Enola Holmes 2 – ஆங்கிலம் (நெட்பிளிக்ஸ்)
1800-களில் பிரிட்டனில் நடப்பது போன்ற கதை. ஆக்ஷன் கலந்த அட்வென்சர் திரைப்படம்தான் எலோனா ஹோம்ஸ். பிரபல துப்பறியும் நிபுணரான ஷெர்லக் ஹோம்ஸின் தங்கைதான் எனோலா ஹோம்ஸ். அம்மாவுடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார் எனோலா. ஒருநாள் திடீரென்று அம்மா காணாமல் போய்விடுகிறார். அம்மாவைத் தேடிச் செல்லும் அவரது சாகசப் பயணம்தான் படத்தின் கதை. தீப்பெட்டித் தொழிற்சாலையின் பின்னணியில் நடக்கும் இந்தக் கதை கொஞ்சம் மெதுவாகதான் செல்லும். வீக் எண்டில் குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது எனோலா ஹோம்ஸ்.
Sardar – தமிழ் (ஆஹா)
காவல்துறை ஆய்வாளர் விஜய பிரகாஷ், ஒரு தேசத் துரோக வழக்கை விசாரிக்கிறார். அதில் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு பெண் மூலம், தண்ணீர் மாஃபியா பற்றியும், நாட்டுக்காக உழைக்கும் ஒரு உளவாளி பற்றியும் அவருக்கு தகவல் தெரிகிறது. அந்த உளவாளி யார், அவருக்கும் காவல்துறை ஆய்வாளர் விஜய பிரகாஷுக்கும் என்ன சம்பந்தம் என்பதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதாக படத்தின் கதை அமைகிறது.
காவல்துறை ஆய்வாளர், உளவாளி ஆகிய 2 வேடங்களில் நடித்துள்ளார் கார்த்தி. ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன்தான் இப்படத்தின் இயக்குநர். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கான வீக் எண்ட் ட்ரீட்டாக இப்படம் அமையும்.
Five Six Seven Eight – தமிழ் (ஜீ5)
முழுக்க முழுக்க நடனத்தை மையப்படுத்தி இருக்கும் வெப் சீரிஸ்தான் ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’. கீழ்த்தட்டு வகுப்பை சேர்ந்த நடன குழுவுக்கும், மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த நடன குழுவுக்கும் இடையே நடைபெறும் வளரிளம் பருவத்தினருக்கான சர்வதேச போட்டியை மையப்படுத்தி இந்த தொடரின் கதை நகர்கிறது.
பத்து அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த வலைத்தள தொடர் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
Rorschach – மலையாளம் (டிஸ்னி ஹாட்ஸ்டார்)
துபாயில் நடக்கும் ஒரு கொள்ளை சம்பவத்தில் மம்முட்டியின் மனைவி கொல்லப்படுகிறார். அந்த கொள்ளையில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை மம்முட்டி அப்போதே கொன்றுவிடுகிறார். மற்றொருவர் கேரளாவுக்கு தப்பி வருகிறார். அவரைத் தேடி மம்முட்டி ஊருக்கு வருகிறார். அதற்குள் அந்த கொள்ளையன் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். அவரை ஊர் மக்கள் நல்லவனாக கொண்டாடுகிறார்கள். அந்த கொள்ளையனின் ஆவியிடம் சவால் விட்டு அவனுக்கு இருந்த நற்பெயரையும், அவனது குடும்பத்தையும் மம்முட்டி அழிப்பதுதான் ’ரோஷாக்’ படத்தின் கதை.
மனைவியை இழந்து மனநலம் சற்று பாதிக்கப்பட்ட நபரின் கதாபாத்திரத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார். த்ரில்லர் பிளஸ் பேய்ப் படமான இதை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம். இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Ambulance – ஆங்கிலம் (ப்ரைம்)
நீங்கள் அதிரடி ஆக்ஷன் பிரியரா? உங்களுக்கான படம் இது. சகோதரர்கள் இருவர். ஒரு பேங்க் கொள்ளை. தப்பிக்க ஒரு ஆம்புலன்ஸ். இதுதான் கதை. பாசம், நட்பு, கடமை என கிட்டத்தட்ட தமிழ் மசாலாக்கள் அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள், ஹாலிவுட் ஸ்டைலில்.
பேங்க் கொள்ளையில் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. ஆம்புலன்சில் தப்பிக்கும்போது வேகம் எடுக்கிறது. ஆம்புலன்ஸ்க்குள் அடிப்பட்ட போலீஸ்காரனும் அவனுக்கு சிகிச்சை அளிக்க நர்சும் இருப்பது திருப்பங்களுக்கு காரணமாக அமைகிறது.
போலீஸ் கார்கள் ஆம்புலன்ஸைத் துரத்தும் நீளளளளளளளமான காட்சிகள் அமெரிக்க நகரங்களையும் சாலைகளையும் சுற்றிக் காட்டுகின்றன. இறுதியில் சில எதிர்பாரா ட்விஸ்டுகளுடன் படம் முடிகிறது.
சனிக்கிழமை மாலை அவரவர் வசதிக்கு ஏற்ப கையில் எதையாவது ஏந்திக் கொண்டு பார்ப்பதற்கு ஏற்ற படம்.