No menu items!

Elon Musk Twitter – ஓடுமா? மூடுமா?

Elon Musk Twitter – ஓடுமா? மூடுமா?

எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து ட்விட்டர் குறித்த செய்திகள் இணையத்தை பரபரப்பிலேயே வைத்திருக்கின்றன.

RIPTwitter என்று இப்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. ட்விட்டர் காலி. ட்விட்டர் இறந்து போய்விட்டது. ட்விட்டரை இழுத்து மூடப் போகிறார் எலன் மஸ்க். இப்படி செய்திகள் காற்றில் பறந்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே ஆயிரக் கணக்கில் ஊழியர்கள் ட்விட்டிரிலிருந்து வெளியேறுகிறார்கள். வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன நடக்கிறது ட்விட்டரில்?

எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதும் செய்த முதல் காரியம், அதன் தலைமை அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சார்ந்த பராக் அகர்வாலை பதவி நீக்கம் செய்தது. அடுத்து சட்டம் மற்றும் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்த விஜயா காடே என்ற பெண்மணியை நீக்கினார்.

ட்விட்டரின் கொள்கை சார்ந்த விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருந்த விஜயா காடே நீக்கப்பட்டிருப்பதால் ட்விட்டரின் கொள்கைகள் மாறப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்தது.

’ட்விட்டர் இப்போது அறிவுள்ளவர்களின் கைகளுக்கு சென்றிருக்கிறது ‘ என்று எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கியிருப்பதைக் குறித்து டோனல்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்தார். ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவர் வன்முறைகளை தூண்டும் செய்திகளை பதிவிடுகிறார் என்று ட்விட்டரிலிருந்து அவர் நீக்கப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பதிவை நீக்குவதோ அல்லது பதிவரை நீக்குவதோ போன்ற முடிவுகளை உடனடியாக எடுக்கப்படாது; ஒரு நடுநிலையாளர் குழு அமைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களுக்கு பிறகே முடிவெடுக்கப்படும் என்று எலன் மஸ்க் கூறினார்.

அடுத்து ட்விட்டரில் இருக்கும் நீல நிற டிக் குறிக்கு கட்டணம் என்று அறிவித்தார்.

ட்விட்டர் அதிரடிகளுக்கு தயாராகிவிட்டது என்பது அப்போதே தெரிந்துவிட்டது.

இந்த பரபரப்புகளைத் தொடர்ந்து ஐம்பது சதவீத ஊழியர்களை நீக்கினார். சுமார் 3700 ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள். நீக்கியதைவிட நீக்கப்பட்ட விதம் கொடூரமாக இருந்தது. அலுவலகத்தில் இருந்தால் வீட்டுக்குப் போங்கள், அலுவலகத்துக்கு வந்துக் கொண்டிருந்தால் அப்படியே வீட்டுக்குத் திரும்பிப் போங்கள். உங்களுக்கு வேலை இல்லை என்றது ட்விட்டரில் இருந்து வந்த மெயில்.

தினமும் குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், விடுமுறைகள் கிடையாது, வாரத்தில் ஏழு நாட்கள் பணி செய்ய வேண்டும் என்று ட்விட்டர் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

ட்விட்டர் ஊழியர்களுக்கு கடந்த வாரம் மற்றொரு அதிர்ச்சி கிடைத்தது. ஊழியர்கள் அனைவரும் நீண்ட மணி நேரம் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். உறுதி மொழி எடுத்துக்கொள்ள விரும்பாதவர்கள் வேலையை விட்டுச் செல்லலாம் என்று ஒரு செய்தி ஊழியர்களுக்கு வந்தது.

இந்த உத்தரவைப் பார்த்ததும் ஊழியர்களுக்கு அதிர்ச்சி, உடனே சுமார் 1200 ஊழியர்கள் தங்கள் ராஜினாமா கடித்தத்தை கொடுத்துவிட்டார்கள். எதிர் நடவடிக்கையாக எலன் மஸ்க், ட்விட்டர் அலுவலகங்களை சில நாட்களுக்கு மூட உத்தரவிட்டார்.

இந்தப் பின்னணியில்தான் #RIPTwitter Trend ஆனது.

இன்று எலன் மஸ்க் ட்விட்டர் பொறியாளர்களுக்கு ஒரு SOS அனுப்பியிருக்கிறார். உடனே எங்கிருந்தாலும் சான்ஃப்ரான்சிஸ்கோவிலிருக்கும் ட்விட்டர் தலைமையகத்தின் 10 மாடிக்கு வந்து, அவசரக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். வரும்போது கடந்த ஆறு மாதங்களில் அவர்கள் எழுதிய மென்பொருள் குறிப்புகளையும் எடுத்து வரச் சொல்லியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பது இனிதான் தெரியும்.

இப்போது ட்விட்டரில் 2000 ஊழியர்கள் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ட்விட்டர் போன்ற உலகம் முழுதும் பரந்துக் கிடக்கும் நிறுவனத்துக்கு 2000 ஊழியர்கள் என்பது மிகக் குறைவு. அப்படியானால் ட்விட்டர் மூடப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

எலன் மஸ்க் எப்போதுமே அதிரடியாக செயல்படுபவர். அதனால் இந்த அதிரடிகளையெல்லாம் சமாளித்து ட்விட்டரை மீண்டும் வேறு வழியில் திசை திருப்பிவிட்டு விடுவார் என்று தொழில் நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்தத் திறமை இருப்பதால்தான் அவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கிறார். மிகப் பெரிய நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்று காரணம் கூறுகிறார்கள்.

மார்ச் 21 2006ல் ட்விட்டரைத் துவக்கிய ஜேக் டோர்சே முதல் ட்விட்டை ட்விட்டரில் பதிவு செய்தார். கடந்த 16 வருடங்களில் ட்விட்டர் பல மடங்கு வளர்ந்துவிட்டது. இப்போது உலகெங்கும் சுமார் 24 கோடி பேர் ட்விட்டர் சமூக ஊடகத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் எதிர்காலம் இப்போது எலன் மஸ்க் கையில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...