்களாக இப்பிரச்சினையில் தங்களது கருத்துகளை பதிவு செய்ய, மறுபக்கம் தெலுங்கு ஃப்லிம் ப்ரொடியூஸர்ஸ் கவுன்சில் தமிழ்ப் படங்களை வெளியிட நாங்கள் தடை விதிக்கவில்லை என்று தெளிவுப்படுத்தி இருக்கிறது.

எப்படி பிரச்சினை ஆரம்பித்தது?

தெலுங்குப் படங்களான ‘வால்டர் வீரய்யா’, ‘வீரசிம்ம ரெட்டி’ சங்க்ராந்தியில் ரிலீஸூக்கு திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் இப்படங்களுக்கு தெலுங்கானாவில் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. இப்படியொரு சூழலில் தில் ராஜூவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசுடு’ படத்தை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் ‘வால்டர் வீரய்யா’, ‘வீரசிம்ம ரெட்டி’ படங்களை அவர்களே முதல் முறையாக விநியோகம் செய்யவும் அந்நிறுவனமே திட்டமிட்டு இருக்கிறது. திடீரென ‘வாரிசுடு’வுக்கு திரையரங்குகள் அதிகம் ஒதுக்கப்பட்டு விட, திகைத்து போன மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு ஃப்லிம் ப்ரொடியூஸர்ஸ் கவுன்சிலை அணுகியது. இங்குதான் இப்படிதான் பிரச்சினை கிளம்பியது.

’வாரிசுடு’வை சங்க்ராந்திக்கு வெளியிட என்ன காரணம்?

தெலுங்கு சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் தில் ராஜூவும் ஒருவர். வெற்றிகரமான தயாரிப்பாளர். சக்தி வாய்ந்த விநியோகஸ்தராகவும் இருக்கிறார்.

முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கும் தில் ராஜூவின் ‘வாரிசுடு’ / ’வாரிசு’ ரிலீஸூக்கு முன்பாகவே வருமானத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதனால் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியிட தில் ராஜூ ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார்.

ஜனவரி 12, 2023-ல் வெளியிடும் வகையில், பான் – இந்தியா படமாக மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வாரிசுவை தில் ராஜூ எடுத்திருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் ஒடிடி உரிமையை பிரபல அமேசான் ப்ரைம் வாங்கி இருப்பதாகவும் தெரிகிறது. வாரிசு படத்தின் டிஜிட்டல் உரிமையை 60 கோடிக்கு வாங்கியிருப்பதாக பேச்சு அடிப்படுகிறது.

அதேபோல் இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி 50 கோடிக்கு வாங்கியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இந்த இரண்டு வியாபாரங்களையும் தவிர்த்து, வாரிசு படத்தின் ஹிந்தி மற்றும் ஒவர்சீஸ் ரைட்ஸ் 70 கோடிக்கு விற்று விட்டதாகவும் தெரிகிறது.

மற்றொரு பிஸினெஸ் களமாக இருக்கும் ஆடியோ ரைட்ஸ் 10 கோடிக்கு போயிருக்கிறதாம்.

இவையெல்லாவற்றையும் தாண்டி திரையரங்குகளில் வெளியிடும் உரிமை 200 கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாகவும் தகவல்கள் அடிப்படுகின்றன.

இப்படியெல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் சுமார் 400 கோடி வியாபாரத்தை ‘வாரிசு’ ரிலீஸூக்கு முன்பே கச்சிதமாக செய்து முடித்திருக்கிறது.

இதில் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு சுமார் 100 கோடியாவது லாபம் இருக்கும் என்கிறது கோலிவுட் பட்சி.

இந்த பிஸினெஸ் தகவல்களில் அடிப்படும் தொகை எல்லாம் கிசுகிசுக்களாகவே இருந்தாலும், நிச்சயம் இதில் உண்மை கொஞ்சமாவது இருக்கும் என்பது வியாபாரப்புள்ளிகளுக்கு தெரியும்.

’வாரிசு’, ‘வாரிசுடு’ என இரண்டையும் ஒரே நேரத்தில் வெளியிட்டால் மட்டுமே இந்த வியாபாரத்தை தக்கவைக்க முடியும். ஏனென்றால் ‘வாரிசு’ இங்கே ரிலீஸ் ஆகி ஏதேனும் சொதப்பல்கள் இருந்தால், அது பின்னர் ரிலீஸாகும் ’வாரிசுடு’வை பாதித்துவிடும். வியாபார கணக்குகள் மாறிவிடும். இதனால் இரண்டுப் படங்களையும் ஒரே நேரத்தில் வெளியிட தில் ராஜூ மும்முரமாக இருக்கிறார்.

கடைசி நிமிடத்தில் இந்தப் பிரச்சினையை தில் ராஜூ எப்படியாவது முறியடித்து விடுவார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...