அஜித்தும் விஜய்யும் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் அதற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ, அதைவிட பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது மெஸ்ஸியும், ரொனால்டோவும் இணைந்து எடுத்திருக்கும் புகைப்படம். உலகக் கோப்பை கால்பந்து தொடங்கிய நாளில் சமூக வலைதளங்களில் வெளியான இந்த புகைப்படம், ஒரே நாளில் 2.4 கோடி லைக்ஸ்களை அள்ளியுள்ளது.
louis vuitton நிறுவனத்தின் பிரீப்கேஸுக்காக எடுக்கப்பட்ட இந்த விளம்பரப் படத்தில் இருவரும் கால்பந்துக்கு பதிலாக செஸ் ஆடுகிறார்கள். அந்த நிறுவனத்தின் பிரீப்கேஸ் மீது செஸ் போர்ட் வைக்கப்பட்டிருக்க, இருவரும் செஸ் காயினை நகர்த்துவதற்காக தீவிரமாக யோசிப்பதுபோல் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது போட்டி மைதானங்கள், விருது விழாக்களில் மட்டுமே பரஸ்பரம் சந்தித்துக்கொள்ளும் இந்த உச்ச நட்சத்திரங்கள் முதல் முறையாக ஒரு விளம்பரத்துக்கு இணைந்து போஸ் கொடுத்துள்ளதுதான் இப்படம் லைக்ஸ்களை அள்ளியதற்கு காரணம்.
இது ஒருபுறம் இருக்க, உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் தங்கள் பிரிய நாயகர்கள் இருவரும் இதேபோல் இரு புறங்களிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களின் ரசிகர்கள்.
சரக்கு எங்கப்பா? – கொந்தளித்த ரசிகர்கள்
கால்பந்தில் தங்கள் அணி ஜெயித்தால் சரக்கடித்து கொண்டாடுவது சில ரசிகர்களின் வழக்கம். இப்படி கொண்டாடும் ரசிகர்களுக்கு இந்த உலகக் கோப்பை கசப்பாகவே இருக்கிறது. போட்டி நடக்கும் மைதானத்திலும், அதைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட தூர இடைவெளிக்குள்ளும் மதுபான வகைகளுக்கு அனுமதி இல்லை என்று பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறது கத்தார் அரசு. கால்பந்து பிரியர்கள் பலருக்கு இது கசக்கிறது.
ஞாயிறன்று நடந்த முதல் போட்டியில் கத்தாரை தங்கள் அணி வென்றதும் சரக்கு கேட்டு போராட்டத்தில் குடித்துள்ளனர் ஈக்வேடார் நாட்டு ரசிகர்கள். போட்டி முடியும் நேரத்தில், ‘We want beer’ என்று அவர்கள் போர்க்குரல் எழுப்ப, கஷ்டப்பட்டு அவர்களை அடக்கியிருக்கிறார்கள் பாதுகாப்பு படையினர். ஓரளவுக்கு சாந்தமான ஈகுவேடார் ரசிகர்களையே சமாளிக்க முடியலையே இங்கிலந்து, பிரான்ஸ் நாட்டு ரசிகர்களையெல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற டென்ஷனில் இருக்கிறார்களாம் அவர்கள்,
கத்தாரின் விருந்தாளி – எரிச்சலில் இந்தியா
வெறுப்பு பேச்சு மற்றும் பொருளாதார குற்றங்களுக்காக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி ஜாகிர் நாயக். இந்த குற்றங்களுக்காக அவரது அமைப்பையும் இந்திய அரசு 2016-ம் ஆண்டு தடை செய்தது. இதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டுமுதல் மலேசியாவில் தங்கியிருக்கிறார் ஜாகிர் நாயக்.
இந்த சூழலில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது இஸ்லாமிய மதத்தை பரப்பும் பிரச்சாரத்தில் ஈடுபட ஜாகிர் நாயக்கை அழைப்பு வித்துள்ளது அந்நாட்டு அரசு. தற்போது கத்தார் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜாகிர் நாயக்கும் இந்த அழைப்பை ஏற்று அங்கு இஸ்லாமிய மதத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஜாகிர் நாயக்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் கத்தார் அரசு மீது எரிச்சலில் இருக்கிறது இந்தியா.