’இந்தியன் 2’ பட வேலைகள் கொஞ்சம் சுறுசுறுப்பாக நடந்ததால் ஷங்கர் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு சைலண்ட்டாக திரும்பி விட்டார். இதனால் அவர் ஏற்கனவே இயக்கி கொண்டிருந்த தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் அப்படியே தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது ’Indian 2’-ன் இந்த ஷூட்டிங் ஷெட்யூல் முடிந்திருப்பதால், மீண்டும் தெலுங்குப் படம் பக்கம் கவனம் செலுத்த இருக்கிறார்.
ஷங்கரின் முதல் நேரடி தெலுங்குப் படத்தில் ராம் சரண் [Ram Charan] நடிக்கிறார். இவருக்கு ஜோடி கியாரா அத்வானி [Kiara Advani].
இந்த ஜோடியை வைத்து ஏற்கனவே ஒரு டூயட்டை எடுத்திருக்கிறார் ஷங்கர். இப்பாடலின் பட்ஜெட் மட்டும் 8 கோடி என்கிறார்கள். இதனால் கியாரா அத்வானி ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார். தன்னுடைய கமர்ஷியல் மார்க்கெட்டுக்கு இந்த ஒரு பாடல் போதும் என்று ஷங்கர் புகழ் பாடுகிறாராம்.
அடுத்து க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை எடுத்து முடித்திருக்கிறார்கள். இதன் விஷூவல் எஃபெக்ட்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் பட்ஜெட் ஜஸ்ட் 20 கோடிதான் என கண்சிமிட்டுக்கிறார்கள்.
இதைக்கேட்டு ஷாக் ஆகிவிட வேண்டாம். இனிதான் இருக்கிறது ஒரு காஸ்ட்லி கலக்கல் சமாச்சாரம். அதாவது அந்தப் பாடலை தவிர்த்து படத்தில் மற்றுமொரு டூயட்டும் இருக்கிறதாம். அதைதான் இப்போது ஷூட்டிங் செய்ய ஷங்கர் திட்டமிட்டு வருகிறார்.
இப்பாடலின் ஷூட்டிங்கை நியூசிலாந்தில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பாடலின் பட்ஜெட் 15 கோடிதானாம். இப்பாடலை நவம்பர் 20-ம் தேதியில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி வரை இரண்டு வாரங்கள் ஷூட் செய்கிறார்களாம்.
இதுவரை பார்த்திராத வகையில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸூடன் இந்தப் பாடல் ஒரு விஷூவல் விருந்தாக இருக்கும் என்கிறது ஷங்கர் வட்டாரம்.
கவலையில் விஜய், தனுஷ் ரசிகர்கள்
படங்கள் ஹிட்டாகும் போதே கோலிவுட்டை அடுத்து பக்கத்தில் இருக்கும் மார்க்கெட்களில் ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டுமென்பது பொதுவாக எல்லா கமர்ஷியல் ஹீரோக்களுக்கும் இருக்கும் ஆசைதான்.
முன்பெல்லாம் தமிழில் நன்றாக ஓடிய படங்களை மட்டும் டப் செய்து மற்ற மொழிகளில் வெளியிடுவார்கள். அந்த வகையில் தமிழ்ப் படங்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கும். மலையாளத்தில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஆரம்பத்தில் சூர்யாவுக்கு வரவேற்பு இருந்தது. அடுத்து இப்போது விஜய்க்கு என ஒரு தனி மார்க்கெட் இருக்கிறது.
கார்த்தி, விஜய் ஆண்டனி, விஷாலுக்கும் தெலுங்கில் இப்போது வரவேற்பு இருக்கிறது.
இந்தப் பட்டியலில் இடம்பிடிப்பதற்குதான் இப்போது தனுஷ், சிவகார்த்திகேயன் மிகவும் கவனத்துடன் இருக்கிறார்கள்.
இதன் வெளிப்பாடே தெலுங்கு இயக்குநர்களின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களாக வெளியிடும் யுக்தியில் இவர்கள் இறங்கியிருப்பது.
சிவகார்த்திகேயன் அப்படி களத்தில் இறங்கிய படம் ‘ப்ரின்ஸ்’ [Prince]. பாக்ஸ் ஆபிஸில் கிங் ஆக இருக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ரிட்டர்ன்ஸ் இல்லாத ப்ரின்ஸ் ஆக போய்விட்டது.
இதற்கு காரணம் படம் முழுக்க தமிழ் நடிகர் நடிகைகளை நடிக்க வைத்துவிட்டு, தெலுங்குப் படத்தைப்போல் தெலுங்கு இயக்குநர் ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது அது எடுப்படாமல் போய்விட்டது.
இதே பிரச்சினைதான் இப்போது விஜயின் ‘வாரிசு’ [Varisu], தனுஷின் ‘வாத்தி’ [Vathi] படத்திற்கும் நடந்திருக்கிறது. இதனால் இந்த இரண்டுப் படங்களும் ஆந்திராவின் கோங்குரா சட்னி மாதிரி இருக்குமா அல்லது நம்மூர் சாம்பார் போல் இருக்குமா அல்லது இந்த இரண்டு கலந்த ஒரு டைப்பான டிஷ் ஆக இருக்குமா என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாபிக்.
விக்ரம் TRP கலாட்டா
கமல் [Kamal] நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த ‘விக்ரம்’ [Vikram] கமல் படங்களுக்கு இதுவரையில்லாத வசூலை அள்ளிக்கொடுத்தது. சினிமாவிலும் ஃபெயிலியர் அரசியலிலும் தோல்வி என துவண்டு கிடந்த கமலுக்கு ஒரு க்ளூக்கோஸ் ஏற்றியது போல் தெம்பைக் கொடுத்தது.
இப்படத்தைப் பார்க்க திரையரங்குகளுக்கு அரசு பொருட்காட்சிக்கு குவியும் மக்களைப் போலவே ரசிகர்கள் வந்து டிக்கெட் கவுண்டர்களை ஆக்ரமித்து இருந்தார்கள்.
அடுத்து இப்படம் முதல் முறையாக சின்னதிரையிலும் ஒளிபரப்பானது. அப்போது விக்ரம் படத்திற்கு கிடைத்த TRP 4.42.
விக்ரம் படத்தின் மலையாள டப் சமீபத்தில் முதல் முறையாக ஒளிபரப்பானது. இதற்கு கிடைத்திருக்கும் டிஆர்பி கமலுக்கே அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
தமிழில் பெரும் வரவேற்பை பெற்றாலும் டிஆர்பி மிரட்டலாக இல்லை. ஆனால் மலையாளத்தில் தமிழை விட ஏறக்குறைய இரு மடங்கு டிஆர்பி-யை பெற்றிருக்கிறது. மலையாள டப்பிற்கு 8.24 TRP கிடைத்திருக்கிறது.
கமலின் படத்திற்கு கிடைத்திருக்கும் இந்த டிஆர்பி. மலையாளத்தில் ஹிட்டான பெரிய தலைகளின் படங்களுக்கு கிடைத்த டிஆர்பி-யை விட அதிகம். அதேபோல் மலையாளப் படங்களுக்கான TOP 10 பட்டியலில் கமலின் விக்ரமும் இடம்பிடித்திருக்கிறது.